
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உன்னதமான நிலைக்கு தமிழ்நாட்டை எப்படி உயர்த்திக் காட்டி இருக்கிறார் என்பதை தமிழ்நாடு அரசு மாநிலத் திட்டக் குழுவின் பொருளாதார ஆய்வறிக்கை எடுத்துக் காட்டி இருக்கிறது. மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், இந்த ஆய்வறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு பெருமிதம் கொள்ளும் வகையில் எப்படி எல்லாம் வளர்ந்துள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை கம்பீரமாகச் சொல்கிறது.
உலகப் பொருளாதாரம். இந்தியப் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையுடன் இருக்கும் போது, தமிழ்நாட்டுப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கியதாக எப்போதும் இருக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் இந்த அறிக்கை எடுத்துச் சொல்கிறது.
பன்முக பொருளாதார அடித்தளம், வலுவான உள்கட்டமைப்பு, வளர்ச்சிக்கு வித்திடும் கொள்கைகள், சமூக நலத் திட்டங்கள், நிலைத்த வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள், மின்சார வசதிகள், விரிவான சாலைகள், துறைமுக இணைப்புகள், தொழில் வழித்தடங்கள், எழுத்தறிவு, தொழில் கல்வி, திறன்மேம்பாடு, பரவலான வளர்ச்சி ஆகியவை தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டதாக இந்த அறிக்கை அளவிடுகிறது.
இந்திய நிலப்பரப்பில் 4 விழுக்காடு தமிழ்நாடு. இந்திய மக்கள் தொகையில் 6 விழுக்காட்டு மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமிழ்நாடு 9.4 விழுக்காடு பங்களிப்பைச் செலுத்துகிறது. இதுதான் தமிழ்நாட்டின் மாபெரும் சாதனையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த ஆண்டு மட்டும் 31.19 லட்சம் கோடியை எட்டி விட்டது. இது 16 விழுக்காடு வளர்ச்சி வீதம் ஆகும். பெரிய மாநிலங்களில் இதுதான் அதிகமான அளவும் ஆகும்.
இந்திய உற்பத்தித் தொழில் துறையானது 4.5 விழுக்காடாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு 14.75 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. அதாவது இந்திய விழுக்காட்டை விட நான்கு மடங்கு தமிழ்நாடு அதிகம். இதன் மூலமாக வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கிறது. சேவைத் துறையானது 11.3 விழுக்காடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது. இந்தியத் தொழில் பணியாளர்களில் 15 விழுக்காடு மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். வேலைவாய்ப்பு உருவாக்கம்அதிகம் ஆகி உள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் இந்திய முதன்மை மாநிலங்களில் ஒன்றாகதமிழ்நாடு இருக்கிறது. 2,169 மில்லியன் அமெரிக்க டாலராக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அந்நிய நேரடி முதலீட்டு வரவு, இப்போது 3,681 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து உயரவே செய்யும்.
ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மின்னணு சாதனங்கள், துணிகள், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. பொறியியல் இயந்திர ஏற்றுமதியில் இரண்டாமிடம் வகிக்கிறது. ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. வணிகப் பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு ஆகி இருக்கிறது.
வேளாண் பொருட்கள், உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகம் ஆகி இருக்கிறது. பாசனப் பரப்பும் அதிகம் ஆகி இருக்கிறது. கேழ்வரகு, கரும்பு விளைச்சலில் முதலிடத்தையும் எண்ணெய் வித்துகளில் இரண்டாம் இடத்தையும், நிலக்கடலை விளைச்சலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் அதிகக் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகள், உயர் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் சேர்க்கையில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு. உயர் கல்விச் சேர்க்கையில் தேசிய விழுக்காடு 28.4 இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு 47 விழுக்காட்டுடன் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையானது 47.3 விழுக்காடு ஆகிவிட்டது. இந்திய விழுக்காடு 28.5 தான்.
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியானது இந்திய விழுக்காட்டை விட தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இந்தியத் தனிநபர் வருமானம் 2.05 வட்சம் ரூபாய் ஆகும். தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3.62 லட்சம் ரூபாய் ஆகும். சில்லறை பணவீக்கம் ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. 5.4 விழுக்காடாக இருந்த பணவீக்கம், 2.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. உணவுப் பொருள் உற்பத்தி அதிகம் ஆனதும், பல்வேறு சமூக நலத் திட்டங்களும் தான் பணவீக்கம் குறைய முக்கியக் காரணங்கள் ஆகும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது சமூக நலக் கொள்கைகளில் பின் வாங்காமல், பொருளாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தியதால் எட்டப்பட்டது என்பதை இந்த ஆய்வறிக்கை ஒவ்வொரு வரியிலும் உறுதி செய்கிறது. ஏராளமான சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவினங்கள் அதிகமாகி வருகின்றன. மகளிர் மேம்பாடு மிக மிக அதிகமாகி உள்ளது. இந்த சமூக நலத் திட்டங்களை, சமூக உரிமைகளாக திராவிட மாடல் அரசு கருதுகிறது.
2030 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அந்த இலக்கை நோக்கிய பயணம், மிகச் சரியாகப் போய்க் கொண்டு இருப்பதை உறுதி செய்கிறது மாநிலத் திட்டக் குழுவின் பொருளாதார ஆய்வறிக்கை.
தலைசிறந்த தமிழ்நாடாக, மிகச் சிறந்த தமிழ்நாடாக, உன்னதமான தமிழ்நாடாக, உயர்வான தமிழ்நாடாக, இந்தியாவின் முதன்மைத் தமிழ்நாடாக, உலகம் திரும்பிப் பார்க்கும் தமிழ்நாடாக உயர்த்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை உறுதி செய்கிறது இந்த அறிக்கை.






