
முரசொலி தலையங்கம்
29.06.2026
நல்லா ஆள்றாங்க ஆட்சி...!
தனது ஆஸ்தான ஜோசியருக்கு அரசாங்க பதவி கொடுத்தார் விஜய். தனது புரமோஷன் அட்மினுக்கு அரசாங்க பதவி கொடுத்தார் விஜய். இதுவரையிலான தனது செலவுகளைப் பார்த்துக் கொண்ட ஒருவருக்கு அரசாங்க பதவி கொடுத்தார் விஜய். ஓடாத தனது படத்தை எடுத்த படத்தின் தயாரிப்பாளருக்கு அரசாங்க பதவி கொடுத்துள்ளார் விஜய். இனி அடுத்தடுத்து அவர் யாருக்கு எல்லாம் என்ன பதவி எல்லாம் கொடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டமான காரியம் அல்ல.
தூய ஆட்சி என்று சொல்லி விட்டு கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் துப்பி வருகிறார் விஜய். சொந்தப் புத்தியும் இல்லை, சொல்லுவார் சொல்லும் உறைக்காது என்பதற்கு இந்த நியமனங்களே சாட்சியங்கள்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர், தமிழ்நாட்டின் குரலை ஒன்றிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியவர். மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இணைப்புப் பாலமாக இருக்க வேண்டியவர். தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசின் துறை சார்ந்த அமைச்சகங்கள் மூலமாக செயல்படுத்த வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. அவர் ஒன்றிய அமைச்சர்களோடு பேச வேண்டும். ஒன்றிய அரசுத் துறை செயலாளர்களோடு பேச வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு சாதகமாக, அல்லது பாதகமாக ஒன்றிய அரசு செயல்படுவதைக் கண்காணித்து மாநில அரசுக்கு சொல்ல வேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டிய ஒருவருக்கு தமிழ்நாடு தெரிந்திருக்க வேண்டும். மாநில நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். இவர் பேரைச் சொன்னால் டெல்லியில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.

விஜய்க்கு மட்டுமே தெரிந்த, விஜய்யை வைத்து படம் எடுத்த, மற்றபடி தமிழ்நாட்டின் திரைத்துறைக்கே கூட தொடர்பு இல்லாத, கர்நாடகாவை மையமாகக் கொண்ட கே.வெங்கட நாராயணா என்பவரை தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமித்திருக்கிறார் விஜய். கேட்டால், 'அவர் கர்நாடகம் அல்ல, ஆந்திரா' என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். சரி, தமிழ்நாட்டைச் சாராத ஒருவரைத்தான் தமிழ்நாட்டின் சிறப்புப் பிரதிநிதியாகப் போட வேண்டுமா? ஜோசியர், நண்பர், அட்மின் வரிசையில் இவரையும் பக்கத்திலேயே சேர் போட்டு வைத்துக் கொள்ள வேண்டியது தானே? அவரை எதற்கு டெல்லி பிரதிநிதி என்று சொல்லி தமிழ்நாட்டை அவமானப்படுத்த வேண்டும்?
'கே.வெங்கட நாராயணாவுக்கு என்ன அனுபவம் இருக்கிறது?' என்ற நியாயமான கேள்வியை பலரும் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். 'நமக்கே எந்த அனுபவமும் இல்லை, டெல்லி சிறப்புப் பிரதிநிதி மட்டும் அனுபவம் வாய்ந்தவரை நியமிக்க வேண்டுமா?' என்று முதலமைச்சர் விஜய் நினைத்திருக்கலாம்.
ஜோசியரை, தனக்கு செலவு செய்பவரை, தனது அட்மினை, தனது படத் தயாரிப்பாளரை நியமித்ததற்காக இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நாம் ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது விஜய்யின் துணிச்சலைத்தான். 'எவரையும் நான் நியமிப்பேன், கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை' என்று நினைக்கிறார் விஜய்.
தான் என்ன செய்தாலும் தனது கூட்டணிக் கட்சிகள் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் விஜய். அவர்களுக்கு சொரணையோ கோபமோ வராமல் இருக்க மந்திரி பதவியைக் கொடுத்தாகி விட்டது. அவர்கள் தயவும் தேவைப்படாமல் ஐந்து பேரை ராஜினாமா செய்ய வைத்துள்ளோம். இடைத்தேர்தலில் அவர்களை வெற்றி பெற வைத்தால் இந்தக் கூட்டணிக் கட்சிகள் தயவும் தேவையில்லை.
ஊடகங்கள், இன்னமும் தி.மு.க.வைக் குறை சொல்வதில் தான் சுயசுகம் கண்டு வருகின்றன என்பதையும் விஜய் நன்கு புரிந்து வைத்துள்ளார். அவர்கள் எதிர்ப்பும் வராது.
தனது கட்சிக்கு பொதுக்குழுவும் இல்லை. செயற்குழுவும் இல்லை. கேள்வி கேட்பார் எவருமில்லை. கிடைத்த பதவியை தக்க வைத்தால் போதும் என்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். அவர்கள் மத்தியிலும் சலசலப்பு வராது.

இத்தகைய சூழலில் தான் வைத்ததுதான் சட்டம். தான் செய்வதுதான் ஆட்சி என்று இருக்கிறார் முதலமைச்சர் விஜய். தேர்தலுக்கு முன்னதாக அவர் பேசிய பேச்சில் ஒரு துளி உண்மையான நம்பிக்கை இருந்திருக்குமானால் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாலியல் புகாரை தனது ரசிகை ஒருவரே வைத்த மறுநிமிடமே அவரது பதவியை பறித்து கைது செய்திருப்பார்.
அமைச்சர் சரத்குமார், போதை மருந்து பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியானதும், அவரது அமைச்சர் பதவியை பறித்திருப்பார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதனின் நடவடிக்கை மிகமிக அசிங்கமானது. அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருப்பார். இது எதுவும் செய்யவில்லை விஜய். ஏனென்றால் இவர்கள் ஒவ்வொருவரும் அவருக்குத் தேவை. இவர்கள் எண்ணிக்கையில்தான் அவரது பதவி நாற்காலியே இருக்கிறது. எனவேதான் பாலியல், போக்சோ, போதைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களால் முதலமைச்சர் நாற்காலியில் நீடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
முதலமைச்சர் விஜய் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி போட்ட வழக்கு,சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரி ஏய்ப்பு வழக்குகள், கரூரில் 41 பேர் மரணத்துக்கு காரணமானவர் என சிபிஐ வழக்கு. இப்படிப்பட்டவர் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? தனது தகுதிக்கு ஏற்றவர்களை அவர் நியமித்துக் கொள்கிறார். நல்லா ஆள்றாங்க ஆட்சி...!






