
2026 ம் ஆண்டுக்கான ஐபிஎல் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பயிற்சியை தொடங்குவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய வீடியோவை சிஎஸ்கே அணி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த ஆண்டு அவர் சென்னை வந்தபோது, அவரது டி-சர்ட்டில் இருந்த ரகசிய குறியீடு பெரும் பேசுபொருளானது. அதில் இருக்கும் குறியீடுகளை வைத்து ரசிகர்கள் இந்தத் தொடர் தான் கடைசி என்று கணித்தனர். தோனியுடன், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பிற வீரர்களும் சென்னை வந்துள்ளனர். விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த முகாமின் முதல் நாளில் இருந்தே தோனி முழுமையாக பயிற்சியில் பங்கேற்றுள்ளார். பொதுவாக தோனி 1.3 கிலோ வரையிலான அதிக எடையுள்ள பேட்டுகளைப் பயன்படுத்துவார். ஆனால், இந்தத் தொடரில் அதிவேகப் பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ளவும், கடைசி ஓவர்களில் பேட்டை வேகமாகச் சுழற்ற வசதியாகவும் தனது பேட்டின் எடையை குறைத்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்பிடித்து மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்நிலையில், வரும் சீசனில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் சென்னை அணி களமிறங்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அணியில் சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரரையும், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா போன்ற திறமையான இளம் வீரர்களையும் சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது. இது அணிக்குப் புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக, சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பீல்டிங் பயிற்சியாளராக அணியில் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து நிர்வாக ரீதியாக எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குறிப்பாக இந்த பயிற்சி ஆட்டத்தில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. வீரர்கள் மட்டுமே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் வீரர் அம்பதி ராயுடு இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், வீரர்களுக்கு எந்த வகையில் உதவுவார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.






