முரசொலி தலையங்கம்

மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!

மேகதாது விவகாரம் குறித்துப் பேச கர்நாடகவிற்கு முதல்வர் விஜய் செல்வதால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும், வீடியோ வேண்டுமானால் போடலாம் விடியலைத் தராது என முரசொலி விமர்சித்துள்ளது.

மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

வீடியோ போடலாம், விடியலைத் தராது!

மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கணக்குக் காட்ட நினைத்தார் முதலமைச்சர் விஜய். 'இதனால் எந்தப் பயனும் இல்லை' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததும் பின்வாங்கி விட்டார் விஜய். இருப்பினும் முதலமைச்சர் விஜயை வரவைத்து அந்த நாடகத்தையும் நடத்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தயார் ஆகி வருகிறது.

“கர்நாடகா வரும் முதலமைச்சர் விஜய்யை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன். அவரிடம் கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து விளக்குவேன். காவிரி விவகாரம் குறித்து தொலைபேசி யில் முதலமைச்சர் விஜய் என்னிடம் பேசினார். கர்நாடகாவின் நீர்நிலைகளைப் பார்வையிடவும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை முதலமைச்சர் விஜய் பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்லி இருக்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரும் -தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்பது அம்பலம் ஆகிவிட்டது. 'விஜய் என்னிடம் பேசினார்' என்று கர்நாடக முதலமைச்சர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டார். 'எங்களுக்கு கர்நாடகம் செல்லும் திட்டம் இல்லை' என்று த.வெ.க. அரசு மழுப்பியதும் பொய்தான் என்பதை கர்நாடக முதலமைச்சரின் பேட்டி உடைத்து விட்டது.

கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸ் அரசு. இங்கே இருப்பது காங்கிரஸ் தயவிலான த.வெ.க. அரசு. எனவே கர்நாடக காங்கிரஸ் அரசை விஜய் அரசால் வெளிப்படையாக எதிர்க்க முடியாது. இந்த நிலையில் இரண்டு தரப்பும் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களை, உழவர் பெருமக்களை ஏமாற்றும் முயற்சிகள் ஆகும்.

மேகதாது அணை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார். மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் வழங்குவது குறித்து கர்நாடக மாநில சட்டத்துறை அதிகாரிகளுடனும் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்தியதாகச் செய்திகள் வருகின்றன.

கர்நாடக மாநில எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சரும் கலந்து கொண்டுள்ளார். ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மேகதாது அணையைக் கட்டியே தீருவது என்பதில் கர்நாடக மாநில அரசு எத்தகைய தீவிரத்துடன் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!

“கர்நாடக எல்லைக்குள் மேகதாதுவில் அணை கட்ட மற்ற மாநிலங்களின் அனுமதி தேவையில்லை. இதை உச்சநீதிமன்றமே சொல்லி விட்டது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சரும் மாநிலங்கள் அவையில் சொல்லி விட்டார். அதற்காக கர்நாடக மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கர்நாடக மாநில எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் கூட்டுச் சேர்ந்து தமிழ்நாட்டின் உரிமையைத் தடுக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி இழுத்தடிக்க நினைக்கிறார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து பேசும் துணிச்சலும் இல்லை. காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்கும் துணிச்சலும் இல்லை. இரண்டுமற்ற அரசாக விஜய் அரசு இருக்கிறது.

“உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பது ஆகும். எனவே, இது குறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை. இது கர்நாடக அரசிடம் தமிழ்நாடு பணிந்து போகும் நிலை ஆகும். மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? அவர்களது பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா?” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது முழு உண்மை ஆகும்.

காவிரி நடுவர் மன்றம், காவிரி கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை மதிக்காமல் இத்தனை ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது கர்நாடக மாநில அரசு. அங்கே காங்கிரஸ் கட்சி ஆண்டாலும், பாரதிய ஜனதா கட்சி ஆண்டாலும் இதே நிலைமைதான்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர கர்நாடகம் மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பு. சட்ட மீறல். மேகதாது அணைகட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவது ஆகும். மேகதாது பிரச்சினைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இப்போது பேச்சுவார்த்தை என்று போவது, நம் சட்டமன்றத்தின் மாண்பை விட்டுக் கொடுப்பது ஆகும். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறான நிலைப்பாடு ஆகும்.

தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் செயலை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செய்யக் கூடாது. சட்ட ரீதியாக தமிழ்நாட்டு காவிரி உரிமை நிலைநாட்டப்பட்ட ஒன்று. அதனை அடகு வைத்து விடக் கூடாது.

முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று அணைக்கு முன்னால் நின்று வீடியோ போடுவதற்கு வேண்டுமானால் இது பயன்படுமே தவிர, உழவர்களுக்கு விடியலைத் தராது.

banner

Related Stories

Related Stories