
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக கோப்பைகளை கைப்பற்றி எதிரணிகளுக்கு பயத்தை கொடுத்து வந்த அணிகள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள். 18 வருட ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளிடம் மட்டுமே தலா 5 கோப்பைகள் என மொத்தம் 10 கோப்பைகள் உள்ளது.
ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் பலவீனமான ஆட்டத்தினை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளிப்படுத்தி வருகின்றன. அணியின் காம்பினேசன், கேப்டன்சிப், ஆடுகளம் என பல்வேறு காரணம் சொல்லப்பட்டாலும் வெற்றியே இறுதியாக தேவைப்படுகிறது.
குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை முடிந்துள்ள 8 ஆட்டங்களில் வெறும் 3-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால் சிஎஸ்கே-வின் பிளே ஆப் கனவு ஊசலாடி வருகிறது. ஆட்டத்தினை மேம்படுத்தாத பட்சத்தில் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறி விடும் என்பது தான் நிதர்சனம்.
மொத்தமாக 14 ஆட்டங்கள் உள்ள நிலையில், ஏற்கனவே 8 ஆட்டங்கள் முடிந்துள்ளதாலும் அதில் 3 ஆட்டங்கள் மட்டுமே வென்றுள்ளதாலும், அடுத்து ஆடக்கூடிய 6 ஆட்டங்களில் 5ல் வென்று நல்ல ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் செல்ல முடியும், இதுவும் இல்லாமல் 6 போட்டிகளிலேயுமே வென்றால் மொத்தமாக 9 போட்டிகளில் வென்று எளிதாக பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. இல்லாத பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேறியே தான் ஆகவேண்டும்.
இப்படி நிலைமையிருக்க நாளைய தினம் (மே 02) மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் பல போட்டிகள் தோல்வியுற்றாலும், சென்னை அணி எனும் பட்சத்தில் அந்த ஆட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.

இந்த ஆட்டத்திலாவது மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேசமயம் சென்னை அணி ரசிகர்கள் மும்பையின் சொந்த மைதானத்திலேயே மும்பை அணியை வென்றிருக்கிறோம். அதனால் சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணியை கண்டிப்பாக வீழ்த்தும் என நம்புகின்றனர்.
இந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு திறந்திருக்கும். மும்பை அணி வென்றால் அதற்கு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு நிகழ்தகவின் அடிப்படையில் இருக்கும்.
எனவே, நாளை (மே 02) நடைபெறும் ஆட்டம் 2 அணிகளுக்குமே வாழ்வா சாவா என்ற நிலையில்தான் உள்ளது. மேலும், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.






