ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது. இதனிடையே தற்போது அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அணிகள் தக்கவைத்த, விடுவித்த, பரிமாற்றம் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கியுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இப்படி நடைபெறும் மாற்றங்கள் ஐபிஎல் தொடருக்கு நல்லதல்ல என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இயக்குனர் ஜாய் பட்டாச்சாரியா விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " ஒரு வீரர் உங்கள் அணியில் விளையாடப் பிடிக்கவில்லை. என்னை ஏலத்தில் விட்டு விடுங்கள். ஆனால் ஏலத்தில் என்னை எடுக்காதீர்கள். உங்கள் அணிக்காக மட்டும் நான் விளையாட மாட்டேன் என்று கூறுவதெல்லாம் சரி கிடையாது. இது போன்ற நடைமுறையை நாம் ஊக்குவிக்கக் கூடாது.ஏனென்றால் ஐபிஎல் எதிர்காலத்திற்கு இது நல்லது கிடையாது.
2010 ஆம் ஆண்டு இதேபோன்ற சம்பவத்தில் ஜடேஜா ஈடுபட்டபோது அதனை ஐபிஎல் நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. ஆனால் தற்போது 2023 ஆம் ஆண்டு ஒரு பெரிய வீரரை இவ்வாறு வேறு அணிக்கு மாற்ற ஐபிஎல் அனுமதித்திருப்பது ஆச்சிரியம் அளிக்கிறது. இது போன்ற ஒரு நடைமுறையை தொடங்கினால் இனி பலவீரர்களும் இதையே பின்தொடர்வார்கள்" என்று கூறியுள்ளார்.