
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று (2.3.2026) தண்டையார்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 33.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட தண்டையார்பேட்டை-1 மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, 170.00 கோடி ரூபாய் மதிப்பிலான 100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து, இரண்டாம் கட்டமாக 750 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதற்காக 289.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்னேற்ற வசதிகளுடன் மின்சாரப் பணிமனைகளாக மேம்படுத்துதல் மற்றும் புதிய பணிமனைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கவும், சென்னையை உலகின் முக்கியமான நகரமாக உருவாக்கவும் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்.
போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்து நிலையங்களை பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
அதனடிப்படையில் சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் (CCP-SUSP), உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் மூலம் 697.00 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 30.6.2025 அன்று வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை, திறந்து வைத்து, 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், 11.8.2025 அன்று 49.56 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரும்பாக்கம் மின்சாரப் பேருந்து பணிமனையைத் திறந்து வைத்து, 135 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
மூன்றாம் கட்டமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 19.12.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து திறந்து வைத்து, 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நான்காவது கட்டமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 26.2.2026 அன்று 52.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட மத்திய மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, 145 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (2.3.2026) ஐந்தாவது கட்டமாக 33.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட தண்டையார்பேட்டை-1 மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, 170.00 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 25 மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் உள்பட 100 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்துகள் திருவொற்றியூர் – பூந்தமல்லி, தண்டையார்பேட்டை – பூந்தமல்லி, சுங்கச்சாவடி – திருவான்மியூர், தீவுத்திடல் – மீஞ்சூர், தண்டையார்பேட்டை – எம்ஜிஆர் கோயம்பேடு (CMBT), எண்ணூர் – திருவான்மியூர், தண்டையார்பேட்டை - விவேகானந்தர் இல்லம், தண்டையார்பேட்டை - கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் (KCBT), எண்ணூர் - எழும்பூர் வடக்கு ரயில் நிலையம், தீவுத்திடல் – மணலி, தீவுத்திடல் – மணலி, தண்டையார்பேட்டை – செங்குன்றம் ஆகிய 12 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
மாநகர் பேருந்துகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணமே, புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளிலும் வசூலிக்கப்படும். ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் சலுகை கட்டண பயண அட்டைகளையும் இந்த தாழ்தள மின்சாரப் பேருந்துகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக (Phase-2) 1337.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மொத்தம் 750 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்காக இரண்டு நிறுவனங்களுடன் M/s. OHM Global Mobility Private Limited (380 AC & 120 Non-AC) & M/s. Traveltime Mobility India Private Limited (170 AC & 80 Non-AC) மொத்த விலை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
இந்த 750 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கலைஞர் கருணாநிதி நகர், பெரம்பூர், மத்தியபணிமனை-II, ஆலந்தூர், ஆவடி, ஐயப்பன்தாங்கல், பாடியநல்லூர் ஆகிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.
மேற்கண்ட பணிமனைகளில் இருந்து தற்சமயம் இயக்கப்பட்டு வரும் டீசல் பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதற்காக தையூர், தரமணி, வரதராஜபுரம், ஆட்டந்தாங்கல், திருவள்ளூர், மாமண்டூர் ஆகிய 6 இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானம் செய்வதற்காகவும், 7 மின்சாரப் பேருந்து பணிமனைகளை மின்னேற்ற வசதிகள் செய்து மின்சார பணிமனைகளாக மேம்படுத்துவதற்காகவும் ரூபாய் 289.00 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (2.3.2026) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.






