தமிழ்நாடு

“தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க எப்போதும் உடன் நிற்கும்” : மே தினத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி!

ஒருபுறம் கொரோனா பேரிடர், மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் பக்கம் தி.மு.க எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க எப்போதும் உடன் நிற்கும்” : மே தினத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“ஒருபுறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும்! தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்! ” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்நீரும் கண்ணீரும் சிந்திய தொழிலாளர்கள் சிகாகோ நகரில் மாபெரும் வெற்றிப் பேரணியை நடத்தி, மகத்தான உரிமைகளைப் பெற்ற, மேதினி போற்றும் மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட தொ.மு.ச. பேரவை பொன் விழா ஆண்டைக் கடந்து, 51-வது ஆண்டில் நுழைவதும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது நூற்றாண்டை நிறைவு செய்து- 101-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதும் இந்த மே தினத்தின் போற்றத்தக்க சிறப்பம்சங்களாகும்.

“தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க எப்போதும் உடன் நிற்கும்” : மே தினத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி!

ஆளுங்கட்சி என்றாலும் எதிர்க்கட்சி என்றாலும் எப்போதும் தொழிலாளர்களின் நலன் காக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

"சித்திரச் சோலைகளே உமைநன்கு

திருத்த இப்பாரினிலே - முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே"

- என்ற நினைவை நெஞ்சத்திலிருந்து அகற்றாமல் போற்றிவருவது கழகம்!

வியர்வையை மூலதனமாக வைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை அசையாச் சொத்துகளாக வழங்கி- அவர்களின் வாழ்விலும், வளத்திலும், ஏற்றத்திலும், மாற்றத்திலும் உணர்வொன்றி உடன் பயணித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

“மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம்” “தொழிலாளர் நலனுக்காகத் தனியாக ஒரு அமைச்சகம்” “உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம்” “அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்கள்” போன்றவை கழக ஆட்சியின் முத்தான திட்டங்கள். “நேப்பியர் பூங்கா”வை “மே தினப் பூங்கா” என்று பெயர் சூட்டி- இன்றும் அது தொழிலாளர்களின் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.

தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அளித்தது; 17 நல வாரியங்களை- விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியங்களாக உருவாக்கி, தொழிலாளர்களுக்குப் பன்முக நலத்திட்டங்களையும், உயிர் காக்கும் பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவத் திட்டங்களையும் வழங்கியது கழக அரசின் வியத்தகு சாதனைகள்!

“தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க எப்போதும் உடன் நிற்கும்” : மே தினத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி!

ஆனால் இன்றைக்கு 44 சட்டங்களை 4 ஆகச் சுருக்கி “கார்ப்பரேட்” நிறுவனங்களுக்குக் கைகொடுப்பது, ரத்தம் சிந்திப் பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகப்படுத்துவது எனத் தொழிலாளர் நலன்களைச் சூறையாடி, அவர்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.

அவர்களை அப்படியே பின்பற்றி, அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை முடக்கி - தொழிலாளர்களின் உறுப்பினர் பதிவையும் நிறுத்தி வைத்து- இவ்வளவு மோசமான சுகாதார மற்றும் வருமானப் பேரிடரைச் சந்தித்து அவதிப்படும் தொழிலாளர்களை அரவணைக்காமல்- அவர்களை அடியோடு புறக்கணிக்கும் ஆட்சியாக உள்ளது இங்குள்ள அதிமுக அரசு.

ஒருபுறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய- மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது மட்டுமல்ல- எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும்! தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இணைந்து போராடும்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories