முரசொலி தலையங்கம் (09.06.2025)
தி.மு.க.வில் இணைவீர்!
மண், மொழி, மானம் காத்திட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவீர் என்ற மாபெரும் முன்னெடுப்பைத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துள்ளார்கள்!
"எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும் - நமது மண், மொழி, மானம் காத்திடவும் – தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும்" என்று மதுரைப் பொதுக்குழுவில் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் பலத்த கைதட்டலுடன் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு குடையின் கீழ் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியமும் தேவையும் இப்போது அதிகமாக இருக்கிறது.
1967 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற சென்னை விருகம்பாக்கம் மாநாட்டில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்கள்:
"அமைச்சரவையில் அமர்ந்து ஆட்சி புரிவது மட்டுமல்ல நமது நோக்கம். தமிழ் மக்கள் தமிழ் மரபைப் புரிந்து கொண்டு - தமிழர் வரலாற்றைப் புரிந்து கொண்டு - புதிய வரலாற்றை உருவாக்கப் பாடுபடும் திறத்துடன் தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்திட வேண்டும் என்பதற்காகத்தான் நாம் பணியாற்றுகிறோம். தமிழ் இனம் - தமிழ் மொழி - தமிழ் மரபு இவைகளைக் காப்பாற்றும் புதிய அரசு தோன்ற வேண்டும்" என்றார்.
அத்தகைய அரசை நடத்தினார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய அரசை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர். அத்தகைய அரசை நடத்திக் கொண்டு இருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இத்தகைய அரசைக் காப்பது தமிழினத்தைக் காப்பது ஆகும். தமிழ் மொழியைக் காப்பது ஆகும். தமிழ்நாட்டைக் காப்பது ஆகும். இந்தி – சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராகத் தோள் தட்டி தமிழைக் காக்கும் அரணாக நிற்கிறது தி.மு.க.
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள 'தொகுதிவரையறைச் சிதைவுக்கு' எதிராகப் போராடி இந்த மாநிலத்தைக் காக்கும் அரணாக நிற்கிறது தி.மு.க. ஆரிய மேலாண்மைக்கு எதிராக - வேதியர் சூழ்ச்சிக்கு மயங்காமல் தமிழினத்தைக் காக்கும் அரணாக நிற்கிறது தி.மு.க. இத்தகைய தி.மு.க.வைக் காக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை ஆகும். எனவே தான், 'மண், மொழி, மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவீர்' என்று அழைப்பு விடுக்கிறோம்.
'நமக்குக் கிடைத்த கொடை அண்ணா' என்றார் தந்தைப் பெரியார். 'நமக்குக் கிடைத்த வாய்ப்பு கலைஞர்' என்றார் தந்தை பெரியார். 'எனக்குப் பின்னால், பேராசிரியருக்குப் பின்னால் யார் என்று கேட்டால் அதற்கான அடையாளம் தான் இந்த மேடையில் இருக்கும் ஸ்டாலின்' என்றார் தமிழினத் தலைவர் கலைஞர்.
பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் – திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் ஆகிய மூன்றின் தொடர்ச்சி என்பது தமிழ்நாட்டைக் காக்கும் அரண்கள் ஆகும். நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார் அண்ணா. மொழிக்கு 'செம்மொழி' என்ற தகுதியைத் தந்தார் கலைஞர். தமிழினத்தை அனைத்திலும் (கல்வி - மருத்துவம் - தொழில் - சமூகக் குறியீடுகள் - விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு) முன்னேற்றிக் காட்டி வருகிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று முகங்கள் தான் தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த - வளர்த்துக் கொண்டிருக்கும் மூன்று முகம் ஆகும். எனவே தான், 'மண், மொழி, மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணை- வீர்' என்று அழைப்பு விடுக்கிறோம்.
"நான் செய்தவைகளில் கை வைக்க பயப்படும் வரை இந்த நாட்டை அண்ணாதுரை தான் ஆள்கிறான்" என்று சட்டமன்றத்தில் சொன்னார் பேரறிஞர் அண்ணா. “இந்தக் கருணாநிதியோடு அனைத்தும் முடிந்துவிடாது. ஆயிரமாயிரம் கருணாநிதிகள் வந்து கொண்டே இருப்பார்கள்" என்றார் தமிழினத் தலைவர் கலைஞர். இவர்கள் இருவரோடு அனைத்தும் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள் எதிரிகள். இவர்கள் இருவரது விதைத்த விதைகள் வீரியமானவை என்பதன் அடையாளம் தான் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இன்னுமொரு அரை நூற்றாண்டு காலத்துக்குத் தேவையான வீரியத்தை விதைத்து விட்டார் இன்றைய முதல- மைச்சர் அவர்கள். எனவே தான், 'மண், மொழி, மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவீர்' என்று அழைப்பு விடுக்கிறோம்.
ஒரு கட்சியில் இணைவீர் என்பது போன்ற சாதாரணக் கோரிக்கை அல்ல இது. ஒரு பாதுகாப்பு அரணைக் காப்பீர், அரணுக்குத் துணை நிற்பீர் என்பதற்கான கோரிக்கை இது. இன்றைய காலத்தின் - எதிர்காலத்தின் தேவை தி.மு.க. தமிழ்நாட்டைக் காப்பது தி.மு.க. அத்தகைய தி.மு.க.வைக் காப்பது தமிழ்நாட்டு மக்களின் கடமை. 'நன்றி என்பது பலனடைந்தோர் காட்ட வேண்டிய பண்பு' என்கிறார் தந்தை பெரியார்.