முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (31.05.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், 2025-26 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் 91ன்படி, கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றினார்கள்.
பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, 122 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 122 அறிவிப்புகளில் இதுவரை 96 அறிவிப்புகளுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் 4 அறிவிப்புகள் செயலாக்கம் பெற்று முடிவுற்றிருக்கிறது. அந்த வகையில் அறிவிப்பு எண் 91 இன்று செயலாக்கம் பெற்றிருக்கிறது. அ.எண் 91 என்பது கருவின் தன்மையை வெளியிட தடையும், அச்சட்டத்தினை திறம்பட செயல்படுத்துவது ஆகும்.
அந்த வகையில் நான்கு மண்டலங்களாக தமிழ்நாட்டைப் பிரித்து சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 4 மண்டலங்களில் கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவுரும் தன்மையை தொழில்நுட்ப முறையில் பாலினத் தேர்வை தடை செய்யும் சட்டம் 1994 அதன் செயல்திட்டத்தை மேம்படுத்திடும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று வழங்கப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாலின தேர்வை தடை செய்தல் சட்டம், (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act (PCPNDT) Act 1994ன்படி, பதிவு பெற்ற அரசு மற்றும் தனியார் ஸ்கேன் நிலையங்கள் 8922. அதில் சென்னையில் மட்டும் 2059 பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற சமயத்தில் குழந்தை பாலின விகிதம் என்பது 1000 ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் எனும் விகிதம் இருந்ததை இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தைகள் பிறப்பு இறப்பு விகிதம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதன் மூலம் 940 பெண் குழந்தைகள் என்று வந்திருக்கிறது.
இந்த அரசின் இலக்கு என்பது ஆண் குழந்தைகளுக்கு சரிசமமாக பெண் குழந்தைகள் இருக்க வேண்டும் என்கின்ற இலக்கை எட்டுகின்ற வகையில் இந்த சட்டத்தின் அம்சங்களை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம், (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act (PCPNDT) online portal இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் ஸ்கேன் சென்டர்களில் புதிய விண்ணப்பங்கள் புதுப்பித்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல், மருத்துவர்கள் இணைப்பு மற்றும் நீக்கம், ஸ்கேன் இயந்திரங்கள் இணைப்பு மற்றும் நீக்கம் ஆகியவை manual நடைமுறையில் இருந்தது, அது முழுமையாக மாற்றப்பட்டு portal முறையில் மாற்றப்படவிருக்கிறது.
அதோடுமட்டுமல்லாமல் தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து மகப்பேறு சம்மந்தமான அனைத்து நடைமுறை மற்றும் சிக்கல்களை சட்டப்படி எப்படி கையாள்வது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் கையேடு அரசின் சார்பில் வெளியிட்டிருக்கிறோம்.
மகப்பேறு மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி இக்கையேடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகின்ற மகப்பேறு மருத்துவர்களுக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும். இந்த கையேட்டிற்கு உயிர் தரும் தாய்மார்கள் உயிர் வாழ வேண்டும் என்று தலைப்பிடப்பட்ட அந்த கையேடு இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது.
கோவிட் தொடர்பான கேள்விக்கு
2020ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19, உலகளவில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்திய போதும், அரசின் மருத்துவ கட்டமைப்பினை மேம்படுத்துதல், பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் மற்றும் தீவிரமாக கோவிட்- 19 தடுப்பூசியினை வழங்கியதன் வாயிலாக, கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீண்டு, வைரஸின் வீரியம் குறைந்து, தற்போது சமூக பரவலாக மட்டுமே காணப்படுகிறது.
2023 மே 5 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் 19 ன் பொதுச் சுகாதார அவசரநிலை முடிவடைவதாக அறிவித்தது. உலக சுகாதார நிறுவனத்தின் மூலமாக 04.05.2025 அன்று வெளியிடப்பட்ட வாராந்திர தொற்று நோய் குறித்த அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கோவிட்-19 சமூக பரவலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விரீயம் இழந்த ஓமைக்கரான் வகை கொரோனா வைரஸ்களின் வகைகளான JN.1, XEC போன்றவைகளே காணப்படுவதாகவும், புதிதாக எவ்விதமான உருமாறிய கொரோனா வைரஸ்களும் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் தற்போது வரை 91,583 கோவிட் தொற்றுகள் பதிவாகி உள்ளன. இந்திய அளவில் 1,800 கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மே மாதத்தில் 293 கோவிட் தொற்றுகள் பதிவாகி உள்ளன. அதில் 148 நபர்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். இந்த ஆண்டு கோவிட்-19 நோய் பரவல் சமூகத்தில் மிக குறைந்த அளவே காணப்படுகிறது. மேலும் நோய் காணப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர தொற்றிக்கான அறிகுறிகளும் காணப்படவில்லை.
தமிழ்நாட்டில் நிகழ்வாண்டில் இணை நோய்களுடன் உள்ள நபர் கோவிட் தொற்றும் கண்டறியப்பட்டு உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 2025 மாதத்தில் பதிவான கோவிட் தொற்றுகளிலிருந்து 26 மாதிரிகள் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் ஆய்வகங்களிலிருந்து மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு, அவற்றில் 19 மாதிரிகள் புனேயிலுள்ள தேசிய வைரஸ் நிறுவனத்திற்கு (Natonal Institute of Virology (NIA) அனுப்பப்பட்டன. இதில் SARS CoV-2 வைரஸின் ஒமிக்ரான் வகைகள் (JN.1, LF.7, NB.1.8.1, MV.1, BA.3) மட்டுமே தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
புதிய வகை எதுவும் கண்டறியப்படவில்லை. நாள்தோறும் கோவிட் தொற்றுகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்தும், COVID-19 குறித்து முன்னெச்சரிக்கையாக தேவையான மருத்துவ வசதிகள், மனிதவளங்கள், மருந்துகள் மற்றும் பரிசோதனைத் திறன் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 99,425 படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன. பொது மக்கள் கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது, இருமும் போதும்/தும்மும் போதும் சரியான சுகாதார வழிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் கைசுத்தம் பேணுவது அவசியம்.
காய்ச்சல், சுவாசமண்டலத்தில் தொற்றிற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் குறிப்பாக இணைநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
டெங்கு தொடர்பான கேள்விக்கு
டெங்கு பாதிப்பு என்பது 2017, 2012 ஆகிய ஆண்டுகளில் தான் அதிகபட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. 2012 இல் 66 பேர், 2017 இல் 65 பேர் இதன்பிறகு இந்த அரசு பொறுப்பேற்றபிறகு 10 மற்றும் 12 ஆகிய நிலையிலேயே இருந்து வருகிறது.
இன்னும் டெங்குவினால் ஏற்பட்ட இறப்புகள் என்பது நான் ஏற்கெனவே சொன்னதுபோல் இணை நோயினால் ஏற்படுவது தான். நேற்றைக்கு டெங்கு பாதிப்பு என்பது 35. அதுவும் மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக வரும். உயிரிழப்பு என்பது இல்லாத நிலை தற்போது வரை உள்ளது.
தற்போது வரை இந்தாண்டு இதுவரை 4 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஆகவே உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாதவரை கண்காணிக்கப்பட்டு டெங்கு பாதிப்பு என்பது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.