கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.
இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அங்கும் சிறப்பாக செயல்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். இந்த நிலையில், உடற்பயிற்சி செய்வதே அதிக தொலைவுக்கு சிக்ஸர் அடிப்பதற்கான ஆற்றலை எனக்குத் தருகிறது என ரிங்கு சிங் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " ஐபிஎல் போட்டிகளில் நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியது எனக்கு நம்பிக்கையளித்தது. நான் என்னை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். தினசரி உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று பளுதூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன். அந்த உடற்பயிற்சி அதிக தொலைவுக்கு சிக்ஸர் அடிப்பதற்கான ஆற்றலை எனக்குத் தருகிறது" என்று கூறியுள்ளார்.