
முரசொலி தலையங்கம் (05-11-2026)
மீனவர்கள் எதிர்ப்பையும் மீறி...!
1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போகிறார் விஜய். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் கடல் பகுதி. அதிலும் குறிப்பாக மீனவர்கள் வாழ்விடப் பகுதி. இங்கு தலைமைச் செயலகம் அமைக்க வேண்டாம் என்று மீனவ மக்கள் ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதைக் காதில்வாங்கிக் கொள்ளாமல் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது விஜய் அரசு. குறைந்தபட்சம் அந்த மீனவ சமுதாய மக்களை, அமைப்பினரை அழைத்துப் பேசினாரா விஜய்? இல்லை.
சினிமாவில், 'இந்த உப்பு மண்ணை விட்டுப் போக மாட்டோம், போகச் சொன்னால் இங்கேயே செத்துப் போவோம்' என்று டயலாக் விட்டவர்தான் இந்த விஜய். இப்போது அவரே மீனவ மக்களின் வாழ்க்கையைச் சிதைக்கத் தொடங்கி விட்டார்.
புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்ட பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்க ஒப்பந்தப் புள்ளி கோரி இருக்கிறது விஜய் அரசு. தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின் நந்தனம் கோட்டத்தின் சார்பில் மயிலாப்- பூர் பகுதியில் உள்ள 96 குடியிருப்புகளை இடிக்க மின் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை விஜய் அரசு இரண்டு நாட்களுக்கு முன் விட்டுள்ளது. இதனை மீனவ சமுதாய மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள்.
"எங்கள் மறுவாழ்வுக்காக கோரப்பட்ட இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்யாமலும் கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அனுமதி பெறாமலும் இடிப்புக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதை மயிலாப்பூர் பகுதி பஞ்சாயத்துக்காரர்களாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் மீனவ மக்கள்.
எங்கள் மறுவாழ்வுக்காக நாங்கள் இதுவரை கேட்ட 3.82 ஏக்கர் இடம் இதுதான் என்றும் மீனவ சங்கங்கள் சொல்லி இருக்கின்றன. கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிக்கை 2019 இன் கீழ் நீண்ட காலக் குடியிருப்புக்கான திட்டப் பகு- தியாக இதை அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. இந்த இடத்தை புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக நேற்றைய தினம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மீனவ கிராம பஞ்சாயத்தாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதில் கலந்து கொள்ள முடியாது என்று சில கிராம பஞ்சாயத்தார் அறிவித்தார்கள். இந்த நிலையில் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
முறையான எழுத்துப்பூர்வமான அழைப்பாக இல்லாமல் தங்களுக்கு வேண்டிய சிலருக்கு மட்டும்தொலைபேசி மூலமாக பேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று மீனவ அமைப்பினர் சொல்கிறார்கள். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளஅனைத்துப் பஞ்சாயத்தார்க்கும் முறையான எழுத்துப்பூர்வமான அழைப்பு வருங்காலத்தில் விடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
விஜய் அரசு எத்தகைய பித்தலாட்டத்தைச் செய்து வருகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. ‘கடலைப் பார்த்து முதலமைச்சர் அறை இருக்க வேண்டும்' என்று ஜோசியர் சொன்னதற்காக ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகமும், சட்டமன்றக் கட்டடமும் அமைக்கிறார்கள் என்றால் 'தான்தான் காலமெல்லாம் ஆட்சியில் இருக்கப் போகிறோம்' என்று நம்புகிறாரா விஜய்? ஐந்து மாதத்தில் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது இந்த ஆட்சி. இது எங்கே ஐந்தாண்டுகள் நீடிக்கப் போகிறது? ஊருக்குள் அடிக்கத் தொடங்கி இருக்கும் நாற்றம் இன்னுமா முதலமைச்சரின் மூக்குக்கு வரவில்லை? வந்து குமட்டவில்லை?
ரூ.6 கோடியில் தனக்கு அறை கட்டியதிலேயே எத்தனை முறைகேடுகள்? டெண்டரே விடாமல் பணிகளைத் தொடங்கியது நிறுவனம். அதன்பிறகு தான் டெண்டரே விட்டார்கள். ஒரே ஒரு அறை அமைக்கவே விதிமுறைகளைப் பின்பற்றாமல் முறைகேடுகள் செய்தது விஜய் அரசு. ரூ.1298 கோடியில் என்ன வெல்லாம் செய்வார்கள் என்பது இப்போதே தெரிகிறது.

ஒரு இடத்தைத் தேர்வு செய்வதில் தான் எத்தனை குளறுபடிகள்? தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் இடத்தை தேர்வு செய்து அரசாணையும் வெளியிட்டார்கள். அதற்கு எதிர்ப்பு வந்ததும், 'முதலமைச்சர் இன்னும் முடிவு செய்ய- வில்லை' என்று பல்டி அடித்தார்கள். முதலமைச்சர் முடிவெடுக்காமல் அரசாணை வெளியிட்டவர் யார்? முதலமைச்சரை விட அவர் பெரிய மனிதரா? அவர்தான் முதலமைச்சரை இயக்குகிறார்?
முதலில் அரசாணை என்றால் என்ன என்றாவது தெரியுமா? அரசாணை போடுவதற்கு முன்னால் எதையெல்லாம் சிந்தித்து அரசாணை போட வேண்டும் என்பதாவது தெரியுமா?
தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தேர்வு செய்துள்ள பட்டினப்பாக்கம் என்பது மீனவர்கள் காலம் காலமாக வாழும் பூமி ஆகும். மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளாகவே உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவ மக்கள். இந்த முள்ளிக்குப்பம் பகுதியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டமன்றம், தலைமைச் செயலகக் கட்டட வளாகம் அமைக்கப் போவதாக விஜய் அரசு திட்டமிட்டுள்- ளது. இவ்வளவு பெரிய திட்டம் வரும் போது அங்குள்ள மக்களை முன்கூட்டியே சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் அடிப்படையில் முடிவுகள் எடுத்து, அரசாணைகள் போட வேண்டும்.
‘அரசாணை போட்டாச்சு, எல்லாரும் இடத்தைக் காலி பண்ணுங்கள்' என்பதுதான் மக்கள் நல அரசா?
மக்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் இது. இத்தகைய ஒரு கடற்கரைப் பகுதியை யாராவது தலைமைச் செயலகம் கட்டத் தேர்வு செய்வார்களா?
‘சுறா’ படத்தில் ஒரு மாஃபியா வந்து மக்கள் வாழும் பகுதியைக் கபளீகரம் செய்யும். அத்தகைய மாஃபியாவாக இப்போது மாறி இருக்கிறார் விஜய். படத்தில் ஹீரோவாக நடித்தவர், அரசியலில் வில்லனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மாற்றம் என்றார்களே இதுதான் மாற்றம். விஜய் மூளையில் நடந்திருப்பதுதான் மாற்றம்.






