தொகுதி மறுவரையறையை 2027-ம் ஆண்டு எதிர்ப்பேன் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி இ்ப்போதே அதை எதிர்க்கும் முதலமைச்சரை விமர்சிப்பது ஏன் என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "எடப்பாடி பழனிசாமிக்காக வலைதள பதிவை வெளியிடுபவர்கள் நிச்சயம் அவரது நண்பராக இருக்க முடியாது.
பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள வலைதள பதிவில், தொகுதி மறுசீரமைப்பு குறித்த முதலமைச்சரின் எதிர்ப்பு தேவையற்றது என்றும், இந்த நாடகத்தை பார்த்து மக்கள் சோர்வடைந்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2027ல் தொகுதி மறுசீரமைப்பை அதிமுக எதிர்க்கும் என்று பழனிசாமியின்அதே வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளது.
2027ல் அதை எதிர்ப்பவர்கள் இப்போது ஏன் முதலமைச்சருக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூடாது? மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த உடனேயே அரசமைப்பு சட்டப்பிரிவு 81 மற்றும் 82ன் கீழ்தொகுதி மறுசீரமைப்பை துவக்கி விடுவார்கள் . அப்போது அதை எதிர்ப்பது காலம் தாழ்ந்த ஒன்றாகத்தான் இருக்கும்.தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்க அதிமுகவுக்கு துணிச்சல் கிடையாது என்பதை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
2027ல் தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதாக நீங்கள் போடப்போகும் நாடகம் தான் முதலைக்கண்ணீராக இருக்கும். தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதாக அமித்ஷா முன் மேடையில் கூற உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?இன்றும் அமித்ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார். தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னரும் மக்களவையில் தமிழ்நாட்டின் 7.18%பிரதிநிதித்துவம் குறையாது என உறுதி அளிக்காவிட்டால் கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று அமித்ஷாவிடம் மேடையில் கூற முடியுமா?"என்று கூறப்பட்டுள்ளது.