விளையாட்டு

பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!

"நெய்மர் கட்டிங்" என்ற பெயரே ஒரு தலைமுறையின் அடையாளமாக இருந்தது. இன்று அதே நெய்மர், உலகக் கோப்பை கனவு கலைந்த கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"என்னடா இது மண்டை?" என்று அம்மா கேட்க, "நெய்மர் கட்டிங் மா..." என்று மகன் பதிலளிப்பான். அதற்கு, "ஒழுக்கமா போய் முடிய வெட்டிட்டு வா... ஆத்தா வந்தா அவ்வளவுதான்..." என்று வரும் அந்த காட்சி 'தாய் கிழவி' திரைப்படத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தாலும், ஒரு காலத்தில் நெய்மர் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை மிக இயல்பாக நினைவூட்டுகிறது.

2010-களில் தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே "நெய்மர் கட்டிங்" என்பது ஒரு டிரெண்டாக இருந்தது. நெய்மரைப் போல முடி வெட்டிக்கொண்டு வந்ததால், பல மாணவர்கள் பள்ளி வாசலிலேயே நிறுத்தப்பட்ட சம்பவங்கள் அப்போது சாதாரணமாக நடந்தன. பிரேசில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும், நெய்மர் என்ற பெயர் தமிழ்நாட்டின் தெருக்களிலும், கால்பந்து மைதானங்களிலும், பள்ளி வளாகங்களிலும் ஒலித்தது. அந்தளவுக்கு சின்னஞ்சிறு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நட்சத்திரமாக இருந்தார் நெய்மர்.

பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!

உலக கால்பந்தில் திறமையாலும், வேகத்தாலும், ரசிகர்களின் பேரன்பாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய அந்த நெய்மர், FIFA உலகக் கோப்பை 2026-ல் தனது பயணத்தை கண்ணீருடன் நிறைவு செய்துள்ளார். ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நார்வேயிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம், ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் தொடரிலிருந்து வெளியேறியது. அந்த இறுதி விசில் ஒலித்தபோது, மைதானத்தில் கண்ணீருடன் நின்ற நெய்மரின் காட்சி உலகம் முழுவதும் ரசிகர்களை உருக வைத்தது.

இந்த உலகக் கோப்பைக்கு முன்பே நெய்மர் பல காயங்களால் அவதிப்பட்டார். முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்கள் கால்பந்தில் இருந்து விலகியிருந்த அவர், கடுமையான முயற்சிக்குப் பிறகே மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார். உடல்நல சவால்கள், விமர்சனங்கள், சந்தேகங்கள் என அனைத்தையும் கடந்து மீண்டும் உலகக் கோப்பை மேடையில் களமிறங்கிய நெய்மர், பிரேசிலுக்கு இன்னொரு முறை கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற கனவோடு விளையாடினார்.

பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!

நார்வேக்கு எதிரான போட்டியில் பிரேசில் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், எர்லிங் ஹாலண்டின் இரட்டை கோல் பிரேசிலை பின்னடைவுக்குத் தள்ளியது. போட்டியின் இறுதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மர் கோலாக மாற்றி ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் நேரம் பிரேசிலுக்கு சாதகமாக அமையவில்லை. இறுதி விசில் ஒலித்ததும், நெய்மர் மைதானத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார். அந்த காட்சி உலகக் கோப்பையின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக மாறியது.

2014 உலகக் கோப்பையில் காயம் காரணமாக அரையிறுதியை இழந்தார். 2018-ல் காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வி. 2022-ல் குரோஷியாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் வெளியேற்றம். இப்போது 2026-ல் நார்வேயிடம் அதிர்ச்சி தோல்வி. ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் பிரேசிலின் மிகப்பெரிய நம்பிக்கையாக களமிறங்கிய நெய்மருக்கு, உலக சாம்பியன் கோப்பையை கையில் ஏந்தும் கனவு மட்டும் தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய நெய்மர், "நான் முயற்சி செய்தேன்... என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இப்போது அது முடிந்துவிட்டது. இதே மைதானத்தில்தான் நான் பிரேசில் அணிக்காக என் பயணத்தைத் தொடங்கினேன்; இதே மைதானத்தில்தான் அது முடிகிறது." என்ற உணர்வுபூர்வமான கருத்தை தெரிவித்தார். அவர் அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும், அவரது வார்த்தைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன. உலகக் கோப்பை மேடையில் நெய்மரை மீண்டும் பார்க்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!

கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும், நெய்மர் பிரேசில் கால்பந்து வரலாற்றில் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பதித்தவர். பிரேசில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை, எண்ணற்ற மறக்க முடியாத தருணங்கள், அசத்தலான டிரிப்ளிங், அபாரமான அசிஸ்ட்கள், ரசிகர்களை எழுந்து நின்று கைதட்ட வைத்த திறமை என அவரது கால்பந்து வாழ்க்கை பல சாதனைகளால் நிரம்பியுள்ளது.

ஒரு உலகக் கோப்பை கோப்பை மட்டும் அவரது கைகளில் தவறியிருக்கலாம். ஆனால் ஒரு தலைமுறையின் கால்பந்து ரசிகர்களின் இதயங்களில் நெய்மர் என்ற பெயர் என்றும் நிலைத்திருக்கும். 2026 உலகக் கோப்பையில் அவர் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய தருணம், வெறும் ஒரு வீரரின் தோல்வி அல்ல. பிரேசில் ரசிகர்களின் பல ஆண்டுகால கனவு சிதைந்த தருணமாகவும், உலக கால்பந்தின் உணர்ச்சிமிக்க அத்தியாயங்களில் ஒன்றாகவும் நினைவில் நிற்கும்.

banner

Related Stories

Related Stories