முரசொலி தலையங்கம்

“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!

“மத்­திய கிழக்­கில் திடீர் போர்!” என தலைப்பிட்டு, போர் நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை எடுத்துரைத்த முரசொலி தலையங்கம்.

“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மத்திய கிழக்கில் திடீர் போர் மூண்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் தொடுத்துள்ளது. இதனால் சுற்றியுள்ள நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இது உலகத்தின் பல்வேறு நாடுகளை பாதிக்கும் போராக மாறி வருகிறது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்று அமெரிக்கா பெயர் சூட்டி இருக்கிறது. ‘ரோரிங் லயன்' என்று பெயர் சூட்டி இருக்கிறது இஸ்ரேல்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்கிறது. புகை மண்டலமாக அந்த நகர் காட்சி தருகிறது. ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஈரான் தலைமை குரு அயதுல்லா அலி கமேனி இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 86 வயதான இவர்தான் ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் ஆவார். அவருடன் அவர் மகள், மருமகன், மருமகள் ஆகியோரும் இறந்து போயிருக்கிறார்கள். இவர் கொல்லப்பட்டுள்ளது ஈரானை அதிகப்படியான கோபத்துக்குத்தள்ளி இருக்கிறது. ஈரான் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!

இதற்கான பதில் தாக்குதலை ஈரானும் தொடங்கி இருக்கிறது. வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தலைமையகம் தாக்கப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை இலக்கு வைத்து தாக்கி வருகிறது ஈரான்.

எதையும் தாங்கள் செய்தால் தவறு கிடையாது, மற்றவர்கள் செய்தால் தவறு என்று நினைக்கும் மனோபாவம்தான் இந்தப் போருக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும். நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு இக்கோரிக்கை வலுவடைந்தது.

இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே ஈரானைச் சுற்றி போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தத் தொடங்கியது. 'அமெரிக்கா எப்போது தாக்குதல் நடத்தினாலும், நாங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலையங்க ளின் மீது தாக்குதல் நடத்துவோம்' என்று ஈரானும் சொல்லி வந்தது.

ஈரான் அரசுக்கு எதிராக அந்த நாட்டில் உள்ளூர் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா தெரிவித்தது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கும்' என்றே டிரம்ப் அறிவித்தார்.

“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!

அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் உள்ள ஓமன் தூதரகத்தில் கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் தோல்வி அடைந்தது. உடனடியாக மூன்றே நாளில் குண்டு போடத் தொடங்கி விட்டது அமெரிக்கா.'இந்தப் போரால் உலக அமைதிக்கு எந்தப் பயனும் இல்லை. இதில் அமெரிக்காசிக்கிக் கொள்ள வேண்டாம்' என்று ஓமன் நாடு சொல்லி இருக்கிறது.

'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது' என்று அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் சொன்ன பிறகும் அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடங்கி இருப்பது சரியானது அல்ல. அணு ஆயுதத் தயாரிப்பு என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டது அல்ல என்று சர்வதேச அணுசக்தி முகமையும் சொல்லி இருக்கிறது. அதன் பிறகும் இதனை அமெரிக்கா செய்துள்ளது.

இன்னொரு நாட்டின் மீது நுழைந்து தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா மீது கடந்த ஜனவரிமாதம் ஒரு நடவடிக்கையை எடுத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தலில் வெனிசுலா ஈடுபடுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்த நிலையில், ஜனவரி 3ஆம் தேதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரன்சும் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டுக் கப்பல் மூலம் நியூயார்க்குக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது போன்றவை நியாயப்படுத்த முடியாதவை. இதுதான் மேலும் மேலும் தொடர்கிறது.

இப்போரானது சர்வதேச அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகள், ஈரானை ஆதரிக்கும் நாடுகள்என உலகம் பிரிந்து நிற்கிறது. 'அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகள் என்பவைவெறும் நாடகங்கள்' என்கிறது ரஷ்யா. 'ஈரானின் அத்துமீறல்களைக் கண்டிக்கிறோம்' என்கிறது கனடா. இத்தகைய கருத்துப் பிளவுகள் அதிகமாக ஆகி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ஈரானும் அமெரிக்காவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன. “கடந்த சில மாதங்களில் ஈரான் மீது அமெரிக்கா இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது ஆக்கிரமிப்பு நடவடிக்கை, மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றம்" என்று ஈரான் குற்றம் சாட்டி இருக்கிறது.

எப்போது முடியும் என்று சொல்ல முடியாததாக இது மாறி வருகிறது. எந்தப் போராக இருந்தாலும், அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டாலும், யார் தொடங்கினாலும் அதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். குண்டுகளும் ஏவுகணைகளும் ஒருபோதும் தீர்வாக அமையாது.

banner

Related Stories

Related Stories