
2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்று (மார்ச் 08) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில், இறுதிப் போட்டி நேற்று (மார்ச் 08) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆட வந்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்ச சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா நியூசிலாந்து அணியின் பவுலிங்கை நாலாப்புறமும் சிதறவிட்டனர். தொடக்கம் முதலே ஆட்டம் இந்திய அணியின் கையிலேயே இருந்தது.
இருவரும் முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அபிஷேக் சர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த இஷான் கிஷன் – சஞ்சு சாம்சன் ஜோடி ரன்ரேட் சிறிதும் குறையாமல் ரன்கள் குவித்தனர்.

சதம் அடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்சர் 5 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 54 ரன்களும், ஹர்திக் 18 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
சற்று ரன்ரேட் குறைந்து வந்த நிலையில் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த சிவம் துபே 8 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
நியூசிலாந்து வீரர்கள் பின் ஆலன் 9 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 5 ரன்களும, மார்க் சேப்மேன் 3 ரன்களும் எடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் 52 ரன்களும், சான்ட்னர் 43 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட் வீழ்த்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
2007, 2024ம் ஆண்டுக்கு பிறகு 2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்து அசத்தியுள்ளது.
கபில் தேவ், ரோகித் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் போட்டியை மைதானத்தில் நேரில் கண்டுகளித்தனர். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் முன்னிலையில் டி20 உலகக்கோப்பையை வென்றது மேலும் ஒரு பெருமைமிகு தருணமாக இருந்தது.






