உணர்வோசை

“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி!

மாலத்தீவு மட்டுமல்ல, கடலோரப் பகுதிகள் எல்லாவற்றுக்குமே அதுதான் கதி.

“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி.

மாலத்தீவு நாட்டு அரசியல் வட்டாரம் பரபரப்பு கொண்டிருந்தது. அமைச்சரவை கூட்டம் நடக்கவிருந்தது. பொதுவாக ஒரு நாட்டில் அமைச்சரவை கூடுவது சகஜம்தான். பல விஷயங்களை தீர்மானிக்கவும் விவாதிக்கவும் கூடுவதுண்டு. மாலத்தீவு நாட்டில் கூடவிருந்த அமைச்சரவை கூட்டத்துக்கு மட்டும் ஒரு வித்தியாசம் இருந்தது. அந்த வித்தியாசம் விவாதிக்கப்படவிருக்கும் பிரச்சினையால் ஏற்படவில்லை. கூட்டம் நடத்தப்படவிருக்கும் விதத்தால் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டம் நடக்கவிருந்தது கடலுக்கடியில்.

அமைச்சரவை கூட்டத்தில் பங்குபெறவிருந்த அமைச்சர்கள் கடலுக்குள் செல்வதற்கான பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். கருவிகளையும் எடுத்துக் கொண்டனர். கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் கூடியது.

அமைச்சரவைக் கூட்டம் 30 நிமிடங்கள் நீடித்தது. கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர் ஆழத்தில் கூட்டம் நடந்தது. கடலுக்குள் செல்வதற்கான பயிற்சியை ஒரு நாளுக்கு முன்னரே அமைச்சர்கள் எடுத்துக் கொண்டனர். மூன்று அமைச்சர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும் என மருத்துவர்கள் கூறியதால் கலந்து கொள்ள முடியாமல் போனது. பிற அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியின் தலைமையில் கடலுக்கு அடியில் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடியிருந்தனர்.

கடலுக்கு அடியில் கூடியிருந்த அமைச்சர்கள் கைகளை அசைத்து உரையாடிக் கொண்டனர். வெள்ளை போர்டுகளும் இருந்தன. ஓர் ஆவணத்தில் அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். அந்த ஆவணம் கொண்டிருந்த செய்தி இதுதான்.

“உலகப் போரை சந்திக்கும் தீவிரத்துடன் நாம் ஒன்றிணைந்து வெப்பநிலை உயர்வதை தடுக்க வேண்டும். காலநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பூமியில் வசிக்கும் ஒவ்வொருவரின் உரிமையையும் பாதுகாப்பையும் அது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நாம் எல்லாருக்கும் பயன்படக்கூடிய ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும். எல்லாரும் உயிர்வாழ வேண்டும் என்கிற புரிதலுக்கு நாம் வர வேண்டும். மாலத்தீவு இன்று காப்பாற்றப்படல்லை எனில், நாளை மொத்த உலகையும் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு எதுவும் இருக்காது.” என்றது அச்செய்தி.

“நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது” : உலகிற்கு மாலத்தீவு சொன்ன அதிர்ச்சி செய்தி!

மாலத்தீவு நாட்டு அமைச்சர்கள் அந்த ஆவணத்தில் உடன்பட்டு கையெழுத்திட்டனர். அச்செய்தியை முதலில் கேட்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் தொடங்கி இன்று வரை உலகில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை பார்க்கும் எவருக்கும் இப்போது அச்சம்பவம் வேடிக்கையாக தெரிவதற்கான வாய்ப்பு இல்லை.

பல தீவுகளின் கூட்டமே மாலத்தீவு நாடு. இந்தியப் பெருங்கடலில் இடம்பெற்றிருக்கிறது. உலகில் தாழ்வான பகுதிகளில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. நாட்டின் 80 சதவிகித நிலம் கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் அளவு உயரத்தில் மட்டுமே இருக்கிறது. உயர்ந்து கொண்டிருக்கும் கடல் மட்டம் நிச்சயமாக மாலத்தீவு நாட்டுக்கு உவப்பான செய்தியாக இருக்க முடியாது.

2009ம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மக்களை அந்த நாடு கொண்டிருந்தது. தற்போது ஐந்து லட்சத்து முப்பது ஆயிரம் பேர். ஏற்கனவே 2004ம் ஆண்டு மாலத்தீவுக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. இந்தியப் பெருங்கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கிய ஆண்டு. பிற நாடுகளை போன்ற இழப்பு மாலத்தீவுக்கு இல்லை. அளவில் சின்ன நாடு என்பதாலும் பல தீவுகளை கொண்டிருந்ததாலும் பாதிப்பு பெருமளவில் இருந்தது. பொருளாதார ரீதியாக மட்டும் 28,000 கோடி ரூபாய் இழப்பு நேர்ந்திருந்தது. நாட்டின் உள்கட்டமைப்பு பெரும் சேதத்துக்கு உள்ளானது. சுனாமியிலிருந்து மாலத்தீவு சர்வதேச விமான நிலையம் மீளுவதற்கே பல நாட்களானது.

தொடர்ந்து பூமி வெப்பமடைவதாலும் பனிப்பாறைகள் உருகுவதாலும் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருந்தது. மறுபக்கத்தில் மாலத்தீவு நாட்டில் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளும் நேர்ந்து கொண்டிருந்தன. இத்தகைய சூழலில்தான் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியிருந்தார் மாலத்தீவு நாட்டு ஜனாதிபதி முகமது நஷீத்.

தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் கடலுக்கு மேல் அமைச்சர்கள் வந்தனர். ஊடக சந்திப்பு நடந்தது. அதில் பேசிய ஜனாதிபதி முகமது நஷீத், “என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய செய்தியை நாங்கள் உலகுக்கு தெரிவிக்க முயலுகிறோம். காலநிலை மாற்றத்தை தடுக்காவிட்டால் மாலத்தீவுக்கு என்ன நடக்கும் என உலகுக்கு காட்ட விரும்பினோம்,” எனக் கூறினார்.

கடல்மட்டம் உயர்ந்தால் மாலத்தீவு நாடு கடலுக்குள் மூழ்கிவிடும். மாலத்தீவு மட்டுமல்ல, கடலோரப் பகுதிகள் எல்லாவற்றுக்குமே அதுதான் கதி.

உலகம் முழுக்க இருக்கும் கடல் மட்டம் 1990களில் இருந்ததை விட 3 அங்குலங்கள் உயர்ந்திருக்கிறது. காரணம், புவிவெப்பம் உருக்கிய பனிப்பாறைகள். தற்போதைய நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமடைதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது. புவிவெப்பத்தை அதிகரிக்கும் கார்பன் வாயு வெளியீட்டை குறைக்க உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. அவையும் ஒப்புக்கேனும் சம்மதித்து வைத்திருக்கின்றன. இதில் சோகம் என்னவெனில், உலக நாட்டு அரசுகள் தாங்கள் ஒப்புக்கொண்ட அளவில் கார்பன் வெளியீட்டை குறைத்தாலும் 2,100ம் ஆண்டை எட்டுகையில் உலகின் கடல் மட்டம் இரண்டடி வரை உயரும். கார்பன் அளவை குறைக்கவில்லை எனில், பல அடிகளுக்கு கடல் மட்டம் உயரும் வாய்ப்பை யாராலும் தடுக்க முடியாது.

அதீத மழை, அதீத வெயில், தொடர் பஞ்சம், தொடர் உணவுப் பற்றாக்குறை, உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசி என மாறிவரும் கால மற்றும் சமூகக் சூழல்கள் அழிந்துபோன டைனோசர்களாக நாம் மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதையே அறிவித்துக் கொண்டிருன்றன.

banner

Related Stories

Related Stories