அரசியல்

“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் – கழக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு பேரழுச்சியுடன் நடைபெற்றது.

“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29-12-2025) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் – கழக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு:

கருப்பு – சிவப்புக் கடல்போன்று இலட்சக்கணக்கான பெண்கள், தாய்மார்கள், இப்படி ஒரே இடத்தில் கூடுயதாக வரலாறே இருக்காது. உங்களைப் பார்க்கும்போதே, பவர்ஃபுல்லாக இருக்கிறது! பவர்ஃபுல்லாக மட்டுமல்ல, “வுமன் பவரால் தி.மு.க மீண்டும், பவருக்கு வரப்போவதும், உறுதியாகி இருக்கிறது”. உறுதியாகிவிட்டதுதானே? மகிழ்ச்சி!

இப்படியொரு பவர்ஃபுல் மாநாட்டுக்கான பணிகளை எல்லாம் முழுமையாகத் தன் தோளில் சுமந்து, மிகச் சிறப்பாக - வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியிருக்கும் ஆற்றல்மிக்க செயல்வீரர் என்னுடைய அன்புச் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்!

எந்தக் களத்தில் இறங்கினாலும், அவருக்குக் கொடுத்த பணியை பிரம்மாண்டமாகச் செய்யக்கூடியவர் செந்தில் பாலாஜி அவர்கள்! மேற்கு மண்டல மாவட்டங்களில் இருக்கும் மக்களின், அன்பும் – ஆதரவும் – அவருடைய திறமையும் ஒன்று சேர்ந்து, நம்முடைய எதிர்பார்ப்புகளை மட்டுமல்ல; அதற்கும் மேல், நிறைவேற்றிக் காட்டக்கூடியவர்!

அதேபோன்று, இந்த மாநாட்டுக்குத் தலைமையேற்றிருக்கும் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்றக் குழுத் தலைவர் - என் அன்புத்தங்கை கனிமொழி அவர்களுக்கும், அவருக்குத் துணையாக உடன் நிற்கும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்!

கனிமொழியைப் பொறுத்தவரை, கவிஞர் - பத்திரிகையாளர் - மரபுக் கலைகளில் ஆர்வம் கொண்டவர் என்று பன்முகத் திறமை கொண்டவர். எப்போதுமே, புன்னகை மாறாத முகத்துடன் இருப்பார். இப்போதுகூட பாருங்கள். அதேவேளையில், நாடாளுமன்றத்தில் உரிமைக் குரல் எழுப்பும்போது, கர்ஜனை மொழியாகவும் சீறுவார்!

அதுமட்டுமல்ல, தேர்தல் என்று வந்துவிட்டாலே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் ’ஹீரோ’. அந்த ‘ஹீரோ’வையே தயாரிக்கும் பொறுப்பை இப்போது அவர் ஏற்றிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அந்தப் பணியை அவர் செய்தபோது, முழுமையான வெற்றி பெற்றோம்! வரும் சட்டமன்றத் தேர்தலிலும், மாபெரும் வெற்றியைப் பெறப்போகிறோம். அது உறுதி!

“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!

நிறைய பேர், “இப்போது எதற்கு மகளிர் மாநாடு?” என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, பெண்களின் முன்னேற்றமே, நாட்டின் முன்னேற்றம்! பெண்களின் வெற்றியே, சமூகத்தின் வெற்றி! அடிமைத்தனத்தை உடைத்து, பகுத்தறிவுச் சுடரை கையில் ஏந்தி, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் – கட்டியெழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது.

நம்முடைய அந்த மாபெரும் மரபைப் பற்றி நம்மைக் கேள்வி கேட்கிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1916-இல் நீதிக்கட்சி தொடங்கியபோது முதல் கூட்டத்திலேயே ஒரு பெண் கலந்துகொண்டார். அவர்தான் அலமேலு மங்கைத் தாயாரம்மாள்! அதேபோன்று, இன்றைக்கு நாம் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் சுயமரியாதை இயக்கத்தை 1925-ஆம் ஆண்டு தந்தை பெரியார் தொடங்கினார்.

அப்போதும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்ற பல பெண்கள் அதில் பங்கெடுத்தார்கள். 1949-இல் தி.மு.க. தொடங்கியபோது சத்தியவாணி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். 1967-இல் அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். இந்த வரலாற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், தொடக்கத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள்.

இந்த மகளிரணியின் தொடக்கம் எது தெரியுமா? “பெண்களுக்கான ஒரு தனி அமைப்பு வேண்டும்” என்று பேரறிஞர் அண்ணா, 1956-ஆம் ஆண்டு கழகத்தின் மகளிர் மன்றத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மகளிர் மன்றத்தை, மகளிர் அணியாக விரிவாக்கி வலுவான கட்டமைப்பை உருவாக்கினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்! மிகப் பெரிய மாநாடுகளையும் நம்முடைய மகளிரணி நடத்தியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் நீங்கள் அனைவரும்! நிறைய இளம்பெண்கள் இங்கு வந்திருப்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது!

திராவிட இயக்கத்தில் பெண்கள் பங்களித்த வரலாற்றைத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல, திராவிட இயக்கத்தால் பெண்கள் அடைந்த வளர்ச்சியை உங்கள் வயதில் இருக்கும் மற்ற பெண்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்!

“நூறாண்டுக்கு முன்பே நம்முடைய முன்னோர்கள் அவ்வளவு செய்திருக்கிறார்களே! இப்போது நாம் அதையும் தாண்டிப் பணியாற்ற வேண்டும்” என்று உங்களுக்குள் ஒரு உத்வேகம் பிறக்க வேண்டும்!

எந்த நிலைமையில் இருந்து நாம் முன்னேறி வந்திருக்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள்; அடுப்படியைத் தாண்டி போகக்கூடாது என்று நிறுத்தி வைத்தார்கள்; ஆண்களைச் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தப்பட்டார்கள்! அதையெல்லாம் உடைத்து எறிந்தது யார்? நம்முடைய திராவிட இயக்கம்தான்!

அதை மட்டுமா செய்தோம்! தேவதாசி முறையை ஒழித்தோம்! சட்டம் போட்டுப் பெண்களுக்கும் சொத்துரிமையை பெற்றுத் தந்தோம்! ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று கேள்வி கேட்டு, பெண்களின் கல்வியுரிமை, சம உரிமைக்குப் போராடி இருக்கிறோம். அதனால்தான் இன்றைக்கு இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறோம்!

தமிழ்நாட்டைப் பாருங்கள், நாட்டில் இருக்கும் மற்ற சில மாநிலங்களையும் பாருங்கள்... கடந்த வாரம் கூட, ராஜஸ்தானில் “பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது” என்று சில குழுக்கள் தடை போட்ட செய்தி வந்தது! ஆனால், நம்முடைய ஊரில் ஆப்பிள் போன்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அதை அசெம்பிள் செய்வதே பெண்கள்தான்!

திராவிட இயக்கமும் - நம்முடைய தலைவர்களும் செய்த புரட்சியின் விளைவுதான், பெண் விடுதலை! மகளிர் முன்னேற்றம்! இன்றைக்கு அனைத்துக் கட்சிகளிலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கிறது. அதற்கும் நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம்! ஆனால், வளர்ந்த நாடுகள் உட்பட எங்கேயும் - பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் இன்னும் கிடைக்கவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றினார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நாம் ஆட்சிக்கு வந்து நடத்தினோம். தமிழ்நாட்டில் இப்போது பெண் மேயர்கள்தான் அதிகம்.

“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!

உள்ளாட்சியில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அதிகாரம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் கிடைக்க வேண்டும்! அதுதான் தி.மு.க.வின் இலட்சியம்! அதற்காகத்தான் 33 விழுக்காட்டுக்காகத் தொடர்ந்து போராடுகிறோம்! 2017-லேயே தலைநகர் டெல்லியில் இதற்காக நம்முடைய மகளிரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தங்கை கனிமொழி இதற்காக அழுத்தமாகக் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டின் குரலாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் குரலாக நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசினார்கள்...

தேவையே இல்லாத நிபந்தனைகளுடன், பெண்களுக்கான 33 விழுக்காடு மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று சொல்ல முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. “ஆப்பரேஷன் சக்சஸ், ஆனால் பேஷண்ட் டெட்” என்று சொல்வார்களே! அவ்வாறு இருக்கிறது அவர்களின் செயல்பாடு! பெண்களாகிய உங்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அதிகாரம் கிடைப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை. அதனால் பெயரளவிற்கு மசோதாவை நிறைவேற்றிவிட்டுக் காலத்தைக் கடத்துகிறார்கள்.

ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், இது பெண்களுக்கான ஆட்சி! மகளிர் அனைவரும் இன்றைக்கு அவ்வளவு மனநிறைவாக - மகிழ்ச்சியாக - அதிகாரத்துடன் இருக்கிறார்கள்! இந்தக் கூட்டத்திலேயே என்னுடைய அம்மா போன்று நிறைய பேர் இருக்கிறீர்கள்! எனக்குச் சகோதரிகளாக நிறைய பேர் இருக்கிறீர்கள். ஏன், என்னுடைய மகள்களாக எத்தனையோ பேர் வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்! நம்முடைய வெல்லும் தமிழ்ப் பெண்களைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்!

பெண்களுக்காக நாம் செயல்படுத்தும் திட்டங்களில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு எடுத்துச் சொல்லி, நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக கொடுக்கிறோம்! குடும்பத்திற்காகவும் - சமூகத்திற்காகவும் தலைமுறை தலைமுறையாக உழைக்கும் பெண்களின் உரிமை அது! திட்டத்தின் பெயரிலேயே உரிமையைக் கொண்டு வந்து ஒரு புரட்சியைச் செய்தோம்! திட்டமும் பெரிய சக்சஸ்!

தினமும் எத்தனை எத்தனை பேட்டிகள்! எத்தனை பேரின் வாழ்க்கைக் கதைகள் – இந்தத் திட்டத்தின் வெற்றியை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறது! இந்த உரிமைத்தொகை பல பெண்களுக்குச் சுயமரியாதையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது! நிறைய பேருக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது! நிறைய பேர் இதன் மூலமாகச் சிறுதொழில் தொடங்குகிறார்கள். இதுவரை ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் நாம் மொத்தம் 28 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இது சமூகத்தில் மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் இம்பாக்ட் உருவாக்கியிருக்கிறது!

அதேபோன்று, நம்முடைய மற்றொரு புரட்சித் திட்டம்தான் மகளிர் விடியல் பயணம்! பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது... ஸ்டாலின் முதலமைச்சர் ஆகியிருக்கிறார் என்ற மாற்றம், ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே எதிரொலிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறு, முதலமைச்சராக நான் போட்ட முதல் கையெழுத்தே பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்திற்குத்தான்! நான் முதலமைச்சரான அடுத்த நாளே, பேருந்தில் ஏறியதும் டிக்கெட் வாங்கக் காசு கொடுத்த பெண்களிடம், ”மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துவிட்டார். இனிமே நீங்கள் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை” என்று சொல்லப்பட்டது! நாம் ஆட்சிக்கு வந்ததும் முதன்முதலில் பெண்களின் வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம்!

இந்த விடியல் பயணத்தில் உங்களுக்கு ஒரு சுதந்திரமும், முக்கியத்துவமும் கிடைக்கிறது இல்லையா? அதுதான் என் கனவு, என் இலட்சியம் எல்லாம்! இந்த திட்டத்தால் பெண்கள் பயணம் செய்வதே பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது! நிறைய வாய்ப்புகளை தேடிச் சென்று வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். பல மகளிர் காலையிலேயே பேருந்தில் ஏறிச் சென்று, பூ விற்பது, கீரை – காய்கறிகள், மீன் விற்பனை செய்வது என்று சிறுதொழிலில் ஈடுபடுகிறார்கள்.

“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!

உரிமைத்தொகையாகக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து, விடியல் பயணம் திட்டத்தால் மாசம் ஆயிரம் ரூபாயைக் கூடுதலாக மிச்சம் செய்கிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் - கோயிலுக்குச் செல்பவர்கள் – உறவினர்களைப் பார்க்கச் செல்பவர்கள் – கல்லூரிக்குச் செல்பவர்கள் - தேர்வுக்குத் தயாராக நூலகத்திற்கு செல்பவர்கள் என்று அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது! இவ்வாறு இதுவரை தொள்ளாயிரம் கோடி முறை பயணம் செய்திருக்கிறார்கள்.

அடுத்து, அரசுப் பள்ளியில் படித்து முடிக்கும் பெண்கள், கல்லூரியில் சேரும் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தோம்! இதை எவ்வாறு தடுக்கலாம் என்று சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்! சுமார் ஏழு லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதனால், இப்போது பள்ளி முடிக்கும் பெண் பிள்ளைகள் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்பே படிப்பைப் பாதியில் நிறுத்திய பெண்களும் மீண்டும் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். தன்னுடைய மகனுடன் சேர்ந்து கல்லூரிக்குச் செல்லும் ஒரு அம்மாவைக் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் நான் பார்த்தேன். இதுதான் புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றி!

அதே நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தால், ஜப்பானிய மொழி கற்று, வேலை கிடைத்த மாணவி, அந்த மொழியிலேயே எனக்கு நன்றி சொன்ன வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு நான் முதல்வன் திட்டத்திலும் கடந்த நான்கு கல்வியாண்டுகளில் 22 லட்சத்து 17 ஆயிரத்து 543 பயிற்சிச் சான்றிதழ்களை மாணவிகளுக்கு வழங்கியிருக்கிறோம்! அவர்களில் பல பேரும் இப்போது நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.

என்னதான் பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாலும் - உங்களுக்கு நடைமுறையில் இருக்கும் பெரிய சுமை என்பது, சமையலறை! அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பும் பெண்கள்தான், சமையல் வேலையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது! இதனால், சில நேரங்களில், குழந்தைகளுக்குக் காலை உணவை சரியாகத் தயார் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது!

பெண்களின் சமையலறைச் சுமையையும் குறைக்க வேண்டும் - குழந்தைகளுக்கும் சத்தான - சுவையான உணவைப் பரிமாற வேண்டும் என்றுதான் காலை உணவுத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்! இதனால், ஒவ்வொரு நாளும் 19 லட்சத்தி 34 ஆயிரத்து 69 குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள். அந்தக் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் தங்கள் பாரம் கொஞ்சம் குறைந்த நிலையில் நிம்மதியோடு இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, நான் தொடர்ந்து திரும்ப திரும்ப வலியுறுத்திச் சொல்லும் ஒரு விஷயம், “கல்விதான், யாராலும் திருட முடியாத சொத்து!”. அதிலும், ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பத்தின் நான்கைந்து தலைமுறையையே முன்னேற்ற முடியும்! அப்படிப்பட்ட பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களின் கல்லூரிக் கனவு தடைபடக் கூடாது என்றுதான், புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்! இந்த திட்டத்தில் மாதாமாதம், 6 லட்சத்து 92 ஆயிரத்து 471 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிக்கொண்டு இருக்கிறோம்!

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சமத்துவபுரம் என அரசு வழங்கும் வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை கூட குடும்பத் தலைவிகள் பெயரில்தான் கொடுக்கிறோம்! அதுமட்டுமல்ல, பெண்களின் பெயரில் பதிவுசெய்யப்படும் அசையாச் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணத்தில், ஒரு விழுக்காடு சலுகையும் அறிவித்துள்ளோம். நம் முயற்சிகளால், கடந்த 4 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு உயர்ந்திருக்கிறது!

அதை ஏன் இந்த நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் எண்ணிக்கையில சரிபாதி நிறுவனங்களைப் பெண்கள்தான் தலைமையேற்று நடத்துகிறார்கள். இதுதான், தமிழ்நாட்டின் தனித்துவமான சாதனை! அதேபோன்று, கிராமப்புறங்களிலும் பெண் தொழில் முனைவோர்களை வழிகாட்டி வளர்த்தெடுக்கும் TN-Rise திட்டமும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில்தான் 13 விழுக்காடு பெண்கள், தொழில்முனைவோர்களாகப் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கிறார்கள்.

“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!

அடுத்து, மகளிர் சுய உதவி குழுக்கள். 1989-இல் தி.முக. - கலைஞர் ஆட்சியில் தொடங்கிய திட்டம் இது. தொடர்ந்து 2006-இல் கழக ஆட்சி அமைந்ததும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நான், எல்லா மாவட்டங்களுக்கு ஒரு முறைக்கு இருமுறை சுற்றுப் பயணம் செய்தேன். பல மணி நேரம் நின்று கால் வலிக்க வலிக்க ஆயிரக்கணக்கான சகோதரிகளுக்குக் கடனுதவிகளை வழங்கினேன். இந்தத் திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தினோம். இப்போது நமது திராவிட மாடல் ஆட்சியில் இது இன்னும் வளர்ந்து, புது ரெக்கார்டு படைக்கும் அளவுக்கு, ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 560 கோடி ரூபாய் கடனுதவி வழங்கியிருக்கிறோம்.

உயர்கல்விக்காகவும் - வேலை காரணமாகவும் சொந்த ஊர்களைவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று தங்குகிற பெண்கள், பாதுகாப்பாகவும் - தங்களின் சொந்த வீட்டில் இருக்கும் உணர்வோடும் தங்க வேண்டும் என்று, இதுவரை 19 தோழி விடுதிகளை உருவாக்கி இருக்கிறோம்! மேலும் பல புதிய விடுதிகளையும் கட்டிக்கொண்டு இருக்கிறோம்.

இப்போது நான் சொன்ன திட்டங்கள் எல்லாம், மிகவும் குறைவுதான். சொல்ல நிறைய இருக்கிறது. நேரம்தான் இல்லை. எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி!

“ஏன் பெண்களுக்கு முன்னுரிமை?” என்று சிலருக்கு இயல்பாக ஒரு கேள்வி வரும். பெரியாரிடமும் இப்படி ஒரு கேள்வியை முன்வைத்தார்கள். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? “இந்தப் பயன்கள் எல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் உங்களின் சகோதரிகள் – உங்களின் மகள்கள் - உங்களது மனைவி - உங்கள் தாய்மார்களுக்குத்தானே போய்ச் சேர்கிறது? அவர்கள் முன்னேறினால் உங்களின் சுமையும்தானே குறையும்?” என்று மிகவும் பிராக்டிக்கலான பதிலை, விளக்கமாகக் கொடுத்தார் பெரியார்! தந்தை பெரியாரின் பதில்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பதிலும்!

பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்தச் சமூகமும் முன்னேறும் என்று நாம் இவ்வளவு செய்கிறோம்! ஆனால், ஒன்றியத்தில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசு என்ன செய்துள்ளது? நாடு முழுவதும் இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்துக்குத் துணையாக இருந்த - மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத்திட்டத்தை இன்றைக்கு இழுத்து மூடியிருக்கிறார்கள்!

நான் தரவுகளோடு சொல்கிறேன்! கடந்த 4 ஆண்டுகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் எத்தனை விழுக்காடு பெண்கள் என்று தெரியுமா? சொன்னால், ஷாக் ஆகிடுவீர்கள். 86% பெண்கள்தான்! பெண்களுக்கு வாழ்வளித்த இப்படிப்பட்ட திட்டத்தைத்தான் நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் கிராமப் பொருளாதாரமும், பணப்புழக்கமும் அடி வாங்கப் போகிறது!

பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை பெண்களுக்கு முற்றிலும் விரோதமானது! அதற்கு ஒத்து ஊதுவது யார்? எதிர்க்கட்சித் தலைவர் ‘பழனிசாமி அவர்கள்! அவர் என்ன சொல்கிறார்? “நூறு நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தவில்லை, 125 நாளாக உயர்த்தி இருக்கிறார்கள்” எனப் பச்சைப் பொய்யைப் பிரசாரமாகச் செய்து கொண்டிருக்கிறார். யார்? திரு. எடுபுடி பழனிசாமி அவர்கள்! ஏற்கெனவே, ஆண்டுக்கு சராசரியாக 47 நாள்தான் வேலை கொடுத்திருக்கிறார்கள்.

இனி அதுவும் கொடுக்கப் போவதில்லை. இது போதாதென்று, புதிய திட்டத்தில் நிதிச்சுமையையும் மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டார்கள். இன்னும் எக்கச்சக்க கண்டிஷன் போட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இதுவரை கிடைத்த 40 சொச்சம் நாள் கூட இனி வேலை கிடைக்குமா என்றே தெரியாத நிலையில் இருக்கிறோம். எதையாவது படித்தால்தானே பழனிசாமி அவர்களுக்கு இவையெல்லாம் புரியும்!

கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை, அ.தி.மு.க. லெட்டர்பேடில் வெளியிட்டு, அத்துடன் கதை முடிந்துவிட்டது என்று செல்கிறார். ஒரு படி மேலே சென்று, பா.ஜ.க. சங்கிகளே கூச்சப்படும் அளவுக்கு 100 நாள் வேலைத் திட்ட இரத்துக்கு முட்டு கொடுத்துக்கொண்டு சுற்றுகிறார்!

“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!

இப்படிப்பட்ட துரோகங்களையும் தடைகளையும் தாண்டித்தான், திராவிட மாடல் ஆட்சியில் நாடே திரும்பிப் பார்க்கும் சாதனைகளை நாம் செய்துகொண்டு இருக்கிறோம்…

நான் நெஞ்சு நிமிர்த்தி - பெருமையோடு சொல்கிறேன்… திராவிட மாடல் ஆட்சியைப் போன்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதனை செய்த அரசு இருக்கவே முடியாது! இது எல்லாமே, தொடக்கம் மட்டும்தான்! இன்னும் நிறைய செய்யப் போகிறோம்! திராவிட மாடல் 2.0-இல் இப்போது உள்ள திட்டங்களையும் விரிவுபடுத்தப் போகிறோம்!

இவையெல்லாம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றால், நீங்கள்தான் வீடு வீடாகப் போய்ப் பிரசாரம் செய்ய வேண்டும். என்னதான் ஆண்கள் சென்றாலும், அவர்களால் வாசற்படி வரைதான் சென்று, பிரசாரம் செய்ய முடியும்! இதுவே, பெண்களான நீங்கள், ஹால், கிச்சன் வரைக்கும் செல்லலாம்! வீட்டுக்குள் மட்டுமல்ல, அந்த வீட்டுப் பெண்களின் மனசுக்குள்ளும் நீங்கள் நிச்சயம் நுழைய முடியும்!

உங்களிடம்தான் அந்த ‘எமோஷனல் கனெக்ட்’ இருக்கிறது! அதை முழுமையாகப் பயன்படுத்தி, நம் திட்டங்களை எல்லா வீட்டிலும் நீங்கள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்! உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற மகளிர் நலத்திட்டங்கள் தொடரவேண்டுமென்றால், இந்த ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும் என எடுத்துச் சொல்லுங்கள்!

உங்கள் மகளிரணியிலேயே அனைவரின் பணிகளையும் நான் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சமூக ஊடகங்களுக்கு இப்போது பெரிய அளவில் ‘ரீச்’ இருக்கிறது! அதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! மகளிரணியிலேயே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அனிச்சம் கனிமொழி, மருத்துவர் யாழினி போன்றவர்களுடைய சோஷியல் மீடியா செயல்பாடுகள், விவாதங்கள் நன்றாக இருக்கிறது. அனைவரும் பாராட்டுகிறார்கள். இவர்களைப் போன்று, இன்னும் எத்தனையோ பேர் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அது இன்னும் பன்மடங்கு அதிகம் ஆக வேண்டும்! நிச்சயம் நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

தங்கை கனிமொழிக்கு மட்டும் நான் அண்ணன் இல்லை; இங்கே வந்திருக்கும் கொள்கைச் சொந்தங்களான உங்கள் எல்லாருக்கும் நான் அண்ணன்தான்! உங்கள் குடும்பத்தில் ஒருவன்தான் நான்! அதனால்தான் உரிமையோடு சொல்கிறேன். தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தே தீர வேண்டும்! அதற்கான உங்கள் பணியை இப்போதே தொடங்க வேண்டும். என்ன எல்லோரும் ரெடியா? இன்னும் சத்தமாகச் சொல்லுங்கள்… பல்லடத்தில் ஒலிக்கும் உங்கள் குரல் தமிழ்நாடு முழுக்க கேட்கட்டும்.

பெண்களை மிஞ்சிய பேராற்றல் எதுவுமே இல்லை! வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி, பெண்களான நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதை யாராலும் மாற்ற முடியாது! வெல்லும் தமிழ்ப் பெண்களே… வெற்றியைத் தேடித் தாருங்கள்! நான் மீண்டும் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்! அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0-வும் பெண்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும்! உங்கள் அனைவரும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

banner

Related Stories

Related Stories