
கோயம்புத்தூர் – வ.உ.சி. மைதானத்தில், திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற, “பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-
வந்ததிலிருந்து ஒரு மணிநேரமாக, நான் ஒருவிதமான மகிழ்ச்சியும் கூச்சமும் கலந்த மனநிலையில் அமர்ந்திருந்தேன். அந்த அளவிற்குப் பாராட்டித் தள்ளிவிட்டீர்கள்! உணர்ச்சிப்பெருக்கோடு நிற்கிறேன். என்ன பேசுவது என்று தெரியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதிலும், நம் மானமிகு ஆசிரியர் அவர்கள், பாராட்டோடு சேர்த்து அன்பையும் பாசத்தையும் பொழிந்திருக்கிறார்!
குழந்தைக்கு எப்படித் தாயின் முத்தமோ, அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தாய்க் கழகத்தின் அன்பு முத்தம் இது! நம் திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைக்காகப் பாராட்டியதாக எடுத்துக்கொள்வதை விட, இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட ஊக்கமாகவே இந்த விழாவை எடுத்துக்கொள்கிறேன். அதற்குத் தகுதியுள்ளவனாக என்னை மேலும் வளர்த்துக்கொள்வேன் என்று உங்களுக்கு முதலில் உறுதி தருகிறேன்.
அறிவுப் புரட்சியின் அடையாளமாக விளங்கும் ஏராளமான நூலகங்களைத் தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைத்திருக்கிறோம். அதில் முக்கியமானதாக, கோவையின் புதிய அடையாளமாகப் ‘பெரியார் அறிவுலகம்’ கம்பீரமாக நிற்கிறது! அப்படிப்பட்ட பெரியார் அறிவுலகத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டு விழா நடத்தப்போகிறோம் என்று, நம்முடைய மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள் அழைத்தார். மன்னிக்க வேண்டும், உத்தரவிட்டார். அய்யா ஆசிரியர் அழைத்து, நான் வராமல் இருக்க முடியுமா?
நாம் செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதே பெரியார் திடல்தான் என்று சொன்னவன் நான்! தந்தை பெரியாருக்குப் பிறகு - அன்னை மணியம்மையாருக்குப் பிறகு - பெரியார் கொள்கையை மலைபோல் காத்து வருபவர்தான், நம் ஆசிரியர் அவர்கள்! இன்னும் சொல்லவேண்டுமென்றால், என்னையும் காத்தவர் ஆசிரியர்தான்! ஓராண்டு காலம் மிசா சிறைவாசத்தில் அவர் பாதுகாப்பில்தான் நான் இருந்தேன். ஏன், இப்போதும் நம்மை வீழ்த்த, என் மீது வீசப்படும் அவதூறுகளுக்கு, ஆதாரங்களோடு தக்க பதிலடி தந்து, அறிக்கைகள் வெளியிட்டு, அந்த விமர்சனத் தாக்குதல்களை முறியடிக்கும் முதல் நபர் யார் என்று கேட்டால், நமது மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள்தான்!

ஆசிரியர் அவர்களே... என் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ, அதே அளவுக்கு நானும் பாசத்தையும் மரியாதையும் வைத்திருக்கிறேன். அதனால், உரிமையோடு சொல்கிறேன்... உங்கள் வயதை மறந்து, நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். அவ்வப்போது கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால், நீங்கள் கோபப்படுவீர்கள். அதனால், உங்கள் உடல்நலத்தில் இன்னும் கூடுதலாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று, தலைவர் கலைஞரின் மகனாக, உரிமையோடு கேட்கிறேன்.
பெரியார் அறிவுலகத்தைக் கோவையின் அடையாளமாக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அடையாளமாக, நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைத்தோம்! அதை உருவாக்குவதற்காக, திராவிட மாடல் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு பல முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். 99 சதவீதம் பணிகள் முடிந்திருந்த நிலையில் இங்கு வந்து, அந்தப் பணிகளை எல்லாம் பார்வையிட்டுச் சென்றபோதுதான், தேர்தல் தேதி அறிவிப்பு வந்தது.
நான் மட்டுமல்ல, அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நம்முடைய எ.வ.வேலு அவர்களும் பத்து முறைக்கு மேல், பெரியார் அறிவுலகத்தின் ஆய்வுப் பணிகளுக்காகக் கோவைக்கு வந்திருப்பார். அதையும் தாண்டித்தான் வந்திருப்பார். ஏனென்றால், நான் அந்த அளவுக்கு அவரிடம் அதைப் பற்றிய தொடர் நடவடிக்கைகளை கேட்டுக்கொண்டே இருப்பேன். பெரியார் அறிவுலகம் எப்படித் தோற்றமளிக்க வேண்டும், அதன் வடிவமைப்பு, உள்ளே இடம்பெற வேண்டிய அறிவியல் சம்பந்தமான பிரிவுகள், வாசலில் தந்தை பெரியார் சிலை எந்த மாதிரி அமைய வேண்டும் என்பது வரை ஆலோசனைகள் வழங்கிக்கொண்டே இருந்தேன்.
அதுமட்டுமல்ல, இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த திரு. செந்தில் பாலாஜி அவர்களை எப்போது பார்த்தாலும், பெரியார் அறிவுலகத்தின் பணிகளைப் பற்றி நான் கேட்காமல் இருந்ததே இல்லை. அப்படி நான் கேட்கும்போது, அடுத்தடுத்து என்ன திட்டங்கள் கோவைக்குத் தேவை என்று என்னிடம் கேட்டு வாங்கிவிடுவார். கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் கோவைக்குத்தான் அதிக முறை அரசு விழாக்களுக்கு நான் வந்திருக்கிறேன்.
செம்மொழி பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம், சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என, இந்த இடத்தைச் சுற்றி கோவையின் சாதனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நம் பெயரைச் சொல்லும் அளவுக்கு ஏராளமான பணிகள் இங்கு நடந்திருக்கின்றன. அந்தப் பணிகளையெல்லாம் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டவர்தான், பொறுப்பு அமைச்சராக இருந்த நம்முடைய அருமை நண்பர் செந்தில் பாலாஜி அவர்கள்! அதில் மணிமகுடமாக அமைந்ததுதான், பெரியார் அறிவுலகம்!
எத்தனையோ சாதனைகளை இந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியைப் பயன்படுத்தி, முதலமைச்சராக இருந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் செய்திருக்கலாம். ஆனால், என்னால் மறக்க முடியாத ஒரு சாதனையாக தந்தை பெரியார் பெயரில் அமைந்திருக்கும் அறிவுலகம் அமைந்திருக்கிறது.

பெரியார் அறிவுலகம்! இன்று நாம் பார்க்கும் தமிழ்நாட்டைச் செதுக்கியதில் மிக முக்கியப் பங்காற்றியவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்! அவரால்தான், நாம் பகுத்தறிவின் ஒளியைப் பெற்றோம்! சுயமரியாதை உணர்வைப் பெற்றோம்! தமிழர்கள் அதிகாரத்தை அடைந்தோம்! உரிமைகளை அடைந்தோம்! அத்தகைய பெரியார் பெயரில் அறிவுலகத்தை அமைத்தது என்னுடைய கடமை! நன்றியை எதிர்பார்த்தோ - பாராட்டை எதிர்பார்த்தோ நான் இதைச் செய்யவில்லை. இது ஆசிரியர் அவர்களுக்கும் தெரியும்; உங்களுக்கும் தெரியும்!
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, மதுரையில், தென்தமிழ்நாட்டின் அறிவாலயமாக விளங்கும், லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறும் - கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்தோம். அந்தச் சமயத்தில் “உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் நூலகங்கள் தேவையா?” என்று ஒரு சிலர் கேட்டார்கள். ஆனால், நாம் அமைக்கும் நூலகங்கள் வெறும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் இடமாக மட்டுமல்லாமல், நவீன வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து வேலை செய்தோம். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு, அதேபோல, கோவையிலும் - திருச்சியிலும் அமைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
அப்போது சில அமைச்சர்கள், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு என்பதால், பெரிய பெரிய நகரங்களில், மாநகரங்களில் தலைவர் பெயரிலேயே அமைக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், நான்தான் - சென்னையில், பேரறிஞர் அண்ணா பெயரில் நூலகம் இருக்கிறது, மதுரையில் தலைவர் கலைஞர் பெயரில் அமைத்துவிட்டோம், கோவையில் தந்தை பெரியார் பெயரிலும், திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் பெயரிலும் வைக்கலாம் என்று சொன்னேன். சொன்னபடியே, செய்தும் காட்டிவிட்டோம்!
இதைத் தொடர்ந்து நெல்லையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் அவர்களின் பெயரிலும், சேலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரிலும், நவீன நூலகங்களை அமைக்கும் பணிகளையும் தொடங்கினோம். தி.மு.க. ஆட்சியில் முடிவான பல திட்டங்கள், காரணமே சொல்லப்படாமல் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியில் ‘ரத்து’ செய்யப்படுகின்றன.
நெல்லை, கடலூர், சேலம் நூலகங்களுக்கு அந்தச் சூழ்நிலை வந்துவிடாமல், சீக்கிரமாகப் பணிகளை முடித்துத் திறந்து வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெரியார் அறிவுலகமே துவக்க நிலையில் இருக்கும் திட்டமாக இருந்திருந்தால், இதற்கும் மூடுவிழா நடத்த முயற்சி செய்திருப்பார்கள். நல்ல வேளையாக நாம் 99 சதவீத பணிகளை முடித்துவிட்டோம். அதனால், வேறு வழியில்லாமல் ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, ஜோசியர் சொன்ன தேதியில் வந்து திறந்து வைத்திருக்கிறார்கள்.
“என்ன நீங்கள்! எப்போதும் இந்த அரசை இப்படி விமர்சனம் செய்கிறீர்களே?” என்று ஆளுங்கட்சிக்கு ஆதரவான சிலர் கேட்கிறார்கள். இந்த ஆட்சியின் லட்சணம் அப்படி இருந்தால், நான் என்ன செய்ய முடியும்! நான் மட்டுமா விமர்சிக்கிறேன்? அனைத்துத் தலைவர்களும் விமர்சிக்கிறார்கள், மக்களும் பேச தொடங்கிவிட்டார்கள். இந்தச் சொதப்பல் அரசு அடிக்கும் கூத்துகளையெல்லாம் பார்த்துவிட்டு, யார்தான் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியும்? முதலமைச்சர் என்ன ஆடை அணிய வேண்டும், அவருடைய அலுவலகம் எங்கு இருக்க வேண்டும், அவர் என்ன பொட்டு வைக்க வேண்டும் என்று, எல்லாவற்றையுமே இந்த ஆட்சியில் ஜோசியர்தானே முடிவு செய்கிறார்.
என்னுடைய ஆட்சியில் பவர் செண்டரே இருக்காது என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் சொன்னாரே... ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? முதலமைச்சர் விஜய்யைப் டம்மியாக்கிவிட்டு, அவருக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் செண்டர்கள்தான் இந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கிறார்கள். இன்னும் சொல்லவேண்டுமென்றால், முதலமைச்சரை வைத்து இந்த பவர் செண்டர்கள் வித்தை காட்டும் சர்க்கஸ்தான், த.வெ.க. ஆட்சி! யாரெல்லாம் இந்த ஆட்சி வர வேண்டும் என்று வாக்களித்தார்களோ, அவர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டுப் பிரச்சினை வந்துவிட்டது. மக்கள் அனைவரும் இரவு நேரத்தில் குழந்தைகளோடு சாலைக்கு வந்துவிட்டார்கள். இப்போதுவரை அவர்களால் மின்வெட்டுப் பிரச்சினையை சரி செய்ய முடியவில்லை. இந்திய நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும்போதுகூட மின்சாரம் கட் ஆகிறது. கேட்டால், “ஜெனரேட்டரில்தான் இயக்குகிறோம்” என்று, அந்தத் துறை அமைச்சர் சொல்கிறார். அதாவது ஜெனரேட்டர் போடும் அளவுக்குத்தான் மின்சார விநியோகம் இருக்கிறது என்று அவரே ஒத்துக்கொள்கிறார். அடுத்த நாள், ஒரு பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். என்ன கோமாளித்தனம்!
அதுமட்டுமல்ல, இறந்த உடல்களைக்கூட எரிக்க முடியாமல் மின் மயானத்திலும் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி, செயற்கையாக மின்வெட்டை உருவாக்குவது எதற்காக? நம் தி.மு.க. ஆட்சியில் குறைந்த விலைக்குப் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, இப்போது அதைவிட இரண்டு மடங்கு அதிக விலைக்கு, வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். அதற்குத்தான், இந்த மின்வெட்டு நாடகம்!
மின்வெட்டைப் போலவே, அரிவாள் வெட்டு, கொலையும் கொள்ளையும் த.வெ.க. ஆட்சியில் தொடர்ந்து வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. சிவகங்கை, தூத்துக்குடி, தலைநகர் சென்னை என அனைத்து ஊர்களிலும் மையப் பகுதிகளிலேயே சகஜமாகக் கொலைகள் நடக்கின்றன! இந்த ஆகாவலி ஆட்சியில், தொழில் நகரமாக இருந்த கோவையிலேயே ஒரு மாதத்தில் பத்து கொலைகள் நடந்து, கொலை நகரமாக மாறியிருக்கிறது. அதுமட்டுமா? மூச்சுக்கு மூச்சு தூயசக்தி ஆட்சி என்று தம்பட்டம் அடித்தார்களே... அது எப்படியெல்லாம் துர்நாற்றம் அடிக்கிறது என்று சமூக ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்! போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு, இவர்களே மொத்தமாக உற்பத்தி செய்து, ஒளித்து வைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போகிறார்கள். பெற்றோர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் மாட்டுகிறவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால், த.வெ.க. நிர்வாகிகள்தான் பலபேர். இளைஞரணி, மாணவரணி, மகளிரணி போல, த.வெ.க.வில் பாலியல் குற்றவாளிகளுக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தனிப் பிரிவு உருவாக்க வேண்டும்! இவர்களுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்கத்தான் வக்கில்லை என்று பார்த்தால், சிறையில் இருக்கும் குற்றவாளிகள் அனைவரும் தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு - ஒரே சமயத்தில், 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடிய வரலாற்றுச் சாதனை, இந்து தூய சக்தி விஜய் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. அதற்குமுன் சென்னை புழல் சிறையில் இரண்டு கைதிகள் சுவர் ஏறி குதித்துத் தப்பித்தார்கள். ஃபைல்களைத் திறக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இப்போது ஜெயிலைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். இதே கோவையில் ஏற்கனவே தப்பிப் போன வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளியைத் திரும்பவும் தப்பிக்க விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குச் செல்கின்றன! இதுதான் த.வெ.க. அரசாங்கம். தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே டாப்பில் இருந்த நம் தமிழ்நாடு, ஐந்தே மாதத்தில் தரைமட்டத்திற்குச் சென்றுவிட்டது. “Master, மாற்றங்கள் வரும் Faster” என்று த.வெ.க. கட்சியினர் பாடினார்களே. அதற்கு அர்த்தம் அப்போது புரியவில்லை, இப்போதுதான் புரிகிறது! ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டிய அவமானத்தை ஐந்தே மாதத்தில் வாங்கிவிட்டு, வெட்கமே இல்லாமல் வெற்றித் தமிழகம் என்று பீலா விடுகிறார்களே! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் வேதனையில் இருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், கூலித் தொழிலாளர்கள் என அனைவரின் வயிற்றிலும் அடித்துவிட்டார்கள். ஆறு மாதத்திலேயே மக்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்துவிட்டார்கள்.
இதையெல்லாம் சரிசெய்ய முதலமைச்சர் ஏதாவது செய்வார் என்று பார்த்தால், அவர் என்ன செய்கிறார்? கோட்சூட் போடுகிறார். ஜோசியர் சொன்ன, பட்டு வேட்டி சட்டை கட்டுகிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கும் - புழல் சிறைச்சாலைக்கும் சென்று, பரிகார பூஜை செய்கிறார். கான்வாயில் வந்து, பெரியார் அறிவுலகம், சென்னை மெட்ரோ என தி.மு.க. அரசு கட்டி முடித்த திட்டங்களைத் திறந்து வைத்துவிட்டு, கை அசைக்கிறார். 10 மணி முதல் 5 மணி வரை வேலைக்குச் செல்கிறேன் என்று பாவ்லா செய்கிறார். அதுவும், சனி, ஞாயிறு விடுமுறை. அவ்வளவுதான்! மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே... ‘Uncle’ விஜய் அவர்களே... முதலமைச்சர் பொறுப்பு, 10 முதல் 5 மணி வரையிலான அலுவலக வேலை இல்லை. அதற்காக ஒட்டுமொத்தமாகத் தன்னை ஒப்படைத்துவிட்டு வாழ வேண்டும். இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் போல, கால் ஷீட்டில் மட்டும் வேஷம் போட்டுவிட்டு செட்டுக்குச் சென்றுவிட்டு வரும் வேலை கிடையாது, முதலில் அதை புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் கஷ்டப்பட்டுப் பாசாங்கு செய்துகொண்டிருந்தால், அதை ஓவர்டேக் செய்யும் வகையில், புதிய பிரச்சினைகள் வேறு கிளம்பியிருக்கின்றன. தினமும் ஏதாவது ஒரு குற்ற வழக்கில் த.வெ.க. நிர்வாகிகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். தினமும், டி.வி.யில் பார்க்கிறீர்கள், பத்திரிகையில் படிக்கிறீர்கள். அந்தக் கட்சி மாவட்டச் செயலாளர்களும், ஒன்றியச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ, ஆடியோ லீக் ஆகிறது. ஆள் ஆளுக்கு வசூல்ராஜாக்களாக இருக்கிறார்கள். பெண் நிர்வாகிகளுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ஆதாரங்கள் வெளிவருகின்றன. த.வெ.க. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதிவிடும் ரீல்ஸ்களை மிஞ்சும் வகையில், அவர்களின் திருவிளையாடல்களை அம்பலப்படுத்தும் ரீல்ஸ்கள் வெளியாகி, சூப்பர் ஹிட் அடிக்கிறது. இந்த கேவலங்களையெல்லாம் மறைக்கத்தான், நம்முடைய முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் திரும்பத் திரும்ப ரெய்டு செய்கிறார்கள். திருச்சியில் இடைத்தேர்தல் வேறு வருகிறது. அதற்காகவும் சும்மா ஷோ காட்ட இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதுமாதிரியான அரட்டல் மிரட்டல்களுக்கு தி.மு.க. பயந்து பின்வாங்கியதாக வரலாறே கிடையாது. அழுத்த அழுத்தத்தான், நாங்கள் மேலே எழுவோம்! அதுதான், DMK-வின் DNA!
ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும்? அந்தப் பதவிக்குரிய பொறுப்போடு செயல்பட வேண்டுமா, வேண்டாமா? கடந்த நம்முடைய தி.மு.க. ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் லாக்-அப் மரணம் அடைந்தார். காவல்துறைக்குப் பொறுப்பு வகிப்பவன் என்ற முறையில், நான் என்ன செய்தேன்? காவலர்கள் சிலரின் தவறுக்கு அந்த இளைஞரின் தாயாரிடம் நான் போன் போட்டு வருத்தம் தெரிவித்து ‘Sorry’ கேட்டேன். நானே அந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டேன். ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? முதலமைச்சர் எந்தத் தவறுக்காவது பொறுப்பேற்று, பதிலோ விளக்கமோ கொடுக்கிறாரா?
பல நூறு கோடி மதிப்பிலான – 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் D.R.I. கைது செய்திருக்கிறார்கள். கட்சித் தலைவரான விஜய், மாண்புமிகு முதலமைச்சர், ‘Uncle’ விஜய், இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டுமா, இல்லையா? மாநில அரசின் காவல்துறை பூபாலனைக் கைது செய்யாதது ஏன்? முதலமைச்சரான விஜய்தான் இதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். பாலியல் குற்றங்களில் அவர் கட்சியினர் தொடர்ந்து சிக்குகிறார்கள். அவர்களுக்கு இவர் இதுவரை அறிவுறுத்தல் ஏதாவது கொடுத்தாரா? லாக்-அப் மரணங்களைப் பற்றி வாய் திறந்தாரா?

பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே பயந்து ஓடுபவராக முதலமைச்சர் விஜய் இருக்கிறார். இவ்வளவு பலவீனமான முதலமைச்சரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை. காரணம், ஊடகங்களைச் சந்தித்தால் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றே இவருக்குப் புரியாது. அப்போது இன்னும் எக்ஸ்போஸ் ஆகிவிடுவோம் என்று நடுங்குகிறார் அவர். ஆனால், அவர் இப்போது நடிகர் விஜய் கிடையாது. முதலமைச்சர் விஜய்! “மக்களின் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டேன்” என்று, அவர் இருக்க முடியாது. அவருக்கு எந்த வாய்ப்பும் கிடையாது. பதில் சொல்வது அவருடைய கடமை!
நன்றாக ரிகர்சல் பார்த்துவிட்டு, வாகனத்தின் மேல் ஏறி நின்று ஆடிக்கு ஒருதடவை, அமாவாசைக்கு ஒருதடவைதான் பேசுகிறார். இவர் பேச வேண்டும் என்றால், மாதம் ஒருமுறை இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா? அப்போது கூட அவர் வாயிலிருந்து பதில் எதுவும் வராது. எதைக் கேட்டாலும் அவரிடம் இருக்கும் ஒரே பதில், தி.மு.க. – தி.மு.க. – தி.மு.க.! பாதி இரவில் யாராவது யாராவது எழுப்பி கேட்டால்கூட, ‘தி.மு.க.’ என்று சொல்லிவிட்டுதான் எழுவார். த.வெ.க. அமைச்சர்கள் அனைவரும் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன், தி.மு.க. ஆட்சியில் வேலைகள் எப்படி வேகமாக நடந்தன என்றும் இப்போது ஒப்பிட்டுப்பேசத் தொடங்கிவிட்டார்கள். சி.எம். சார், சினிமாவில் நடிக்கும்போது ஒரு ஃபார்முலா வைத்திருந்தார்... என்ன ஃபார்முலா தெரியுமா? தன்னுடைய ‘ஆன்லைன் விஷமிகள்’ மூலமாக, சக நடிகர்கள் மீது அவதூறுகளை கிளப்பிவிட்டு, அவர் வெற்றிபெறுவார். அதே ‘ரூட்’-இல், அரசியலில் ஒருமுறை வெற்றிபெற்றுவிட்டார். தமிழ்நாட்டு மக்களை இரண்டாவது முறையும் அவரால் உறுதியாக ஏமாற்ற முடியாது! மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்!
மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், தமிழ்நாட்டின் ஏழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் மாதம் 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை, கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய கஷ்டத்தில் இப்போது இருக்கிறார்கள். ஒரு கொத்தமல்லிக் கட்டு இப்போது 30 முதல் 50 ரூபாய்க்குச் சென்றுவிட்டது. அரிசி, காய்கறிகள் வாங்குவதற்கே மக்களால் முடியவில்லை. பண்டிகைக் காலத்தில்கூட அவர்களால் கூடுதலாக செலவு செய்ய முடியவில்லை. அவர்களின் கண்ணீரே இந்த ஆட்சியை முடித்து வைத்துவிடும்! இந்த ஆட்சி நீடிப்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் - தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. இயற்கை பேரிடர் வந்தால் மஞ்சள் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட் விடுப்பது போல, த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கே ‘ரெட் அலெர்ட்’ விடப்பட்டிருக்கிறது! கூடிய விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் தமிழ்நாடு எனும் அறிவுலகத்திற்கு நல்லது.
இங்கே இளைஞர்கள் வந்திருக்கிறீர்கள்... இந்தத் தேர்தலில் பல இளைஞர்கள் மாற்றம்... மாற்றம் என்று சொல்லி, வீட்டில் இருப்பவர்களை வாக்கு செலுத்த வைத்தார்கள். ஆனால், கொலையும் - பாலியல் வன்முறையுமாக இருக்கும் இந்த ஆட்சி, தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் தவறான மாற்றம் என்று அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லுங்கள்! நிறைய பேர் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்... அவதூறுகளையும் - பொய்களையும் - போலி வீடியோக்களையும் பரப்பி, ஆளுங்கட்சி செய்துகொண்டிருப்பது – ‘Healthy Politics’ அல்ல; ‘Filthy Politics’ என்று மக்களுக்குப் புரிய வையுங்கள்!
இன்றைக்கு ஃபோனில்தான் இளைஞர்கள், பெண்கள் அதிக நேரம் செலவழிக்கிறார்கள்... நம்முடைய ஃபோனுக்கு வரும் மெசேஜ்களும், இன்ஃப்ளுயன்ஸர் வீடியோக்களும், வெறும் தகவல்கள் மட்டும்தான். தகவலைத் தெரிந்துகொள்வதற்கும் உண்மையைப் புரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது! அதை குழந்தைகள் – இளைஞர்கள் – பெரியவர்கள் என அனைவரும் உணர வேண்டும்! உண்மையைப் பார்த்துப் பொய் பயப்படும், வெளிச்சத்தைப் பார்த்து இருள் பயப்படும்! அதுபோலத்தான் த.வெ.க. மூடர் கூடமும் அறிவுச் செயல்பாடுகளையும், நூலகங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் சமூகநீதிப் பார்வையும், தனித்தன்மையும் மழுங்கிவிடாமல், பெரியார் அறிவுலகம் போன்ற நூலகங்கள் பாதுகாக்கட்டும்! அறிவியல் பார்வை தழைக்கட்டும்!
மீண்டும் ஒருமுறை, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களுக்கும் - துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கும் - பொதுச்செயலாளர் தம்பி அன்புராஜ் அவர்களுக்கும் – திராவிடர் கழகத்தின் தோழர்கள் அத்தனை பேருக்கும் – கருஞ்சட்டை வீரர்கள் உங்களுக்கும், அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தை முன்னோடிகள் – நிர்வாகிகள் அத்தனை பேருக்கும், இந்த நிகழ்ச்கிக்கு வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் பெரியோர்கள் – தாய்மார்கள், ஒரேவரியில் சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கு, நன்றி, நன்றி, நன்றி!






