அரசியல்

“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (செப்.19) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னை, அண்ணா அறிவாயம் கலைஞர் அரங்கில் இன்று (செப்.19) நடைபெற்ற திமுக முப்பெரும் விழா 2026-ல் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள், அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள் - இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழாவாகக் கொண்டாடி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தையே நாம் ‘திராவிட மாதமாக’க் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!

கடந்த 15-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த விழா, திடீரென்று எனக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் என்னை இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், எனக்கு மனசு கேட்கவில்லை. அதனால் தான், தந்தை பெரியார் பிறந்தநாளன்றே அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்தேன். இன்று இந்த முப்பெரும் விழாவுக்கும் வந்திருக்கிறேன்.

தலைவர் கலைஞர் தொடங்கி வைத்த இந்த முப்பெரும் விழாக் கொண்டாட்டத்தில், கழகத்திற்காக உழைத்த தீரர்களுக்கு தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகளைப் பெற்றுள்ளவர்களின் சிறப்புகளை, அவர்கள் ஆற்றியிருக்கும் அரும்பணிகளை, தியாகப் பணிகளை இங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் நீங்கள் பார்த்தீர்கள்.

தந்தை பெரியார் விருதைப் பெற்றுள்ள அண்ணன் கு. செல்லப்பா அவர்கள் – இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைதாகி, 81 நாட்கள் சிறையில் இருந்த பெருமைக்குரியவர்.

பேரறிஞர் அண்ணா விருதைப் பெற்றுள்ள சேலம் ஜி.கே. சுபாஷ் அவர்கள் – தலைவர் கலைஞர் அவர்களே, “அவரை சுபாஷ் என்று சொல்வதைவிட “சபாஷ்” என்றுதான் பாராட்டுவேன்” என்று சொல்லியிருக்கிறார்!

தலைவர் கலைஞர் விருதை என்னுடைய அருமைச் சகோதரர் திருச்சி சிவா பெற்றிருக்கிறார். மிசா சிறைவாசம் முதல், இளைஞரணி தொடங்கி இன்றுவரை என்னுடன் பயணித்துக் கொண்டிருப்பவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உடன்பிறப்புகள் எல்லாம் என்னை அன்போடு, பாசத்தோடு “தளபதி, தளபதி” என்று அழைக்கிறீர்களே, அதை முதன்முதலில் எனக்கு சூட்டியவரே அவர்தான்.

“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பாவேந்தர் பாரதிதாசன் விருதைப் பெற்றுள்ள டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு அவர்கள் – மூன்றாவது தலைமுறையாகக் கழகத்திற்குத் தொண்டாற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர். விபத்தில் சிக்கி மறைந்த நம்முடைய ஆருயிர் அண்ணன் என்.வி.என். சோமு அவர்களுடைய அருமை மகள்.

பேராசிரியர் விருதைப் பெற்றுள்ள மிசா அகமது தம்பி அவர்கள் – அவருடைய பெயரிலேயே 'மிசா'வைத் தாங்கி, அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கழகத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டுள்ள தியாகி!

மு.க. ஸ்டாலின் விருதைப் பெற்றுள்ள தம்பி இளையராஜா அவர்கள் – ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உழைப்பால் உயர்ந்து, இளைஞர்களைக் கழகத்தை நோக்கி ஈர்த்து வரும் ஆற்றலைக் கொண்டிருப்பவர்!

என்மீது பெருத்த நம்பிக்கையோடு என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்திய எனக்கு ஒரு அரசியல் ஆசானாகவே விளங்கிய நம்முடைய அன்புக்குரிய முரசொலி செல்வம் விருதைப் பெற்றுள்ள மூத்த ஊடகவியலாளர் ப. திருமாவேலன் அவர்கள் – தனது கூர்மையான எழுத்துக்களால் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், தியாகத்தையும், தேவையையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பவர்.

இவர்கள் அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பாகவும், கழக உடன்பிறப்புகளான உங்கள் சார்பாகவும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள்! இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து, இதை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கும் நம்முடைய அருமை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிற்றரசு அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். அவருக்கு துணை நின்ற அத்தனை தோழர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

இப்படிப்பட்ட விருதுகளைப் பெறத் தகுதியுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களைப் பெற்றுள்ள இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்!

ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்து நிற்பது சாதாரண சாதனை கிடையாது! 75 ஆண்டுகளுக்குப் பிறகும், அதே கம்பீரத்தோடு காட்சி அளிப்பதும் சாதாரண சாதனை கிடையாது! இந்தச் சாதனை யாரால் வந்தது? விருது பெற்ற இவர்களைப் போன்றவர்களால் வந்தது! இந்த அரங்கத்தில் கூடியிருக்கும் உங்களைப் போன்றவர்களால் வந்தது!

அதுமட்டுமல்ல, அறிவாலயத்திற்குக்கூட வராமல், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் கழகத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் நமது தீரமிக்க உடன்பிறப்புகளால் இந்தச் சாதனை வந்தது! அவர்களால்தான் நான் வாழ்கிறேன்! அவர்களை நம்பித்தான் நான் வாழ்கிறேன்! அவர்கள் இருக்கிறார்கள் என்ற மன உறுதியில்தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்!

என்னைத் தலைவராக்கியது யார்? உடன்பிறப்புகளான நீங்கள்! என்னை முதலமைச்சர் பதவி வரைக்கும் உயர்த்தி அழகு பார்த்தது யார்? கழக உடன்பிறப்புகளான நீங்களும், தமிழ்நாட்டு மக்களும்தான்! தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அத்தனை உடன்பிறப்புகளுக்கும் இந்த நேரத்தில் என் முப்பெரும் விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த இயக்கத்திற்கு கொள்கையும் லட்சியமும்தான் முக்கியம். நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பார்க்காத தோல்வியும் இல்லை! இன்னும் சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றிய கட்சிக்கும் நமக்கும் வித்தியாசம் என்ன? 17 லட்சம் வாக்குகள் தான். எதிரி யார் என்று சரியாகக் கணித்துப் பணியாற்றியிருந்தால், இந்தத் தோல்வியே ஏற்பட்டிருக்காது!

ஆட்சி அமைத்துள்ள கட்சிக்கு, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், ஏதோ பெரிய அலை அடித்தது போலவும், தமிழ்நாடே அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தது போலவும் 'இமேஜ் பில்டப்' செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களின் ஆட்சி நடப்பதே நம் கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவோடுதான். ஆனால், ஆதரவு தந்த அந்தக் கட்சிகளையும் நம்பாமல், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருப்பதுதான் ஆளுங்கட்சியின் லட்சணம்!

இப்படியொரு பலவீனமான ஆட்சியை அமைத்துள்ள ஒரு கட்சி என்ன செய்ய வேண்டும்? நியாயமாக, மக்கள் நலத்திட்டங்களைச் செய்து நல்ல பெயர் வாங்கப் பார்க்க வேண்டும். ஆனால் அதையா செய்கிறார்கள்? இப்போது ஆளும் த.வெ.க. அரசின் வேலை என்ன? நம் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவது; இல்லை என்றால் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவது. இதுதான் மாற்றமா?

முதலமைச்சரைப் பொறுத்தவரை, தினமும் 'ஷூட்டிங் மூட்'-இல் தான் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிவிட்டு, யார் இயக்குனர், யார் கேமராமேன் என்று சொல்லாமல் இப்போது மக்கள் முன்னாடி நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் பஞ்ச் டயலாக், இப்போது ஃபாரின் ஷூட்டிங்! எல்லாமே 'ரீல்ஸ்'தான்!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியை சற்றேறக்குறைய 25 ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்! இதுவே நம் திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திருந்தால், இந்நேரம் மகளிருக்கு உரிமைத் தொகையாக 2,000 ரூபாய் கிடைத்திருக்கும்! அனைத்துக் குடும்பங்களுக்கும் 8,000 ரூபாய் இல்லத்தரசி கூப்பன் கிடைத்திருக்கும்! 25 லட்சம் உழவர்களுக்குப் புதிய மின்சார மோட்டார்கள் வழங்கியிருப்போம்!

ஆனால், மக்களுக்கு உதவாத இந்த உதவாக்கரை ஆட்சியில் என்ன நடக்கிறது? நான்கு மாதங்களுக்கு முன்னால் அரிசி, பருப்பு, சர்க்கரை எல்லாம் என்ன விலைக்கு விற்றன... இன்று என்ன விலைக்கு விற்கின்றன? விலைவாசி உயர்வே இந்த ஆட்சியின் லட்சணத்தைச் சொல்லப் போதும்! நம் ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்தது; ஆனால், இந்தத் த.வெ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வில் முதன்மை மாநிலமாக ஆகப்போகிறோம்!

“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சரைப் பொறுத்தவரைக்கும், அவரது குறைகளை, அவர் நடத்திக் கொண்டிருக்கும் துக்ளக் தர்பாரை மக்கள் பேசக்கூடாது என்பதற்காக அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், இப்போது நாட்டிற்கு அவசியமான செய்தி என்ன தெரியுமா? "முதலமைச்சர் இன்று கோட் போட்டார்", "வெள்ளிக்கிழமையா... பட்டு வேட்டி – பட்டு சட்டை!", "நெற்றியில் என்ன நிறப் பொட்டு?", "கையில் என்ன கயிறு?", "ஜோசியர் இன்று என்ன சொல்லியிருக்கிறார்?" - இதுதான் இன்றைக்குச் செய்திகளாகிவிட்டன. முதலமைச்சரும் 'இதைச் செய்தாலே போதும்' என்ற மனநிலையில்தான் இருக்கிறார்.

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, டிரில்லியன் டாலர் பொருளாதாரம், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்' என்று பேசப்பட்ட நாட்டில்... அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி கோட்-சூட், வேட்டி, சட்டை, காலால் நடந்தார், கையால் சைகை செய்தார், வாயால் சாப்பிட்டார் என்றுதான் செய்திகள் வருகின்றன; அதைத்தான் டிரெண்டும் செய்கிறார்கள்! இதையெல்லாம் பார்ப்பதற்கே மிகவும் அருவருப்பாக - அசிங்கமாக இருக்கிறது!

அவரின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், த.வெ.க. ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டியே... ஒன்று மின்வெட்டு! இன்னொன்று அரிவாள் வெட்டு! இப்படித்தானே ஆக்சன் செய்வார். எது அதிகம் என்பதுதான் போட்டியே! பட்டப்பகலில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், ஆளுங்கட்சியினரே போதைப்பொருட்களை விற்பனை செய்வது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது என குற்றவாளிகளின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மாறியிருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை! ஆனால், முதலமைச்சராக இருப்பவருக்கு இதைப் பற்றியெல்லாம் துளிகூடக் கவலையே இல்லை.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, இப்படி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், இவர்களால் மக்களை எல்லா நாளும் ஏமாற்ற முடியாது!

“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கடந்த வாரம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ததாக முதலமைச்சரே சொன்னார். இதற்கு முன்னால் நான் வெளிநாட்டுக்குப் பயணம் செய்தபோது என்ன பேசினார்? "சி.எம். சார்... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?" என்று மேடையில் கத்தினார். அவர் அளவிற்கு நான் இறங்கி வரத் தயாராக இல்லை. இப்போது, நான் அல்ல; தமிழ்நாட்டு மக்கள் அவரைப் பார்த்து, "சி.எம். சார்... இந்தியாவில் இருக்கும் நிறுவனத்திற்கு எதுக்கு லண்டனில் போய் கையெழுத்து போடுகிறீர்கள்?" என்று சத்தமாகக் கேட்கிறார்கள். அதைவிட இன்னொரு பெரிய கொடுமை என்ன தெரியுமா? தொழில்துறை அமைச்சர் இல்லாமல், தொழில்துறை செயலாளர் இல்லாமல் முதலீடுகளை ஈர்க்கப் போயிருக்கிறார் முதலமைச்சர். இதுதான் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணமா?

அதுமட்டுமல்ல, ரீல்ஸ் வெறி பிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம்கூடத் தனது மாண்பை இழந்து இப்போது நிற்கிறது! நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரைப் பார்த்திருப்பீர்கள்; அதை நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். என்ன நடக்கிறது? முதலமைச்சர் சிரிப்பதைப் பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டு, சட்டமன்றப் பேரவையில் ஸ்கிரீன் வைக்கச் சொல்லி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்கிறார்கள். இதுதான் நாட்டிற்குத் தேவையா?

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நம்முடைய தம்பி உதயநிதி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிசா – சர்க்காரியா கமிஷன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசி அவதூறுகளைப் பரப்புகிறார்கள்; டைவர்ஷன் செய்கிறார்கள்.

மிசாவைப் பற்றிப் பேசுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:

"என் மிசா கைதை உங்கள் எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!"

"என்னுடைய தியாகத்திற்கு மதிப்பெண் போட உங்கள் எவனுக்கும் தகுதி கிடையாது!"

என் மிசா வரலாற்றை, அண்ணன் சிட்டிபாபு தனது சிறை டைரியில் பதிவு செய்திருக்கிறார். அதுதான் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு. அதுமட்டுமல்ல, சிறைச்சாலைச் சித்திரவதைகளைப் பற்றி விசாரிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமைத்த இஸ்மாயில் கமிஷனின் அறிக்கை இருக்கிறது. சாட்சி எல்லாம் சென்று சொல்லி இருக்கிறேன். அனைவரும் வந்து சொன்னார்கள். படிக்கத் தெரிந்தவன் அதையெல்லாம் எடுத்துப் படிக்கட்டும்.

வாக்களித்த மக்கள் வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டால், அவதூறு பரப்பி ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கட்சிக்கு நியாயமாக 'தமிழக வெற்றிக் கழகம்' என்று இல்லாமல், 'தமிழக ரீல்ஸ் கழகம்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்! தி.மு.க. தந்தது ரியல் ஆட்சி! இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி!

ஒரு முறை மக்கள் ஏமாந்திருக்கலாம். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால், ஏமாறப்போவது இப்போது இருக்கும் முதலமைச்சர்தான். அவதூறுகளைப் பரப்பி, கொச்சையாகப் பேசி, தி.மு.க.வை அவமானப்படுத்தலாம், பலவீனப்படுத்தலாம் என்று நினைத்துப் பலர் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் 78 வருடங்களாக நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன இந்த அவதூறுகளைப் பரப்பும் எதிரிகள்தான் மாறிக் கொண்டிருக்கிறார்களே தவிர, நாங்கள் உறுதியாக நிலைத்து நின்று கொண்டுதான் இருக்கிறோம். தன்னை விட இயக்கமும் கொள்கையும்தான் பெரிது என்று நினைக்கிறவர்கள்தான் எங்கள் உடன்பிறப்புகள். நாங்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர காத்திருக்கிறோம். நேரம் விரைவிலேயே வரும்.

“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விரைவில் இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வரப்போகிறது! இது முறையாக வரும் தேர்தலா? இல்லை, திணிக்கப்பட்ட தேர்தல்! எவ்வளவு அகம்பாவம் இருந்தால், வேறு கட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை விரலில் வைத்த மை ஈரம் காயவதற்கு முன்னால் ராஜினாமா செய்ய வைத்திருப்பார்கள்? அதுமட்டுமல்ல, வெட்கமே இல்லாமல் இப்போது அவர்களையே தங்களுடைய சின்னத்தில் மீண்டும் நிற்க வைத்திருக்கிறார்கள். கேட்டால் – குதிரை பேரம் இல்லையாம்; தூய ஆட்சியாம்! இதுதான் இவர்களின் மானங்கெட்ட மாற்றமா!

பொதுவாகச் சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால்தான் இடைத்தேர்தல் வரும். முதல்முறையாக ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வருகிறது. இதைத்தான் நம் உடன்பிறப்புகள் ஆட்சியின் தோல்விகளோடு சேர்த்து, இரண்டு தொகுதியிலும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அரசாங்கமே இன்றைக்குச் செயலிழந்து போயிருக்கிறது. காலையில் கூடச் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்; ஒரே நாளில் 8 கொலைகள்! அதுவும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில். இரட்டைக் கொலைகள், ஆணவக் கொலைகள், லாக்கப் படுகொலைகள், டாஸ்மாக் தகராறு கொலைகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலைகள் என ஒவ்வொரு நாளும் விடிந்தால் எண்ண முடியாத அளவிற்கு கொலைகள்.

மின்சாரம் இல்லாமல் நடுராத்திரியில் குழந்தைகளோடு மக்கள் போராடுகிறார்கள்! தொழில்கள் எல்லாம் முடங்கிக் கிடக்கின்றன! ஏழை மக்களுக்கு எட்டாத அளவிற்கு விலைவாசி உயர்ந்து, பெண்கள் எல்லாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கவே பயப்படுகிறார்கள்! வருமானம் போதவில்லை! இவர்கள் சொன்ன 2,500 ரூபாயும் வரவில்லை! பணம் கொடுத்தாலும் ஆவின் பால் கிடைக்கவில்லை! ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது; 12 பேர் இறந்துவிட்டார்கள். இனிமேல்தான் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.

இது எல்லாவற்றையும் கவர்ச்சியால் சரிகட்டலாம் என்று ஆணவத்தோடு இருக்கும் ஒருவர்தான் முதலமைச்சராக இருக்கிறார். ஊடகங்களைச் சந்தித்துப் பதில் சொல்ல மாட்டேன் என்று திமிராக இருக்கிறார். இந்தத் திமிர்த்தனத்திற்கும் ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

அதனால், மதுராந்தகம், தாராபுரம் வாக்காளப் பெருமக்களே! ஆளுங்கட்சிக்குத் தக்க பாடம் புகட்டத் தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் என்று இந்த முப்பெரும் விழா மேடையில் நின்று கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம் காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றம் கண்டதால்தான் 78 ஆண்டுகளுக்கும் மேலாகத் தி.மு.க. அதே வலிமையோடு இருக்கிறது. அதற்கு இன்னும் வலிமை கூட்டத்தான் கழக மறுசீரமைப்புச் செய்யத் தொடங்கியுள்ளோம். நம்மை மாற்றிக் கொண்டு, மக்களையும் கவர்ச்சியில் இருந்து மாற்ற வேண்டும்.

இன்றைய "Gen Z" இளைஞர்களையும் கவர வேண்டும் என்றால், அவர்களின் மொழியில் பேச வேண்டும். அதுவும் எப்படிப் பேச வேண்டும்? அவர்களின் கைப்பேசியில் போய் சேரும் வகையில் பேசுங்கள்!

கழகப்பணி செய்வோம்! இயக்கம் காப்போம்! தமிழ்நாட்டைக் காப்போம்! தமிழ்நாட்டை மீட்போம்!

banner

Related Stories

Related Stories