அரசியல்

பாஜக செய்த தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி : முரசொலி தாக்கு !

'எதையாவது' வைத்து, வாக்குகளை மடை மாற்றிக் கொள்ள பா.ஜ.க. தனது சதிச் செயலை ஒவ்வொரு தேர்தலிலும் செய்துவருகிறது. இதனை கட்டுரையாக எழுதி அம்பலப்படுத்தி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

பாஜக செய்த தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி : முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (10-06-2025)

தேர்தலில் பா.ஜ.க.வின் சதிகள்!

மக்களுக்கு நன்மை செய்து வாக்குகளை வாங்கும் ஜனநாயக வழிமுறை பா.ஜ.க.வுக்குத் தெரியாது. 'எதையாவது' வைத்து, 'எதன் மூலமாவது' வாக்குகளை மடை மாற்றிக் கொள்ள பா.ஜ.க. தனது சதிச் செயலை ஒவ்வொரு தேர்தலிலும் செய்துவருகிறது. இதனை டெல்லி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் கட்டுரையாக எழுதி அம்பலப்படுத்தி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தி இந்தக் கட்டுரையை அவர் எழுதி இருக்கிறார்.

ராகுல் காந்தியின் இந்தக் கட்டுரையை அனைத்து எதிர்க்கட்சி களும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் - கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் - என்பதற்கு இணையானது பா.ஜ.க.வின் இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் ஆகும்.

“மராட்டிய மாநிலத் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. அதில் நடந்த மோசடியை மறைக்க எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி, அது தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிகிறது. அதனை நான் உங்களுக்கு பட்டியலிட்டு சொல்கிறேன்” என்ற முன்னோட்டத்துடன் இந்தக் கட்டுரையை ராகுல் காந்தி எழுதி இருக்கிறார்.

பாஜக செய்த தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி : முரசொலி தாக்கு !

•முதலாவது, தேர்தல் கமிஷனரை நியமிக்கும் குழுவை ஒன்றிய அரசு மாற்றி அமைத்தது. அதற்காக 2023- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, குழுவில் இருந்த தலைமை நீதிபதி நீக்கப்பட்டார். தற்போது அதில் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய மூவர் இருக்கிறார்கள். அதில் பிரதமர், உள்துறை அமைச்சர் எடுக்கும் முடிவுக்கு, எதிர்க்கட்சித் தலைவரால் என்ன செய்யமுடியும்?

•இரண்டாவது, போலியான வாக்காளர்களைச் சேர்த்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு மராட்டிய சட்டசபைத் தேர்தலின் போது 3.93 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2024-ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலின் போது இது 9.29 கோடியாக உயர்ந்தது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாத சட்டசபைத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிகரித்துவிட்டது. அதாவது 2019 மற்றும் 2024 -ஆம் ஆண்டுகளுக்கு இடையே 5 ஆண்டுகளில் 31 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2024- ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்துக்குள் 5 மாதத்தில் 41 லட்சம் பேர் சேர்த்து இருக்கிறார்கள்.

•மூன்றாவது, வாக்குச் சதவீதம் அதிகமானது. தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, மராட்டிய தேர்தலில் மாலை 5 மணி வரை 58.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆனால் இறுதி வாக்கு சதவீதம் 66,05 சதவீதம் என்று உள்ளது. அதாவது 5 மணிக்கு மேல் அதிகம் பேர் வாக்களித்து இருக்கிறார்கள் : இதனால் 7.33 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது 76 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

•நான்காவது போலி வாக்குகள். மராட்டியத்தில் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆனால் அதில் 35 தொகுதிகளில் உள்ள 12 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மட்டும் புதிய வாக்காளர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சாவடிக்கும் சராசரியாக 600 வாக்காளர்கள் மாலை 5 மணிக்குப் பிறகு வந்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படை கணக்கிட்டால் வாக்களிப்பு இரவு 10 மணி வரை நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அப்படியானால் இந்த கூடுதல் வாக்குகள் எப்படி பதிவானது?. இந்த 85 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணியானது பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருக்கிறது.

உதாரணமாக காம்தி சட்டசபைத் தொகுதியை எடுத்துக் கொள்ளலாம். கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் 1.36 லட்சம் வாக்குகள் வாங்கி- யது. பா.ஜ.க. 1.19 லட்சம் வாக்குகள். அதே ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அதே 1.36 லட்சம் வாக்குகளைப் பெற்றது. ஆனால் இப்போது பா.ஜனதா 1.75 லட்சம் வாக்குகளைப் பெற்று இருக்கிறது. அதாவது 56 ஆயிரம் வாக்குகள் அதிகரித்து இருக்கிறது. இது எப்படி முடிந்தது?. இந்த இரண்டு தேர்தல்களுக்கு இடையில், காம்தியில் 35 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காதவர்களும், இந்த 35 ஆயிரம் புதிய வாக்காளர்களும், ஏனோ துல்லியமாக பா.ஜ.க. பக்கம் கவரப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த கவர்ச்சிக்கு ஈர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தால், அதில் ஒரு 'தாமரை' வடிவம் கொண்ட தொலைநிலை காந்தம் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாஜக செய்த தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி : முரசொலி தாக்கு !

•ஐந்தாவது ஆதாரங்களை அழிப்பது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை நாங்கள் கேட்டதற்கு, தேர்தல் கமிஷன் கொடுக்க மறுத்துவிட்டது. அதைவிட மோசமானது, சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஒரு மாதத்துக்குள், ஒரு வாக்குச்சாவடியில் நடந்த வாக்களிப்புக்கான சி.சி.டி.வி. மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக ஒன்றிய அரசு தேர்தல் நடத்தை விதிகளை திருத்தம் செய்தது.

- என்று ஐந்து ஆதாரங்களை அடுக்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

இது மராட்டியத்தில் மட்டுமல்ல; மேலும் பல மாநிலங்களில் நடந்தவைதான். இதனை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்துவார்கள். போலி வாக்காளர்களைப் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் வாக்குப்பதிவை உயர்த்துதல், பா.ஜ.க. வெற்றிபெற வேண்டிய பகுதிகளில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், அதன்பிறகு அதற்கான ஆதாரங்களை மறைத்தல் போன்றவற்றை 'மேட்ச் பிக்சிங்' மாதிரி செய்கிறது பா.ஜ.க.

தேர்தல் ஜனநாயகம் என்பதை சூதாட்டத் தேர்தலாக மாற்ற நினைக்கிறது பா.ஜ.க. அதனை மக்களாட்சி அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு தடுத்தாக வேண்டும். பா.ஜ.க. நடத்தும் மிக மோசமான ஆட்சியை விட மிக மோசமானது அது தேர்தல் நடைமுறைகளில் செய்யும் அநியாயங்கள் ஆகும். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

banner

Related Stories

Related Stories