
செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன், தனது அன்றாடத் தேவைகளுக்காகவும் செலவுகளுக்காகவும் ஆன்லைன் லோன் செயலிகளை நாடியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நான்கு வெவ்வேறு ஆன்லைன் லோன் செயலிகள் மூலம் முறையே ரூ.6,000, ரூ.9,000 மற்றும் ரூ33,000 எனப் பல கட்டங்களாகச் சிறு தொகைகளைக் கடனாகப் பெற்றுள்ளார்.
ஆனால், கடன் கொடுத்த சில நாட்களிலேயே அந்த ஆன்லைன் செயலிகளின் பிரதிநிதிகள், அசல் தொகையை விடப் பல மடங்கு கூடுதல் பணம் செலுத்துமாறு மணிகண்டனைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.கேட்ட தொகையைக் கொடுக்கத் தாமதமானதால், அந்தத் கும்பல் மணிகண்டனின் செல்போன் தொடர்புகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அவருடைய புகைப்படங்களை ஆபாசமாக எடிட் செய்து அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
"உடனடியாகக் கேட்கும் தொகையைக் கட்டாவிட்டால், உனது ஆபாசப் புகைப்படங்களை உனது தாய், தந்தை, அக்கா மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி விடுவோம்" எனக் கூறித் தொடர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தத் தகாத குறுஞ்செய்திகளாலும் , சமூகத்தில் தனக்கு அவமானம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தாலும் கடந்த சில நாட்களாக மணிகண்டன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.சம்பவத்தன்று மணிகண்டனின் பெற்றோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்களைச் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. மணிகண்டன் தனது தாய் மற்றும் தந்தையைப் பேருந்து நிறுத்தம் வரை சென்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும், மணிகண்டனைத் தொலைபேசியில் அழைத்தும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் மணிகண்டன் தூக்கில் தொங்குவதைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெருமாள்கோவில் காவல்துறையினர், மணிகண்டனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த அவரது அறையைச் சோதனையிட்டபோது, "அம்மா, அப்பா, அக்கா, மாமா, அண்ணா, அண்ணி எல்லோருக்கும் சாரி" எனத் தன் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டு மணிகண்டன் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் தந்தை வெங்கடேசன் கூறுகையில், "என் மகனுக்கு வெளியில் எந்த நபரிடமும் கடன் வாங்கும் பழக்கம் கிடையாது. அவன் ஆன்லைன் லோன் செயலியில் (டன் வாங்கிய விஷயமே அவன் இறந்த பிறகுதான் எங்களுக்குத் தெரியவந்தது. என் மகனின் மரணத்தில் எனக்குப் பலத்த சந்தேகம் இருக்கிறது," என்றார்.
என் மகனுக்குச் சிகரெட் அல்லது பீடி குடிக்கும் எந்தவொரு கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால், அவன் தூக்கில் தொங்கிய அறையில் இரண்டு பீடித்தண்டுகள் கிடந்துள்ளன. யாராவது வீட்டிற்குள் வந்து அவனை மிரட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்று காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும். என் பிள்ளையைப் போல இனி எந்தவொரு இளைஞரும் இந்த ஆன்லைன் லோன் செயலி என்னும் கொடூர வலையில் சிக்கி உயிரை விடக்கூடாது.
இதற்குக் காரணமான செயலி நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அழுதபடியே தெரிவித்தார்.இச்சம்பவம் குறித்துச் சிங்கப்பெருமாள்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் லோன் செயலி மோசடிகளும், கடன் மீட்பு என்ற பெயரில் நடக்கும் மனரீதியான அத்துமீறல்களும் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்து வருகின்றன. சட்டப்பூர்வமற்ற முறையில் செயல்படும் இதுபோன்ற போலியான கடன் செயலிகளை முற்றிலுமாகத் தடை செய்வதோடு, அவற்றின் பின்னணியில் இயங்கும் கும்பல்கள் மீது காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவினர் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.






