
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.3) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, UDISE+ தரவுகளின் அடிப்படையில் 9,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்கிற தகவல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அது குறித்த விவரம் பின்வருமாறு,
“ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
கல்வி ஆய்வுகளால் ஆசிரியர்கள் இல்லாமையை கண்டறிந்து, அத்தகைய பற்றாக்குறையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

வளங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட மதிப்பாய்வுகளின் விவரங்கள் என்ன?” எனும் பல்வேறு கேள்விகளையும் அவர் கேட்டுள்ளார்.
மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி செல்வகணபதி, “ஆண்டுக்கு 650 கோடி லிட்டர் எத்தனால் வழங்கும் திறன் கொண்ட சர்க்கரை சார்ந்த தீவனப் பொருட்களிலிருந்து 289 கோடி லிட்டர் அல்லது மொத்தத் தேவையில் 28% எத்தனால் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளின் உண்மைத்தன்மை என்ன?
சர்க்கரைத் தொழிலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கவும், சர்க்கரை ஏற்றுமதி கொள்கையை அறிவிக்கவும், எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்கவும் வைத்த கோரிக்கைகளின் மீதான நடவடிக்கை என்ன?” என ஒன்றிய பா.ஜ.க அரசை கேள்வி எழுப்பினார்.






