
இந்திய ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க, பல்வேறு இன மொழிகளை அழித்து இந்தியை திணிப்பதுபோல், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மாநில அரசே இந்தியைத் திணித்து வரும் ஒவ்வாத நடவடிக்கையை த.வெ.க அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனைக் கண்டித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,
“கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்கு அடுத்து தற்போது இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஐந்து மாத தவெக ஆட்சியில், நெடுஞ்சாலை பெயர்ப் பலகைகள் தொடங்கி தற்போது அரசு மருத்துவமனைகள் வரை, தமிழகத்தின் பொது நிர்வாகத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் இந்தி படிப்படியாகத் திணிக்கப்படுவது கவலையளிக்கிறது.
இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுப்பதன் மூலம், உங்களுடைய Paid Promotion வடக்கு நண்பர்கள் வாயிலாக All India Famous ஆகலாம் என Route போட்டுக்கொடுத்தது யார்? உங்களின் அற்ப அரசியல் ஆசைக்காக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையையே சமரசம் செய்கிறீர்களா?
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23 ஜனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டீர்களா, மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களே?
தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தொடரும். இந்தித் திணிப்புக்கு தமிழ்நாட்டில் என்றும் இடமில்லை என்பதையாவது தங்களின் திருவாய் மலர்ந்து சொல்ல திராணி இருக்கிறதா முதல்வரே விஜய்?”






