
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி நேற்று (மார்ச் 6) மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தரும் விதமாக 7 பந்துகள் விளையாடி 9 ரன்களில் ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன், சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். ஃபுல் ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனும், இஷான் கிஷனும் நாலாப்புறமும் பந்துகளை சிதறவிட்டுக் கொண்டிருந்த போது, 18 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்திருந்த போது இஷான் கிஷன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
எதிர்பாரா விதமாக சூர்யகுமார் இறங்க வேண்டிய இடத்தில் சிவம் துபே களமிறங்கினார். இருப்பினும், சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடி காட்டினார் துபே. இந்த வேளையில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய துபே 25 பந்துகளில் 43 ரன்களும், ஹர்திக் 12 பந்துகளில் 27 ரன்களும், திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்களும் குவித்தனர். மொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட், ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இருப்பினும், இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் கடைசி வரை ஆடி இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்கினார். 18வது ஓவரை வீசிய பும்ரா குறைவான ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை இந்தியா பக்கம் இழுத்து கொண்டுவந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், துபே பந்துவீச வந்தார் முதல் பந்திலேயே 2 ரன்கள் எடுக்க முற்பட்டபோது ஜேக்கப் பெத்தேல் ரன் அவுட் ஆகினார். இந்த விக்கெட்டின் மூலமே கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதிரடியாக ஆடிய ஜேக்கப் பெத்தேல் 48 பந்துகளில் 7 சிக்சர்கள் 8 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் குவித்திருந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதினை பெற்றப்பிறகு பேசிய சஞ்சு சாம்சன், “எல்லாப் புகழும் பும்ராவைத்தான் சேரும். பும்ரா ஒரு உலகத் தரமான பந்துவீச்சாளர். தலைமுறைக்கு ஒரு முறைதான் அவரைப் போல் ஒரு வீரர் கிடைப்பார். அதை இதுபோன்ற ஒரு முக்கியமான போட்டியில் செய்துகாட்டியுள்ளார். இந்த ஆட்ட நாயகன் விருது அவருக்குத்தான் செல்ல வேண்டும்.
இறுதிக் கட்டத்தில் நம் பந்துவீச்சாளர்கள் இப்படி வீசவில்லை எனில் நான் இங்கு நின்றிருக்க முடியாது. இக்கட்டான சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்கள் அவர்களை நம்பி பந்துவீசினார்கள். அவர்களுக்குத்தான் எல்லா பாராட்டுகளும் செல்ல வேண்டும்.
கடந்த போட்டியில் இருந்து எனக்கு சிறிது ஃபார்ம் கிடைத்துள்ளது. என்னுடைய நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, அந்த ஃபார்மை பயன்படுத்த வேண்டுமென நினைத்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்கள் குவிக்க வேண்டும், எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்த நினைத்தேன்.
இது ஒரு நாள் போட்டியோ டெஸ்ட் போட்டியோ இல்லை. எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவுக்காக என்னுடைய பங்களிப்பு இருந்ததில் மகிழ்ச்சி” என்றார்.
இறுதிப்போட்டி வரும் மார்ச் 8ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2வது முறையாக டி20 உலகக்கோப்பை போட்டியில் இறுதிபோட்டிக்கு வந்துள்ள இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.






