தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த திமுக மூத்த முன்னோடியும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை (ஜன. 4) காலமானார்.
சட்டப்பேரவை, மேலவை, மக்களவை, மாநிலங்களவை என 4 விதமான பொறுப்புகளிலும் பதவி வகித்த இவர், 1980-ல் மாநிலங்களவை எம்.பி.யாகவும், 2004-ல் திருச்சி மக்களவை உறுப்பினராகவும், ஒரத்தநாடு தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தார்.

எல்.ஜி. என்று அழைக்கப்படும் எல்.கணேசன், முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவில் இருந்தார். அதோடு 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மை வகித்த இவர், நாட்டின் அவசரநிலையின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.
திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய எல்.கணேசன் இன்று (ஜன.4) வயது மூப்புக் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கழகத்தினர், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே இரங்கல் பதிவையும் வெளியிட்டார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
மொழிப்போர்க் களத்தில், இந்திமொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் - கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான திரு. எல். கணேசன் அவர்கள் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன்.

சட்டமன்றம் - சட்டமேலவை - நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்தைப் பெற்ற 'எல்.ஜி.' அவர்கள், 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார்.
திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் கழக உடன்பிறப்புகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.








