உலகப் பொதுமறையாளர் திருவள்ளுவரை மொழியால் மட்டுமே அடையாளப்படுத்தலாமே தவிர, அவர் மதங்களுக்கும், சாதிய அடக்குமுறைகளுக்கும் அப்பாற்பட்டவர். அறநெறிகளை இரு வரிகளில் உள்ளடக்கி, உலக மக்களுக்கு அறிவூட்டியவர்.
அப்படியான அய்யன் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதற்கு, பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து முற்பட்டு வருகிறது. இதனை முற்போக்கு சிந்தனையாளர்கள் கடுமையாக கண்டித்த நிலையிலும், தங்களது பொய் பிரச்சாரத்தை காவிக்கூட்டம் தொடர்ந்துதான் வருகிறது.
அதுபோன்ற காவி சாயத்தை பூசி வருபவர்களில் ஒருவராக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவள்ளுவரை சனாதன தர்மத்திற்குள் புகுத்த திட்டமிட்டுள்ளார். இதனைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார்.
திருக்குறளின் மேன்மை அறிந்த மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என அவரை போற்றிக் கொண்டாடினார்.
நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர் சுவைட்சர் “வள்ளுவரின் அறநெறியில் காணும் பேரறிவு, உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்த ஜி.யூ.போப் “மொழி, இனம், சமயம், நாடு என எல்லா எல்லைகளையும் அனைத்துலக மனிதனை பற்றி பாடியவர் வள்ளுவர்” என்கிறார்.
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து - கெடுக உலகியற்றியான்” என கற்பனை கருத்தியலை சாடி, உழைப்பின் மேன்மை குறித்து திரும்ப, திருப்ப எடுத்துக் கூறி, மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.