
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சராக இருந்தவர்தான் தற்போதைய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. தவெக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி அமைச்சராகவும் பொறுப்பேற்று தன்னுடைய ‘அசாத்திய திறமையை’ ரீல்ஸ் மோகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் காண்பித்துள்ளார்.
ஆட்சி அமைத்த முதல் 10 நாட்கள் அமைச்சர்கள் முதற்கொண்டு தவெக-வின் அடிமட்டம் வரை அனைவருமே அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் வரை ஆய்வு மேற்கொண்டு ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியது கடும் எதிர்ப்பை சம்பாதித்ததையும், தற்போதுவரை அது தொடர்ந்து வருவதையும் யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா ஏற்கனவே ரீல்ஸ்-க்காக புகழ் பெற்றவர் தான் என்றாலும் அவருடைய தற்போதைய செயல் அனைவரையும் மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ-வாக வெற்றிப்பெற்ற அன்றே ஊடகங்களுக்கு இந்தியில் பேட்டியளித்து அதிர்ச்சி கொடுத்தவர்தான் அமைச்சர் கீர்த்தனா. தொழிற்துறை சம்பந்தமாக தவறான தகவல்களை வெளியிட்டதுடன் அதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்காமல் அதிகார தோரணையில் மிரட்டும் தொனியில் பதிலளித்தார். மேலும் முதலீடு குறித்த கேள்விக்கு “அந்த ஒரு ரீல்ஸே போதுமே” அவர் அளித்த பதில்தான் இன்னும் அருமையாக இருந்தது.
அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசு மேள்நிலைப்பள்ளியில் தனது ரீல்ஸ் டீமுடன் ஆய்வுக்கு சென்று ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து ‘ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு’ ஏற்றவாறு ஒரு மாணவியை அழைத்து கேள்வி எழுப்புகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் ரீல்ஸாக எடுக்கப்பட்டு அதனை வெளியிடுகிறார்கள்.
அதில் நடப்பது என்னவென்றால், ஒரு மாணவியை அமைச்சர் அழைத்து ஆங்கில வார்த்தைக்கு பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். இதனை அவர் எதிர்பாக்கவில்லை போல. சரி என்று சொன்ன அவர், மீண்டும் இன்னொரு கேள்வி எழுப்புகிறார் பதில் வராமல் அமைதி நிலவுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு “பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியரை பார்க்கிறார்.
அடுத்ததாக் முதல் வரிசை மாணவியிடம் கேள்வி எழுப்புகிறார். குழந்தை தயங்கி நிற்கிறது. அக்குழந்தையிடம் “வாட் இஸ் யுவர் பாதர்” என்று கேட்கிறார். உடனே கீர்த்தனா “பார்த்தீங்களா? ஸ்போக்கன் இங்கிலீஸ் தெரியல” என்கிறார்.
சுதாரித்துக் கொண்ட ஆசிரியர் அக்குழந்தையிடம் பயப்படாதே தைரியமா பேசு எனக் கூறிவிட்டு “வாட் இஸ் யுவர் பாதர் புரொபெஷன்” என்று கேட்டவுடன் தயங்காமல் அக்குழந்தை பதிலளிக்கிறது. உடனே தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே “இதெல்லாம் சரிங்க இதே பின் வரிசையில் கேட்டிருந்தால் ஒருவருக்கு பதில் தெரிந்திருக்காது” என்று ஆசிரியர்களுக்கு வகுப்பெடுக்கிறார் அதிமேதாவி அமைச்சர் கீர்த்தனா.

குழந்தைகளை ரீல்ஸ் எடுத்துள்ளோமே என்ற கூச்சம் கொஞ்சம் கூட இல்லாமல், குழந்தைகளின் முகத்தைக் கூட மறைக்காமல் அப்படியே அதனை பெருமையாக தனது சமூக வலைதளப்பக்கத்தில், அரசுப்பள்ளியில் ஆய்வு செய்தோம் என பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததன் மூலம் அக்குழந்தைகளின் கண்ணியத்தை பொதுவெளியில் சீர்குலைத்துள்ளார். இது அக்குழந்தைகளின் பெற்றோரையும் சங்கடப்பட வைத்திருக்கும். ஆனால் இதெல்லாம் அமைச்சர் கீர்த்தனாவுக்கு பிரச்சினையில்லை. தன்னுடைய பிரபலம் தான் முக்கியம்.
இதே அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தனியார் பள்ளிகளின் தரத்தை பொதுவெளியில் பேசுவாரா? செய்யமாட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்” என கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை அமைச்சர் அமெரிக்கா சென்று விட்டார் என நினைத்து இந்த ஆய்வை மேற்கொண்டாரா? அல்லது என்ன நமது ரீல்ஸ் எதுவுமே வரவில்லையே நாம் ட்ரெண்ட் அவுட் ஆகிவிட்டோமா என பயந்து இந்த சர்ச்சையை திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.






