
முரசொலி தலையங்கம் (24-02-2026)
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...?
தனது ஆட்சிக் காலத்து சாதனைகளை தி.மு.க. அரசு காப்பி அடிப்பதாகப் புலம்பி இருக்கிறார் பழனிசாமி. அவர் என்ன சாதித்தார்? எந்தத் திட்டம் காப்பி அடிக்கப்பட்டது என்பதை அவர் சொல்லி இருக்க வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார்?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், குறு - சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, பாதம் காப்போம், இதயம் காப்போம், கலைஞர் கைவினைத் திட்டம், ஊட்டச்சத்தை உறுதி செய், மகளிர் விடியல் பயணம், கலைஞர் கனவுஇல்லம், அன்புக் கரங்கள் திட்டம், அன்புச் சோலை திட்டம், தோழி விடுதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம், முதலமைச்சர் கோப்பை, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், தொல்குடித் திட்டம், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம், பேராசிரியர் அன்பழகனார் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், முதலமைச்சரின் கிராமச்சாலை மேம்பாட்டுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம், உங்க கனவ சொல்லுங்க ஆகிய அனைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைத் திட்டங்களில் சில. இதில் ஏதாவது ஒன்றையாவது பழனிசாமி தனது ஆட்சியில் செய்து கொடுத்தாரா?

கழக ஆட்சியின் மிகமுக்கியமான மூன்று திட்டங்கள் என்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டம் ஆகிய மூன்றையும் சொல்லலாம். இதில் எதையாவது தனது ஆட்சியில் செய்து கொடுத்தாரா பழனிசாமி?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அறிவிக்கப்பட்ட போது அதைத் தர முடியாது என்று சொன்னவர் பழனிசாமி. 'பொய் சொல்லி வாக்குகளை வாங்கி விட்டது தி.மு.க., மக்களை ஏமாற்றியும் அல்வா கொடுத்தும் வாக்குகளை வாங்கி விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்' என்று சொன்னார் பழனிசாமி. இப்போது அதே திட்டத்தை காப்பி அடித்து அதே பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து ஆகும். இதைக் காப்பி அடித்து, ‘ஆண்களுக்கும் கட்டணமில்லை' என்று காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. காப்பி அடிப்பது யார்? பழனிசாமி தான்.
வாக்குறுதி என்ற பெயரால் தினந்தோறும் ஏதோ அள்ளி விட்டுக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அதை மக்கள் மதிக்கவே இல்லை, கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் இவர் வாக்குறுதிகளை நிறைவேற்றியவரும் அல்ல. நிறைவேற்றப் போகிறவரும் அல்ல என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
ஆட்சியில் இருந்த போதே சொந்தமாக எதையும் செய்யத் தெரியாதவர்தான் இந்த பழனிசாமி.
கொரோனா பரவுகிறது என்று தெரிந்து முன்கூட்டியே சட்டசபையை ஒத்திவைக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். முதலில் பழனிசாமி மறுத்தார். அதன் பிறகு ஒத்தி வைத்தார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். பணம் இல்லை என்று மறுத்தார் பழனிசாமி. அதன்பிறகு 2500 கொடுத்தார். பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யச் சொன்னார் தி.மு.க. தலைவர். அதன்பிறகுதான் ரத்து செய்தார். இ – பாஸ் ரத்து செய்யச் சொன்னார் தி.மு.க. தலைவர். அதன்பிறகுதான் ரத்து செய்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தி.மு.க. போராடிய பிறகுதான், ஆளுநருக்கு பழனிசாமி அழுத்தம் கொடுத்தார்.
விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர் சொன்னார். உடனடியாக கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்தார் பழனிசாமி. மக்களின் குறைகளை 180 நாளில் தீர்ப்பேன் என்று அறிவித்தார் தி.மு.க. தலைவர். உடனே செல்போனில் பேசினால் தீர்ப்பேன் என்று சொன்னார் பழனிசாமி. ஜெயலலிதாவால் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட 1100 என்ற திட்டத்தை தூசி தட்டி எடுத்தார் பழனிசாமி. அதனை தனது சொந்த திட்டம் போல அறிவித்தார் பழனிசாமி. இப்படி ஜெயலலிதாவின் திட்டத்தையே கபளீகரம் செய்தவர்தான் பழனிசாமி.
2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிட்டார். இப்படி எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி.






