தமிழ்நாடு

த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!

தமிழகத்தில் எங்கும் லாக்கப் படுகொலைகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை 9 அன்று தென்தாமரைக் குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஜூலை 13 அன்று காலை சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் பல லாக்கப் படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் மூன்று காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டுமே போதுமான தீர்வாகாது. இனி தமிழகத்தில் எங்கும் லாக்கப் படுகொலைகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது. சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஒருவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மாற்றம் என்று கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதன் மூலம் எந்தவிதமான மாற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனவே, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories