தமிழ்நாடு

”73ல் 26 பேர் தமிழர்கள்.. செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னைதான்”: முதல்வரின் பேச்சால் நெகிழ்ந்த அரங்கம்!

இந்தியாவில் 73 கிரான் மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 26 பேர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”73ல் 26 பேர் தமிழர்கள்.. செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னைதான்”: முதல்வரின் பேச்சால் நெகிழ்ந்த அரங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

இதையடுத்து 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து பேசினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," 1961 ஆம் ஆண்டு உலக செஸ் சேம்பியனாகப் புகழ் பெற்ற மானுவல் ஆரோன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை ஆகும். இந்தியாவின் செஸ் விளையாட்டை முன்னோக்கி நகர்த்தி, பல்வேறு திறமையாளர்களுக்கு ஊக்கமளித்ததும் மானுவல் ஆரோன் தான்.

1972 ஆம் ஆண்டே சென்னையில் இருந்த சோவியத் கலாச்சார மையத்தில் செஸ் க்ளப் உருவாக்கியவர் ஆரோன். செஸ் விளையாட்டுக்கு உலகப்புகழ் பெற்ற வீரர்களை உருவாக்கிய சோவியத் நாடே, ஆரோனின் ஆலோசனையை பெற்றுச் செயல்பட்டது. தமிழ்நாடு செஸ் அசோசியேஷனை உருவாக்கியவரும் இவர் தான்.

உலகக் கிரான் மாஸ்டராகப் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. 1988 ஆம் ஆண்டு தனது 19 வயதில் உலகப் புகழைப் பெற்ற ஆனந்த், இன்று வரை சதுரங்க ஆட்டத்தில் வலிமையான வீரராக இருக்கிறார்.

இந்தியாவில் 73 கிரான் மாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 26பேர். அதாவது நூற்றில் 36 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.புத்திசாலித் தனமான விளையாட்டு இது. அறிவுப்பூர்வமான விளையாட்டு இது. அறிவுக்கூர்மை கொண்ட விளையாட்டு இது. அதனால் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெறும் விளையாட்டாக இருக்கிறது. சென்னை என்பது செஸ் விளையாட்டின் தலைநகரம் என்று சொல்லத் தக்க வகையில் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories