
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்க!
“நாம் நமது படங்களின் மூலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களைச் சொன்னோம்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை வரிசைப்படுத்தும் போது முதலமைச்சர் விஜய் சொன்னார். ஆம், அது உண்மை தான்!
அதில் ஒன்று ...
நோவ் ப்ளீஸ் நா ப்ளீஸ் நா
தம்பிக்களுக்கோசம் தம்பிக்களுக்கோசம்
வா வா வா அய்யய்யோ - என்ற பாடல் ஆகும்.
அதில் வரும் மிக முக்கியமான கொள்கை விளக்க வரிகள் இவை தான்...
பத்தாது பாட்டில் நா குடிக்க
அண்டால கொண்டா சேர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க - என்பது ஆகும்.
டவுன் டடடவுன் டடடவுன் டவுன் டவுன் டவுன்- என்று ஆடி தனது தொண்டர்களை ஈர்த்தார் விஜய். விழிப்புணர்வை ஏற்படுத்தினார் விஜய்.
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான்டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான் பாரு - என்பதும் அந்தப் பாடலில் உள்ள வைர வரியாகும். அப்படி வந்த 'கில்லி' சரத் தான் இப்போது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார். இவரை ‘கில்லி' சரத் என்றால் தான் அவரது வட்டாரத்தில் தெரியும்.
அவர் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது ‘பவுடர்' இழுக்கிறார். மொபைல் போன் திரையில் ‘பவுடர்' போட்டு ஏ.டி.எம்.கார்டு மூலமாக அதை சீர் செய்கிறார். 500 ரூபாய் நோட்டு வைத்து இதை மறைத்துக் கொள்கிறார். இதையே வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment" என்று ரீல்ஸ் ஆக அவரே வெளியிட்டுக் கொள்கிறார். 'கில்லி வெல்ல வருவாண்டா' என்று விஜய் சொன்னாரே அந்த Moment இது!
இவர் தான் இப்போது மாண்புமிகு அமைச்சர் ஆகிவிட்டார். 'அண்டாவுல கொண்டா' என்று சொன்னவர் முதலமைச்சர் ஆனதைப் போல!
"போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழ்நாடும் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அன்று அமைச்சர் சரத்குமாரின் வீடியோவானது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவாக வெளியானது. அமைச்சர் சரத்குமார் நடித்த 'போதை நாயகன்' படம் கோடிக்கணக்கான மக்களுக்கு டவுன்லோட் செய்யாமலேயே போய்ச் சேர்ந்து விட்டது.
விஜய் சிஷ்யன் சரத்குமார் அதற்குச் சொன்ன விளக்கம் தான் சூப்பர். ‘குழந்தைக்கு உடம்பு சரியில்லை. மாத்திரையை பொடி செய்து கொடுத்தேன்' என்கிறார் சரத்குமார்.
மாத்திரையை பொடி செய்து கொடுப்பார்கள் என்பது உண்மை தான். அது மாத்திரை அல்ல. செல்போன் மீது வைத்து ஏ.டி.எம்.கார்டு மூலமாக எந்த மாத்திரையையும் பொடி செய்ய முடியாது. மாத்திரையை கனமான பொருள் மூலமாகத்தான் பொடி செய்ய முடியும். அதுவும் செல்போனில் மாத்திரையை வைத்து கனமான பொருளால் அமுக்கினால் செல்போன் கவர் நொறுங்கிவிடும். குழந்தைக்கான மாத்திரையை நசுக்கும் போது எதற்காக 500 ரூபாய் வைத்து மறைக்க வேண்டும்? வெளிப்படையாகவே பண்ணலாமே?குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதை "Thug Life Moment” என்று யாராவது கொண்டாடுவார்களா? கொதிக்கும் காய்ச்சல் நேரத்தையுமா கொண்டாடுவீர்கள்?
இதில் மிக முக்கியமான கேள்வி, அவர் சொல்லும் குழந்தை, அந்த வீடியோவில் இல்லை. ‘பவுடர்’ வீடியோ வெளியானதும் பாவம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருகிறார் 'கில்லி' சரத். சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் மாண்புமிகு அமைச்சர் சரத்குமாரால் பதில் சொல்ல முடியாது.
*குழந்தைக்கு மாத்திரை கொடுக்கிறதுக்கு எதுக்கு “Thug Life moment” என்று வீடியோ போட்டார்?
*உடம்புக்கு முடியாமல் இருக்கும் குழந்தையை அழைத்துக்கொண்டு IPL Match பார்க்கப் போவீங்களா சரத் சார்?
*அந்த வீடியோவில் கடைசி வரை எந்தக் குழந்தையும் காணும்?
*இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு எந்த ஆட்சியிலும் எந்த மந்திரி மீதும் வந்ததில்லை....இதுதான் முதல் முறை!

*எல்லா தொலைக்காட்சிகளிலும் இதுதான் ஓடுகிறது. மிக முக்கியபொறுப்பு அமைச்சராக இருக்கிறார்....இதை முறையாக விசாரிக்க வேண்டும்…
- என்று சமூக வலைதளத்தில் கேள்விகள் கேட்கப்படுகிறது. மாத்திரையை பவுடர் ஆக்குவது எப்படி என்ற வீடியோக்களை பலரும் எடுத்து பரப்பி வருகிறார்கள். ஆனால் தூயசக்தி முதலமைச்சருக்கு துளியும் கூச்சம் இல்லை. அமைச்சர் சரத்குமாரின் பவுடர் வீடியோ வெளியானதும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்க வேண்டாமா? சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலக வைத்திருக்க வேண்டாமா? கைது செய்திருக்க வேண்டாமா?
போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985 (NDPS Act) இன்படி இது மிகப்பெரிய குற்றம் ஆகும். இந்தச் சட்டத்தின் கீழ் போதைப் பொருட்களை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் மற்றும் நுகர்தல் ஆகியவை கடுமையான குற்றங்களாகும். இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் அமைச்சராக நீடிக்கலாமா?
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவரணிசார்பில் போராட்டம் நடை பெற்றுள்ளது. ”அமைச்சர் சரத்குமாரின் விளக்கம் த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது” என்று சொல்லி இருக்கிறது தி.மு.க. மாணரவணி.
மகா யோக்கியரைப்போல சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், என்ன செய்யப் போகிறார்? சரத்குமாரின் பதவியை பறிப்பாரா? அல்லது தனது நாற்காலியைக் காக்க சரத்குமாரைக் காப்பாற்றுவாரா?






