முரசொலி தலையங்கம்

"தியாகத்தின் அடையாளமாய்... கொள்கையில் இமயமாய்..." விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு! - முரசொலி!

தியாகத்தின் அடையாளமாய் - கொள்கையில் இமயமாய் - வாழ்வின் தனிச்சிறப்பாய் - பொதுவாழ்வுக்கு இலக்கணமாய் வாழ்ந்த தோழர் நல்லகண்ணு அவர்கள் 101 ஆவது வயதில் நம்மிடம் இருந்து விடைபெற்றுள்ளார்.

"தியாகத்தின் அடையாளமாய்... கொள்கையில் இமயமாய்..." விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு! - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

முரசொலி தலையங்கம்

27.02.2026

நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்!

தியாகத்தின் அடையாளமாய் - கொள்கையில் இமயமாய் - வாழ்வின் தனிச்சிறப்பாய் - பொதுவாழ்வுக்கு இலக்கணமாய் வாழ்ந்த தோழர் நல்லகண்ணு அவர்கள் 101 ஆவது வயதில் நம்மிடம் இருந்து விடைபெற்றுள்ளார்.

அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 'தகைசால் தமிழர் விருது' வழங்கிச் சிறப்பித்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 101 வயதைத் தாண்டி பெருந்தகை சால் தமிழராக விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு.

தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தை இப்படிச் சொல்கிறார் நல்லகண்ணு.

" ‘பாட்டி! உங்களுக்கு எவ்வளவு வயல் இருக்கு?' என்று மூதாட்டி ஒருவரிடம் கேட்டேன். 'வயிறுதான் இருக்கு பேராண்டி' என்று பதில் சொன்னார். வறட்சியும் வறுமையும் கலந்த இந்த வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை என் கையில் கொண்டுவந்து திணித்தது.”

12 வயதில் இருந்து போராட்டக்காரனாக உருவானவர் தோழர் நல்லகண்ணு. 15 வயதில் பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார். 18 வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். 101 வயது வரை பொதுவுடமைக் கொள்கைக்காகவே பொது உரிமையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்துள்ளார் தோழர்.

இந்தியாவின் ஆட்சியைக் கவிழ்த்து கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை நிறுவ முயற்சிப்பதாக 1948 காலக்கட்டத்தில் பல்வேறு ஊர்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். பலரும் தலைமறைவு ஆனார்கள். கைது செய்யப்பட்ட தோழர்களில் ஒருவர் நல்லகண்ணு.

"தியாகத்தின் அடையாளமாய்... கொள்கையில் இமயமாய்..." விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு! - முரசொலி!

இரண்டு ஆண்டு காலம் தலைமறைவில் இருந்த தோழர் நல்லகண்ணு 1949 டிசம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார். எந்தப் பண்ணையார்களை எதிர்த்து நீதி கேட்டாரோ அந்தப் பண்ணையார்கள் முன்பாகவே அடித்து சித்திரவதை செய்யப்பட்டார். கையும் காலும் கட்டப்பட்டு முச்சந்தியில் போட்டு அடித்தார்கள். அவரது மீசையை சிகரெட் நெருப்பால் சுட்டார்கள். மலை உச்சிக்கு தூக்கிச் சென்று, 'இதில் இருந்துதான் பலரையும் தூக்கிப் போட்டேன், இப்போது உன்னையும் போடப் போகிறேன்' என்றார் போலீஸ்காரர். அப்போதும் வாயைத் திறக்காமல் நெஞ்சுரத்தோடு இருந்தவர்தான் நல்லகண்ணு.

"ஆயுள் தண்டனையும் அதன்மேல் தண்டனையும் பேய்ச்சட்டம் அளித்திட பெரும்பங்கு எங்களுக்கு

ஆண்டு பலவாக அடக்கியே போட்டாலும்

மாட்டிச் சிறைக்குள்ளே மக்கிப் போட்டாலும்

மக்கள் சக்தியின் மேல் மாறாத நம்பிக்கை

எந்நாளும் கொண்டுள்ளோம் எதற்கும் அஞ்சவில்லை”- என்று எழுதியது மட்டுமல்ல;

எந்நாளும் அஞ்சாமல் வாழ்ந்து வருபவர் அய்யா அவர்கள்.

ஏழு ஆண்டுகள் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகும், முன்னிலும் உரம் பெற்று உழைத்தார். சுதந்திர இந்தியாவில் பொதுவுடமைத் தத்துவம் தமிழ்நாட்டில் வளர உழைத்ததில் தோழர் நல்லகண்ணுவின் பங்கு பெரும்பங்கு ஆகும்.

பொதுவுடமை - சமூகநீதி - சாதி ஒழிப்பு - மதவாத எதிர்ப்பு - தேசிய இனப்பிரச்சினை - தமிழுக்குச் சிறப்பு - தமிழின மேம்பாடு - ஆகிய

அனைத்துக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுத்து உழைத்தவர் தோழர் நல்லகண்ணு.

"அய்யா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதுதான் நமக்குப் பெருமை” என்று முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். "வயதால் எனக்குத் தம்பி - அனுபவத்தால் எனக்கு அண்ணன்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். 'என்னை விட வயதால் இளையவர், அனுபவத்தாலும் தியாகத்தாலும் நம்மையெல்லாம் விட மூத்தவர்' என்றார் தலைவர் கலைஞர்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் விபத்தில் ஒரு கண் பழுது பட்டது. அதைக் குறிப்பிட்ட தலைவர் அவர்கள் – ‘எனக்கு ஒரு கண் தான் முகத்தில் இருக்கிறது. இன்னொன்று அகத்திலே இருக்கிறது. அது நல்லக் கண்' என்று குறிப்பிட்டார்கள். அந்தளவுக்கு மதிப்புமிகு தலைவராகப் போற்றப்பட்டார்.

"தியாகத்தின் அடையாளமாய்... கொள்கையில் இமயமாய்..." விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு! - முரசொலி!

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருதை வழங்கினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அண்ணல் அம்பேத்கர் விருதைத் தரும் போது, தமிழ்நாடு அரசால் ஒரு லட்சம் ரூபாய் அய்யாவுக்கு வழங்கப்பட்டது. அதில் ரூ.ஐம்பதாயிரத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் – ரூ.ஐம்பது ஆயிரத்தை விவசாய சங்கத்துக்கும் கொடுத்தவர் நல்லகண்ணு அவர்கள். இன்றைய முதலமைச்சர் அவர்கள் தகை சால் தமிழர் விருது வழங்கிய போது அரசின் சார்பில் ரூ.பத்து லட்சம் தரப்பட்டது.

அதில் 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து பத்து லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாகத் திருப்பி அளித்தார் நல்லகண்ணு. 80 ஆவது பிறந்த நாளின் போது ஒரு கோடி ரூபாயைத் திரட்டித் தந்தனர் அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் அவர்களும் பொருளாளர் எம்.எஸ். தாவீத் அவர்களும். அந்த ஒரு கோடி ரூபாயையும் மேடையிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கே கொடுத்தவர்தான் அய்யா நல்லகண்ணு அவர்கள்.

இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் சாய்நாத், தோழர்

நல்லகண்ணுவிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கேள்வியைக் கேட்டார். "உங்கள் வாழ்க்கையில் சோர்வே ஏற்படவில்லையா?” என்று!

”நாங்கள் எச்சரிக்கைகள், மிரட்டல்கள் தாண்டி எழுந்து நின்றோம். அதனால்தான் நாங்கள் இன்றும் இங்கிருக்கிறோம்” என்றார் நல்லகண்ணு.

”வெற்றி என்பது ஓர் இயக்கத்துக்கு, இலட்சியத்துக்கு, கட்சிக்கு இறுதி நிகழ்ச்சியல்ல. முந்திய தலைமுறை விட்ட இடத்திலிருந்து புதிய தலைமுறை தொடர்ந்து இயங்க வேண்டும்” என்றார் நல்லகண்ணு. அவரது செம்மாந்த உடல் வைக்கப்பட்ட பாலன் இல்லத்துக்கு மூத்த தலைமுறை முதல் இளைஞர்கள் வரை மட்டுமல்ல; சிறுவர் சிறுமியரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நல்ல விதைகளையே விதைத்துச் சென்றுள்ளார் தோழர்.

‘எனது வாழ்க்கைதான் நான் விடுக்கும் செய்தி' என்று சொன்னார் அண்ணல் காந்தி. அப்படிச் சொல்ல முழுத் தகுதி படைத்தவராகவும் வாழ்ந்து மறைந்துள்ள தோழர் நல்லகண்ணுக்கு செவ்வணக்கம்.

banner

Related Stories

Related Stories