முரசொலி தலையங்கம்

மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!

பா.ஜ.க.வின் பசப்புவாத அரசியலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (23-02-2026)

பா.ஜ.கவின் கலவர அரசியல்!

பா.ஜ.க.வுக்கு வளர்ச்சி அரசியல் தெரியாது, கலவர அரசியல்தான் தெரியும்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். மைக்கேல் பட்டி மாணவி தற்கொலை வழக்கு, பா.ஜ.க.வின் கலவர அரசியலை வெளிப்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விஷம் அருந்தி உயிரிழந்தார்.

கட்டாய மதமாற்றத்தால் மாணவி லாவண்யா உயிரிழந்ததாக பா.ஜ.க. மற்றும் வி.எச்.பி. அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். அப்போது பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை, சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை நிலை வெளியில் வரும் என்று கொந்தளித்தார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி பிரச்சினையை திசை திருப்பினார் அண்ணாமலை.

அகில இந்திய பா.ஜ.க. தலைமை நால்வர் விசாரணைக் குழுவையே அனுப்பி விசாரணை நாடகத்தை நடத்தியது. நடிகை விஜயசாந்தி, சதியா ரே, சித்ரா தைவா, கீதா விவேகானந்தா ஆகியோர் இதில் இடம்பெற்று இருந்தனர். பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘துன்புறுத்தல் மற்றும் கட்டாய மத மாற்றத்தின் அடிப்படையில் தான் இந்த தற்கொலை நடந்துள்ளது' என்று தீர்ப்பே எழுதி விட்டார்கள்.

பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் பா.ஜ.க. குற்றஞ்சாட்டியது. இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது.

மருத்துவமனையில் இருந்த லாவண்யாவிடம் அரியலூர் மாவட்ட விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த ஒருவர் பேசும் காணொளி ஒன்றை அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மதரீதியாகவோ, மதமாற்றச் சொல்லியோ தன்னைத் துன்புறுத்தியதாக அம்மாணவி சொல்லவில்லை.

மாஜிஸ்ட்ரேட் முன்பு லாவண்யா வாக்குமூலம் அளித்த போது, விடுதி காப்பாளர், விடுதி தொடர்பான பல பணிகளை தொடர்ந்து தனக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தன்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்றுதான் சொல்லி இருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற மதமாற்றம் நடைபெறுகிறது என்கிற அளவுக்கு பீதி கிளப்பியது பா.ஜ.க. அக்கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில் 'லாவண்யாவுக்கு நீதி வேண்டும்' என்ற ஹேஸ்டேக்கை பரப்பியது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கட்டாய மதமாற்றம் நடந்திருக்கிறது என்று கூறி விசாரணைக்கு வந்தது.

மதமாற்ற தற்கொலை என்று முத்திரை குத்தி, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது.

இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்காகவே காத்திருந்ததைப் போல சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. விவகாரம் சி.பி. ஐ.க்குப் போனது.

சி.பி.ஐ. விசாரித்து, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், மாணவி லாவண்யாவை மதமாற்றம் செய்ய முயற்சி நடைபெறவில்லை என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மாணவி லாவண்யா பேசிய எந்த ஒரு காணொளியிலும் எந்த நேரத்திலும் மதமாற்றம் பற்றி எதுவும் கூறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சி.பி.ஐ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!

“பள்ளியில் சகாய மேரி என்கிற விடுதி காப்பாளர் மாணவிக்கு நிர்வாக வேலைகளை (Administratiive work) கொடுத்து வந்ததால் அது மாணவியின் படிப்பிற்குப் பெரிய தொல்லையாக இருந்துள்ளது. அடிக்கடி மாணவியைக் கண்டித்- துள்ளனர். இதனால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக நினைத்து மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்” என்று சொல்லி இருக்கிறது சி.பி.ஐ. தனது விசாரணை அறிக்கையில்.

”பள்ளியில் 677 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் 444 பேர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 219 பேர் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 14 மாணவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாகக் கிட்டத்தட்ட 2018 ஆம் ஆண்டு முதல் பள்ளியில் படித்த மாணவர்களுடைய மாற்றுச் சான்றிதழ்களை (TC) கொண்டு வரச் சொல்லி முழுவதுமாக சரிபார்த்ததில் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே சென்ற மாணவ மாணவிகள் யாரும் தங்களின் பெய- ரையோ, மாற்றுச் சான்றிதழில் மதத்தின் பெயரையோ மாற்றவில்லை என்பதை உறுதி செய்தது. மதம் மாற்றியதாக எந்த மாணவ மாணவியும் தெரிவிக்கவில்லை; கட்டாய மதமாற்றம் பள்ளியில் நடந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை”என்று சி.பி.ஐ தன்னுடைய விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாணவி லாவண்யா இறந்த பின் அவருடைய தந்தை, சித்தி ஆகியோர் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சில பா.ஜ.க தலைவர்களின் நிர்பந்தத்தால், லாவண்யாவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் சி.பி.ஐ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வி.ஹெச்.பி நிர்வாகி முத்துவேல் மற்றும் சில பா.ஜ.க தலைவர்களின் அழுத்தம் காரணமாக, மாணவியின் பெற்றோர் சில காலம் தலைமறைவாகவே இருந்தனர் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை மறைக்காமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வி.ஹெச்.பி நிர்வாகி முத்துவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த விசாரணை அறிக்கையின் மூலம், லாவண்யா மரணத்தில் பா.ஜ.க.வினரும், வி.எச்.பி. அமைப்பினரும் திட்டமிட்டு மத ரீதியாக அவதூறு பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது அம்பலமாகியுள்ளது.

பா.ஜ.க. தலையெடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் இது. ஒரு மாணவியின் தற்கொலையை தமிழ்நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விவகாரம் ஆக்கி குளிர்காய நினைக்கும் பா.ஜ.க.வின் பசப்புவாத அரசியலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

banner

Related Stories

Related Stories