
சென்னையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் இரண்டு நாட்கள் (17.02.2026 மற்றும் 18.02.2026) நடைபெறும் “தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0” (TAMIL NADU CLIMATE SUMMIT 4.0) மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு :
நம்முடைய திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து நான்காவது முறையாக இந்த காலநிலை உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம். துறையின் பெயர்மாற்றத்தில் தொடங்கி, செயல்பாடுகளிலும் - காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நம்முடைய உறுதிப்பாடு எதிரொலிக்கும் வகையில், பல முன்னெடுப்புகளை செய்து கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சிதான் இந்த காலநிலை உச்சி மாநாடு!
இதுமட்டுமல்ல, காலநிலை மாற்ற இயக்கம்! பசுமைத் தமிழ்நாடு இயக்கம்! தமிழ்நாடு ஈரநில இயக்கம்! தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் இவற்றிற்கெல்லாம் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கி வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழு! என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து கொண்டிருக்கிறோம்! அதனால் தான் சமீபத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு அவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்த மாநாட்டைப் பொறுத்தவரைக்கும், நிலைத்தகு முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறது. எப்படி என்றால், இந்த மாநாட்டால் ஏற்படக்கூடிய கார்பன் உமிழ்வுகளை ஈடு செய்யக்கூடிய விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆயிரத்து நூறு மரக்கன்றுகள் வனத்துறை மூலமாக நடப்பட்டிருக்கிறது. மற்ற அரசுத் துறைகளும் இந்த ஃபார்முலாவை கடைபிடித்தால், நம்முடைய மாநிலத்தின் ‘கரிம தேக்க’ இலக்கான, 30 – 35 மில்லியன் டன்களை வேகமாக அடைந்துவிடலாம்! நம்முடைய ‘நெட் ஜீரோ’ இலக்குக்கும் இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.
2022-ஆம் ஆண்டு, முதலாவது காலநிலை உச்சி மாநாட்டிலேயே, இந்தியாவின் ‘நெட் ஜீரோ’ இலக்கை 2070-ஆம் ஆண்டுக்கு முன்பே, தமிழ்நாடு அடைந்துவிடும் என்று நம்பிக்கையுடன் நான் சொன்னேன்! நான் சொன்னது சரிதான் என காட்டுவது போல இந்த மாநாடு நடைபெறுகிறது!
அதுமட்டுமல்ல, நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ளவும், தேவைப்படக்கூடிய விஷயங்களில் Improve செய்து கொள்ளவும் தான் இந்த மாநாடு. அதிகரித்து வரும் வெப்பநிலை, அதீத மழைப்பொழிவு, புயல், வறட்சி வெப்ப அலை - இப்படி எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் உலகம் முழுவதும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதுவும், தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலங்களுக்கு காலநிலை மாற்றம் என்பது எங்கேயோ நடக்கும் சம்பவம் கிடையாது! நமக்கு அது அன்றாட நிகழ்வாக அமைந்திருக்கிறது.
நாம் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அந்த வகையில், நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடமும், நிறுவப்பட்ட சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக் ஆற்றல் உற்பத்தியில், இந்தியாவிலேயே நான்காவது இடமும் பெற்று, வளர்ந்து வருகின்ற மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்ததைவிட, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அளவு, குறுகிய காலத்திலேயே 77 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. போக்குவரத்து மூலமாக ஏற்படும் கார்பன் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த இ-பஸ் பயன்பாட்டை அதிகரித்து கொண்டு வருகிறோம். இப்போதைக்கு, மொத்தம் 380 இ-பஸ்கள் சென்னையில் இயக்கப்படுகிறது.
7 ஆயிரத்து 738 சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
2030-ஆம் ஆண்டுக்குள் மாநில போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில், 30 விழுக்காடு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும்! இதுதான் நம்முடைய டார்கெட். மின்சார வாகனங்களுக்கு 2027-ஆம் ஆண்டு வரை “Road Tax”-லிருந்து விலக்கு கொடுத்திருக்கிறோம். 294 இடங்களில், 309 இலட்சம் கியூபிக் மீட்டர் மரபுக் கழிவுகள் அகற்றப்பட்டிருக்கிறது.
பிரபல தொழிலபதிரான ஆனந்த் மகிந்திரா அவர்கள் கூட தமிழ்நாடு அரசின் பயோ-மைனிங் நடவடிக்கைகளை பாராட்டி, ட்வீட் போட்டிருந்தார். சென்னையில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க அமைத்திருக்கும் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துகிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்தப் போகிறோம். நீலகிரி, கோவை, விருதுநகர், இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை, கார்பன் சமநிலை மையங்களாக மாற்ற திட்டம் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். ‘காலநிலை மீள்திறன்மிகு கிராமங்கள்’ திட்டம், காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு போன்றவற்றையும் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
கடந்த ஆண்டு ஜூன் 5 சுற்றுச்சூழல் நாளில் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வனத்துறையில், பணி ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. வனத்துறையும், வனப்படையும் நவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக உள்ளூர் மீனவ மக்களைக் கொண்ட 2 ‘கடல்சார் உயரடுக்கு படைகள்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், அரிதான கடல்பசு, கடல் ஆமை, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களைக் காக்க 6 உயர் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட 8 புதிய வனஉயிரின சரணாலயங்கள், 100 புதிய காப்புக் காடுகள், அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை பாதுகாக்க 50 கோடி ரூபாய் நிதி, மனித - விலங்கு மோதலைத் தவிர்க்கவும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் பாதுகாப்புக்கும் A.I. உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஏன்? என்று பல்வேறு பல்லுயிரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. அலையாத்தி, சவுக்கு மற்றும் பனைமரங்கள் நடவு செய்யப்பட்டு, கடலோரப் பகுதிகளில், இயற்கைப் பேரிடர்களை தாக்குப்பிடிக்கும் உயிர்க்கேடயங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நெகிழிக் கழிவு மேலாண்மையினை முன்னிறுத்தி, EPR வலைதளத்தில் பதிவு செய்வதில், இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ‘சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக்’ பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் மூலம் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே, அதிகம் நகர்மயமான மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், அது எந்த வகையிலும் நம்முடைய பசுமையை பாதிக்க கூடாது என்று கவனத்துடன் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம். அதற்காக, நகர்ப்புற பசுமையாக்கலுக்கான கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம்!
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டம், நுண்ணீர் பாசன அமைப்புகள், மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு, உயிர்ம வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை, ஊக்குவிப்பு போன்ற திட்டங்கள் செய்து கொண்டு வருகிறோம். இதுபோன்ற காலநிலை நடவடிக்கைகள் என்றுமே வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததில்லை; நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாகதான் இருந்திருக்கிறது! எனவே, காலநிலை மாற்றத்தின் ஆபத்தை, நிலையான பொருளாதாரம் மற்றும் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக் கொள்ள இயற்கை வழங்கியிருக்கக்கூடிய ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பொறுப்போடு செயல்படுவோம்.
காலநிலை மீள்திறன்மிகு உட்கட்டமைப்புகளை உருவாக்க, அரசுத் துறைகள் அனைத்தும் உலக வங்கி - ஆசிய வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து பசுமை நிதியையும், முதலீட்டையும் ஈர்க்க வேண்டும்.
இதன் முதல் படியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமைக் காலநிலை நிதியம் உருவாக்கப்பட்டு, இன்று, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தூய்மை மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தருணத்தில், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்துடன் இணைந்து அளப்பரிய ஆதரவை வழங்கி வரும் உலக வங்கிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில், முக்கியமான சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.
* முதல் அறிவிப்பு - இனி வரும் காலங்களில், அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையுடன் இயைந்து செயல்படுத்தும் விதமாக பட்ஜெட் உருவாக்கப்படும்.
* இரண்டாவது அறிவிப்பு - நமது நாடு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், கார்பன் உமிழ்வுகளை குறைக்க, தேசிய அளவில், தீர்மானிக்கப்பட்ட சில பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டது போல், நம் மாநிலத்தின் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க, 2030-க்குள் செயல்படுத்தவேண்டிய மாநில அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றை இலக்குகளாக கொண்டு செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* மூன்றாவது அறிவிப்பு - தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய ஐந்து இலட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்.
* நான்காவது அறிவிப்பு - வரும் காலங்களில் தொழிற்சாலைகளும், அரசு நிறுவனங்களும் இணைந்து, பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உமிழ்வுகளைக் குறைக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும், இளைஞர்கள் காலநிலைத் தலைவர்களாகவும், தூதுவர்களாகவும் உருவெடுக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நம்முடைய திராவிடமாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், நமக்கு சமூகநீதி ஒரு கண் என்றால், காலநிலை நீதி மற்றொரு கண்! எனவே, காலநிலை மாற்றத்தை நாம் அனைவரும் இணைந்து எதிர்கொள்வோம்! வெல்வோம் - ஒன்றாக!






