
2026 ஐபிஎல் தொடர் தொடங்கி கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 40 போட்டிகளுக்கு மேல் நிறைவடைந்துள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து சிறப்பாக ஆடி வருகின்றனர்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரும் ஆன எம்.எஸ்.தோனி காயம் காரணமாக முதல் 2 வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
இருப்பினும் இரண்டு வாரங்களில் தோனி மீண்டும் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை 8 போட்டிகளை சிஎஸ்கே அணி ஆடியுள்ள போதிலும் இன்னும் ஒரு போட்டியில் கூட எம்.எஸ்.தோனி விளையாடவில்லை. போட்டியின் போது கூட மைதானத்திற்குள் வருவதில்லை.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ”தோனி விரைவில் அணிக்கு திரும்புவார் எனவும், அவரது உடல்நிலை சீராக உள்ளது. மிகவும் ஃபிட்டாக அவர் உள்ளார். இருப்பினும் ஓடுவதில் சற்று சிரமம் இருப்பதால் இதுகுறித்து அவரே முடிவெடுத்து விரைவில் போட்டிகளில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.
ஸ்டீபன் பிளம்மிங்கின் பேட்டிக்கு அடுத்த போட்டியிலும் எம்.எஸ்.தோனி ஆடவில்லை. சிஎஸ்கே அணி தற்போது செட்டாகி உள்ளது இதனை கெடுக்க எம்.எஸ்.தோனி விரும்ப மாட்டார். அதனால்தான் அவர் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார் என பல்வேறு காரணங்கள் கிரிக்கெட் விமர்சகர்களால் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (மே 2) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து களம் காண்கிறது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி கலந்து கொண்டார்.
அப்போது, எம்.எஸ்.தோனியின் உடல்நிலை குறித்தும் போட்டியின் போது மைதானங்களில் தோனி ஏன் வருவதில்லை என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த மைக்கல் ஹசி, ”தோனி தற்போது மிகவும் ஃபிட்டாக உள்ளார். அவரது உடல்நிலை முழுவதுமாக தேறியுள்ளது. ஓடுவதில் மட்டும் சற்று சிரமம் இருப்பதால், அதற்கான தொடர் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். தோனி அணியின் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளார். அதனால்தான் அவர் போட்டியின்போது மைதானத்தில் இருப்பதில்லை. அப்படி இருந்தால் அனைத்து கேமராக்களும் தோனியை மட்டுமே ஃபோகஸ் செய்யும் என்பதால், அது வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும் என தோனி நினைக்கிறார். கண்டிப்பாக அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தை கேட்ட பிறகு ரசிகர்கள் மிகவும் தீவிரமாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். இருப்பினும் தோனி எப்போது களமிறங்குவார், ஒரு நல்ல ஆட்டத்தி ஃபினிஷ் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.






