
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.12.2025) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 (SDAT INDIA INTERNATIONAL YOUTH SAILING CHAMPIONSHIP IIR) மற்றும் 5150 டிரையத்லான் சென்னை - 2026 போட்டிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்கு சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகின்றார்.
அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உலகமே சென்னையின் அழகை கண்டுகளித்த சென்னை பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தையம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி;

7ஆவது “ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை – 2023” போட்டி, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான உலக சர்ஃபிங் லீக் போட்டி, HCL சைக்ளோத்தான் (CYCLOTHON) போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ”சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025” என பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 (SDAT INDIA INTERNATIONAL YOUTH SAILING CHAMPIONSHIP IIR) மற்றும் 5150 டிரையத்லான் சென்னை - 2026 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 1.50 கி.மீ நீச்சல், 40 கி. மீ சைக்கிளிங், 10 கி.மீ ஓட்டம் என மொத்தம் 51.50 கி.மீ தூரம் கொண்ட இரும்பு மனிதன் 5150 டிரையத்லான் சென்னை போட்டி 10.1.2026 மற்றும் 11.1.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் 1.50 கி.மீ தூரம் கொண்ட நீச்சல் போட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நீலக்கொடி கடற்கரையில் தொடங்கி கோவளம் கடற்கரை வரையிலும், 40 கி.மீ. தூரம் கொண்ட சைக்கிள் போட்டி கோவளம் பீச் முதல் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக MGM பீச் ரிசார்ட் வரையிலும், 10 கி.மீ தூரம் கொண்ட ஓட்டப்பந்தயம் MGM பீச் ரிசார்ட் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலையில் மாயாஜால் வரையிலும் என 51.50 கி.மீ தூரத்திற்கு இரும்பு மனிதன் 5150 டிரையத்லான் சென்னை போட்டி நடைபெற உள்ளது. இந்தப்போட்டிகளில் 1,200க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, 6.1.2026 முதல் 9.1.2026 வரை வெவ்வேறு வகையிலான படகுப்போட்டிகள், பாய்மரப் பலகை சறுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து, சீசெல்ஸ், மொரிசியஸ், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அல்ஜீரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, தைவான், ஸ்வீடன், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.






