
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (03.12.2025) சென்னை அரசு இராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டிலான அதிநவீன 1.5 டெஸ்லா MRI கருவி, ரூ.35.95 இலட்சம் மதிப்பிலான முழுமையாக தானியங்கும் புற இரத்தக்குழாய் நோயறிதல் கருவி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து;
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அரசு புனர்வாழ்வு மருத்துவ நிலையம் சார்பாக ரூ.4.56 இலட்சம் செலவில் அதிநவீன செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகள் ஆகிய உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி, “அமைச்சருடன் நிமிர்ந்து நட” முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வளைவான முதுகெலும்பு குறைபாடுகளை அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்யப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் மூலம் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
நிமிரிந்து நட
மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வகைகளில் புதிய சாதனைகள் தொடர்ச்சியாக படைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த வாரம் சென்னை அரசு இராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் பணியாற்றுகின்ற 7 பெண் மருத்துவர்கள் Hand Transplanation என்கின்ற வகையில் கை மாற்று அறுவை சிகிச்சை செய்து 26 வயது பீகார் இளைஞருக்கு செய்த அந்த சிகிச்சை மிகப் பெரிய அளவிலான பாராட்டுக்களை பொதுமக்களிடையே பெற்று தந்திருக்கிறது.
அதேபோல் இந்த மருத்துவமனையில் பல்வேறு வகைகளிலான சாதனைகள் தொடர்ச்சியாக படைக்கப்பட்டு வருகிறது. முதுகெலும்பு குறைபாடுகளை சீர்செய்யும் மையம் இந்த அரசு மருத்துவமனையில் இருக்கிறது.

இந்த மையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 100த்திற்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் வெற்றிகரமாக முதுகெலும்பு குறைபாடு அறுவை சிகிச்சை செய்து பயனடைந்திருக்கிறார்கள்.
அந்தவகையில் வளைந்த முதுகு, கோணலான முதுகு ஆகியவற்றுடன் இளஞ்சிறுவர்கள் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாவது மட்டுமல்லாமல் சமூகத்தில் ஒரு மாதிரியாக கிண்டல், கேலிகளுக்கு உள்ளாகின்றனர். அத்தகையவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் கட்டணமின்றி சிகிச்சை செய்து அவர்கள் இன்று நலன் பெற்றிருக்கிறார்கள்.
அந்தவகையில் 10 இளம் சிறுவர்களுக்கு முதுகு தண்டு குறைபாடுகளை சீர்செய்யும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு மிகப் பெரிய அளவில் பலன் பெற்றிருக்கிறார்கள். முதுகெலும்பு குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு என்பது தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வரும் நிலையில் 10 இளம் பயனாளர்கள் இதனால் பயன்பெற்று நிமிர்ந்த நிலையில் நடக்க முன்வந்திருக்கிறார்கள்.
நிமிர்ந்து நட என்னும் விழிப்புணர்வு நடைபயணத்தை இத்துறையின் சார்பில் இளம் சிறுவர்களுடன் நடந்து முடித்திருக்கிறோம். இச்சிறுவர்கள் இப்பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி நிமிர்ந்து நடப்பதற்குரிய நிலையினை எட்டியிருக்கிறார்கள். அவர்களை ஊடகவியலாளர்கள் முன்பு அறிமுகப்படுத்துவதில் இத்துறை பெருமை கொள்கிறது. இந்த அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவர்களை இத்துறையின் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.
மருத்துவ உபகரணங்கள்
இம்மருத்துவமனையைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, பல்வேறு புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அதிநவீன 1.5 டெஸ்லா MRI இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மருத்துவ பயனாளர்கள் தினந்தோறும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் சென்னை மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலிருந்தும் கூட மருத்துவ பயன் பெறுகின்ற மருத்துவமனையாக இருக்கின்ற காரணத்தினால் அவ்வப்போது மருத்துவ உபகரணங்களை புதிது புதிதாக அமைப்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கின்றது.
அந்தவகையில் இன்று இந்த உபகரணம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் மூலம் ஒரு நாளைக்கு 40 பயனாளர்கள் பயன்பெற முடியும் என்கின்ற வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோன்று ரூ.35.95 இலட்சம் செலவில், முழுமையாக தானியங்கும் புற இரத்தக்குழாய் நோயறிதல் கருவி (Fully Automated Peripheral Vascualar Diagnostic System) பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இக்கருவியின் மூலம் இரத்த நாளங்களில் பல இடங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கவும், நேரடி இரத்த ஓட்ட அலை வடிவம் பார்க்க முடியும்.
இதன் மூலம் நீரிழிவு நோயாளியின் இரத்த குழாயில் ஏற்படும் அடைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து உடனடி மருத்துவ முடிவு எடுக்க வசதியாகவும் உரிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவ பயனாளியின் கால் அகற்றப்படுவதை தவிர்க்க முடியும்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
உலக மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மருத்துவ பயனாளர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மருத்துவ பயனாளர்களுக்கு மூன்று சக்கர வாகனங்களும், அதேபோல் அவர்களுக்குரிய செயற்கை கால்களும் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரூ.65 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் துறை கட்டிடம்
இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னாள் நாம் அமர்ந்திருக்கின்ற இக்கட்டிடத்தில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டு இக்கட்டிடம் பெரிய அளவில் பழுதானது. இக்கட்டிடம் பழமை வாய்ந்த கட்டிடம். தீ விபத்து ஏற்பட்ட போது இம்மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மருத்துவ பயனாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றினார்கள்.
இவ்விபத்து ஏற்பட்ட அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் விபத்து ஏற்பட்ட இக்கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார்கள். அந்தவகையில் இந்த கட்டிடம் ரூ.65 கோடி மதிப்பீட்டில் 1,12,247 சதுர அடி பரப்பளவில் இன்றைக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நரம்பயில் துறைக்கு சொந்தமான இக்கட்டிடம் 4 தளங்களை கொண்டது. இக்கட்டிடத்தில் மருத்துவ உபகரணங்கள் பொறுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் இப்பணிகள் முடிவடைந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இக்கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவிருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.






