உலகம்

சிட்டிசன் அத்திப்பட்டியாகிப் போன ஜப்பான் நகரம் : சன்யாவின் கதிதான் என்ன?

17ம் நூற்றாண்டிலிருந்தே ஜப்பானின் வளர்ச்சிக்கு அதிக உழைப்பை கொடுக்கும் இடமாக சன்யா இருந்து வந்தது. பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் வசித்த பகுதி அது.

சிட்டிசன் அத்திப்பட்டியாகிப் போன ஜப்பான் நகரம் : சன்யாவின் கதிதான் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

அஜித் நடித்த சிட்டிசன் படத்தின் மையமே அத்திப்பட்டி கிராமம்தான். கடல் கிராமமாக இருக்கும் அத்திப்பட்டியை அதிகார வர்க்கம் தன்னுடைய திருட்டுத்தனங்களால் இருட்டடிப்பு செய்யும். அத்திப்பட்டி என்கிற கிராமமே அரசின் ஆவணங்கள் எதிலும் இல்லாதபடிக்கு பார்த்துக் கொள்ளும். அதை எதிர்த்து நடக்கும் போராட்டமாகவே அப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அத்திப்பட்டி போலவே ஜப்பான் நாட்டில் ஒரு நகரம் இருக்கிறது. சன்யா என்கிற நகரம்!

1966ம் வருடம் வரைதான் சன்யா என்ற நகரம் ஜப்பானிய வரைபடத்திலும் நாட்டிலும் இருந்தது. அதற்கு பின் அந்நகரம் பிரிக்கப்பட்டு, பல துண்டுகளாக மாறி வெவ்வேறு நகரங்களுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு சன்யா என்ற பகுதி எந்த வரைபடத்திலும் இருக்கவில்லை. சுற்றுலா கையேடுகளில் கூட காண முடியாது. அங்கு சென்று சேர வேண்டுமென முயன்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். சன்யாவுக்கு போனவர்கள் எவரையும் கேட்டறியலாமென தேடினாலும் தோல்வியே கிட்டும். ஆனால் யதார்த்தத்தில் அந்த நகரம் உயிர்ப்புடன் இருக்கிறது.

17ம் நூற்றாண்டிலிருந்தே ஜப்பானின் வளர்ச்சிக்கு அதிக உழைப்பை கொடுக்கும் இடமாக சன்யா இருந்து வந்தது. பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் வசித்த பகுதி அது. ஜப்பானின் ஒடுக்கப்பட்ட சாதிய மற்றும் வர்க்க மக்களின் இருப்பிடமாக இருந்தது சன்யா. சொல்லப் போனால் அத்தகைய மக்களை சன்யாவிலேயே நிறுத்தி வைத்திருந்தது ஜப்பான்.

காலப்போக்கில் உலகப்போர்கள் மூண்டு சன்யா பல மாற்றங்களுக்கு உள்ளானது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். வீடுகள் கைவிடப்பட்டன. போர்க்காலங்களில் சிறிய அறைகள் கட்டப்பட்டு பின்னாளில் அவையும் கைவிடப்பட்டன. டோக்கியோ நகரத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை தங்க வைப்பதற்கென குறைந்த வசதியுடன் அறைகள் கட்டப்பட்டன. பின்னர் பல சமூக விரோதக் குழுக்களும் அரசியல் தீவிரவாத நடவடிக்கைகளும் சன்யா பயன்படத் தொடங்கியது. வறிய, விளிம்புநிலை மக்களின் வாழ்விடமாக சன்யா மாறியிருந்தது.

1996ம் ஆண்டில் டோக்கியோ நகரத்தில் வசிப்பிடம் இன்றி நடைபாதைகளில் வாழ்ந்த மக்களுக்கென வசிப்பிடம் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அத்திட்டத்தின் முன்னேற்பாடாக பிளாட்பாரங்களிலேயே தங்கி வாழ்ந்திருந்த வீடற்ற மக்கள் பலரை சன்யாவுக்கு அனுப்பியது டோக்கியோ நகராட்சி. வீடற்றோருக்கு வீடு வழங்க தற்காலிக இடமாக சன்யா பகுதி பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு முக்கியமான திருப்பம் நேர்ந்தது.

எல்லாருக்கும் வீடு வழங்கும் வக்கு தனக்கில்லை என்பதை அரசு உணர்ந்து வசிப்பிடத் திட்டத்தை கைவிட்டது. வீடற்றோரின் வாழ்விடமாக சன்யா நிலைபெற்றது.

சிட்டிசன் அத்திப்பட்டியாகிப் போன ஜப்பான் நகரம் : சன்யாவின் கதிதான் என்ன?

விளைவு என்ன தெரியுமா?

சன்யாவில் வாழும் மக்கள் எவருக்கும் அரசின் அடையாள அட்டை இருக்காது. ஏனெனில் அவர்களிடம் இருக்கும் அடையாள அட்டைகளில் வேறு முகவரிகளே இருக்கும். சன்யாவில் வசிக்கும் மக்களின் அடையாள அட்டைகள் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதை அரசே மறைமுகமாக அங்கீகரித்தது.

1962-லேயே சன்யா பகுதி பிரிக்கப்பட்டு பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டாலும் சன்யா என்ற பகுதியின் வரலாறும் அங்கிருக்கும் மக்களின் நிலையையும் நாட்டுமக்கள் அனைவரும் அறிந்திருந்தனர். ஜப்பானின் ஆவணங்களில் இருந்து மறைந்து போக விரும்பும் மக்களுக்கு சன்யா நகரம் புகலிடமாக மாறியது.

சன்யா பகுதி பூகோள ரீதியாக ஜப்பான் நாட்டில் இல்லையென்றாலும் மக்களின் நம்பிக்கையிலும் வாழ்வுகளிலும் இருந்து வருகிறது.

சன்யா பகுதியை பொருளாதார ரீதியாக நிர்வகிப்பது யக்குசா என்ற சட்டவிரோத கும்பல். சர்வதேச நாடுகளில் பரவியிருக்கும் ஜப்பானிய கடத்தல் சாம்ராஜ்யத்தின் பெயரே யக்குசா. ஆவணங்களிலிருந்து மறைந்து எந்த கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக வாழ விரும்பி சன்யாவுக்கு சென்று சேரும் மக்களுக்கு யக்குசா சிறிய அளவிலான கடத்தல், திருட்டு போன்ற வேலைகளை கொடுத்து செய்ய வைக்கிறது. அரசை போலல்லாமல் மிகவும் மலிவான விலைகளிலோ சமயங்களில் இலவசமாகவோ உணவை வழங்கும் கடைகளையும் யக்குசா அமைப்பு நடத்துகிறது.

பூகோள வரைபடங்களிலேயே இல்லாத ஒரு நகரம் ஜப்பானிய மக்களின் மனங்களில் இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஜப்பானிய மக்களின் மனங்களில் இயங்கும் நகரம் சன்யா!

banner

Related Stories

Related Stories