தமிழ்நாடு

#Exclusive ஆளுநர் மாளிகைக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகிறது? : உண்மையை உடைக்கும் பத்திரிக்கையாளர் !

ஆளுநர் மாளிகைக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகிறது என பத்திரிக்கையாளர் ஒருவர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.

#Exclusive ஆளுநர் மாளிகைக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகிறது? : உண்மையை உடைக்கும் பத்திரிக்கையாளர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், இந்த விருந்தை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. மக்களாட்சி மாண்பின் அடையாளமான சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன. அதுமட்டுமல்லாது விருந்தில் கலந்துக்கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எதிர்கட்சிகள் விருந்தில் கலந்துக்கொள்ளவில்லையென்றால், ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு என பேசியுள்ளார்.

தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருசேர கொண்டுவந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்ததைக் கண்டிக்கும் விதமாக, விருந்தை புறக்கணிக்கும் கட்சிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ஆளூர் ஷாநாவஸ் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆளூர் ஷாநாவஸ் வெளியிட்டுள்ள பதிவில், “பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆளூர் ஷாநாவஸ் ட்விட்டர் பதிவுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த பதிவில், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதனை பத்திரிக்கையாளர் பர்கத் அலி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவுதான் செலவாகிறது? அரசு வட்டாரத்தில் தகவலைத் திரட்டினேன். கவர்னர் செயலகம், கவர்னர் இல்லம் என ராஜ்பவனுக்காக இரண்டு வகையான செலவுகளை அரசு செய்கிறது. அதன்படி 2021 – 2022 ஆண்டுக்கான செலவு விவரங்கள் கிடைத்தன.

முதலில் கவர்னரின் செயலகம் பற்றிய செலவுகளைப் முதலில் பார்ப்போம். கவர்னரின் செயலகத்தில் கவர்னரின் அலுவலக ரீதியிலான பணிகளைச் செய்வதற்காக பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்காகவும் அலுவலகத்தின் பணிகளுக்காகவும் பணம் செலவிடப்படுகிறது. சம்பளத்திற்காக மட்டுமே 2021 – 2022-ம் ஆண்டுக்கு 1,60,79,000 கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கிறார்கள். என்னென்ன செலவுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன?

அடிப்படை சம்பளம் -1,44,43,000

மருத்துவ படி – 36,000

மருத்துவ செலவுகள் – 50,000

படிகள் – 88,000

வீட்டு வாடகைப் படி - 12,23,000

பயண சலுகை - 30,000

நகர ஈட்டுப்படி - 2,09,000

அகவிலைப்படி - 32,50,000

சுற்று பயணப் படிகள் – 8,00,000

தொலைப்பேசி கட்டணம் - 5,00,000

சில்லறை செலவுகள் – 5,10,000

மின் கட்டணம் – 3,91,000

தபால் செலவு – 90,000

வண்டிகளின் பராமரிப்பு - 1,53,000

பொருள்கள் வாங்கியது - 1,00,000

அரசு வழக்கறிஞர் கட்டணம் - 1,00,000

ஒப்பந்த ஊதியம் - 57,09,000

பெட்ரோல் / எரிபொருள் – 6,14,000

பராமரிப்பு – 42,000

ஸ்டேஷனரி – 1,29,000

மொத்தம் – 2,84,97,000

கவர்னரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் கவர்னரின் இல்லத்திற்கு என்னென்ன செலவுகள் செய்யப்படுகின்றன? அதன் விவரம் விரைவில்...” எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் இத்தகைய பதிவுக்கு பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories