முரசொலி தலையங்கம்

ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?

ஆதிதிராவிடர் என்ற சொல்லை சத்தமே இல்லாமல் நீக்கி இருக்கிறது விஜய் அரசு. இதே செயல் தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால் நாடே ரணகளம் ஆகி இருக்கும்.

ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (15-07-2026)

ஆதிதிராவிடர் சொல் -விவாதம் தேவை!

ஆதிதிராவிடர் என்ற சொல்லை சத்தமே இல்லாமல் நீக்கி இருக்கிறது விஜய் அரசு. இதே செயல் தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால் நாடே ரணகளம் ஆகி இருக்கும். விஜய் ஆட்சியில் விஜய்யைப் போலவே நிரந்தர மவுன விரதம் இருக்கிறார்கள் அவரது கூட்டணியினர்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் அமைச்சர்கள் ஆனது சாதனை அல்லவா? என்று தனது தோளில் தானே தட்டிக் கொள்கிறார் முதலமைச்சர் விஜய். இந்த எட்டுப் பேரும் பட்டியலின சமுதாயத்துக்காக என்னசெய்திருக்கிறார்கள்? என்பதையும் அவர் சேர்த்துச் சொல்லி இருக்க வேண்டும்.

60 நாட்களுக்குள் 8 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதையும் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமா?

காலம் காலமாக இருந்த ‘ஆதிதிராவிடர்' அடையாளச் சொல்லை திட்டமிட்டு நீக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஆய்வாளர் கௌதம சன்னா போன்றவர்கள் மட்டுமே இதற்கான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.

அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு அவர்கள் அமைச்சராக இருக்கும் போது இது நடந்துள்ளது. இதனை அவர் நியாயப்படுத்திப் பேசியும் இருக்கிறார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை என்ற அமைச்சகத்தின் பெயர்சமூகநீதித்துறை என மாற்றப்பட்டு இருக்கிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை என்பதன் நோக்கம் வேறு. அதனை சமூக நீதி என்ற சொல்லுக்குள் மட்டும் அடக்கி விடமுடியாது. சமூக நீதித் துறை என்று சொல்லிவிட்டால் அதனுள் பிற்படுத்தப்பட்டோர் வருவார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருவார்கள். இதை எல்லாம் விட்டு விட்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு மட்டும் சமூகநீதித் துறை என்று பெயர் சூட்டி ஆதி திராவிடர் சொல்லை நீக்க வேண்டிய அவசியம் என்ன?

1922 மார்ச் 28 அன்று ஆதி திராவிடர் என்ற பெயர் மாற்றத்துக்கான உத்தரவு நீதிக்கட்சி ஆட்சியால் பிறப்பிக்கப்பட்டது. அதுவரை தொழிலாளர் நலத்துறைக்குள் தான் ஆதிதிராவிடர் நலனும் அடங்கி இருந்தது. நீதிக்கட்சி ஆட்சியில்தான் தொழிலாளர் நலத்துறையில் இருந்து இது பிரிக்கப்பட்டது.

1969 ஆம் ஆண்டு முதல்முதலில் முதல்வர் ஆன கலைஞர் அவர்கள் தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையையும் தனித்துறையாக உருவாக்கினார்கள். பிற்படுத்தப் பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார்கள். அந்தப் பரிந்துரைப்படி இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர். இந்த வரலாறு ஏதும் தெரியாமல், அல்லது இந்த வரலாற்றை மறைக்கும் வகையில், திரிக்கும் வகையில் ஆதிதிராவிடர் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.

‘“1922 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்த நீதிக் கட்சி ஆட்சியின்போது ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றைய தலைவர்களாயிருந்த பெருந்தலைவர் எம்.சி.ராஜா, மாவீரன் இரட்டைமலை சீனி வாசன்ஆகியோர் போராடிப் பெற்ற 'சாதி கடந்த அடையாளம்' அது. அதற்குமுன் ஆதி திராவிடர் என்ற பெயரில் எந்தவொரு சாதியும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தம்மை அமைப்பாகத் திரட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளனர். அவ்வாறு உருவான அமைப்புகளில் புராண அடையாளமோ, மத அடையாளமோ அற்ற ஒரு 'சமயச் சார்பற்ற' (secular ) வகையின மாக முன்வைக்கப்பட்டது ஆதி திராவிடர் என்பதே ஆகும். அதை முன்வைத்த தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியும், தொலைநோக்குப் பார்வையும் போற்றுதலுக்குரியவை. அது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களுக்குமான முன்னுதாரணம் ஆகும்.

ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?

ஆதி திராவிடர் என்ற சாதி கடந்த சமயச் சார்பற்ற அடையாளத்தை கொச்சையாகப் புரிந்து கொள்பவர்கள்தாம் அதை மாற்ற வேண்டும் எனக்கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருப்பதுவேதனை அளிக்கிறது”என்று ரவிக்குமார் எம்.பி. எழுதி இருக்கிறார்.

திராவிடம் என்பது மொழிக் குடும்பத்துச் சொல்லாக மட்டுமே இருந்துவந்த நிலையில் அதனை அரசியல் சொல்லாக சமூகப் பயன்பாட்டுச் சொல்லாக மாற்றியது தலித் இயக்கங்களே!

இந்தக் கருத்தாக்கத்தின் முதற்கட்ட மூன்று தத்துவாசிரியர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் பண்டிதர் அயோத்தி தாசர் (1845-1914), இரட்டமலை சீனிவாசன் (1859-1945), எம்.சி.இராஜா (1883-1947) ஆகிய மூவரையும் சொல்லலாம்.

1892 இல் உருவான ஆதிதிராவிட ஜனசபை என்ற அமைப்பு உருவானது. இதே காலக்கட்டத்தில் ஜான்ரத்தினம் முயற்சியால் ‘திராவிடர் கழகம்' என்ற அமைப்பும் உருவானது. 1916 இல் உருவான ஆதிதிராவிட மகாஜனசபை, 1928 இல் உருவான அகில இந்திய ஆதிதிராவிட மகாஜனசபை ஆகிய மூன்றும் மிக முக்கியமான அமைப்புகள்.

மிண்டோ மார்லி சீர்திருத்தக் குழுவுக்கு கொடுத்த வகுப்புரிமை விண்ணப்பத்தில் சாதி இந்துக்கள் என்பதை ஒரு பிரிவாகவும் சாதியற்ற திராவிடர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதை மற்றொரு பிரிவாகவும் பகுத்துக் காட்டினார் அயோத்திதாசர். (1909)

பார்ப்பனரல்லாதார் அரசியல் வெகுவாகப் பேசப்படத் தொடங்கிய பிறகு ஆதிதிராவிடர் என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தார் எம்.சி.இராஜா. “தமிழ் மாவட்டங்களில் ஆதிதிராவிடர் என்றும் தெலுங்கு மாவட்டங்களில் ஆதி ஆந்திரர் என்றும் இனிமேல் அழைக்க வேண்டும்”என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் எம்.சி.இராஜா (1922) நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் ஆதி திராவிடர் என்று அழைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1890களின் இறுதியில் 1990 ஆண்டுகளில் தொடக்கத்திலேயே 'திராவிடன்'என்பது அரசியல் சொல்லாக, சமூகச் சொல்லாக, இனச் சொல்லாக அரசியல், பண்பாட்டுத் தளத்தில் விதைக்கப்பட்டு விட்டது. அந்தச் சொல்தான் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் என்ற சொல்லை நீக்கியதை ஆதரித்தும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். எனவே இதில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நீண்டவிவாதம் நடத்தியே முடிவெடுக்க வேண்டும். அரசு அவசரப்படக்கூடாது.

banner

Related Stories

Related Stories