
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.2.2026) சென்னையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் இரண்டு நாட்கள் (17.02.2026 மற்றும் 18.02.2026) நடைபெறும் “தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0” மாநாட்டினை தொடங்கி வைத்தார்.

=> தமிழ்நாடு கடலோர வளங்களை நிலைநிறுத்தத்தக்க வகையில் பயன்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) எனும் திட்டம் :
இந்த மாநாட்டில், TN-SHORE (Tamil Nadu Sustainably Harnessing Ocean Resources and Blue Economy) எனப்படுகின்ற தமிழ்நாடு கடலோர வளங்களை நிலைநிறுத்தத்தக்க வகையில் பயன்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரம் எனும் திட்டத்தினை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, அத்திட்டத்தின் கீழ், 34 அலைதாத்திப் பாதுகாப்புக் குழுக்களுக்கான சுழற்சி நிதி மற்றும் குறுங் கடன்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த 1.70 கோடி ரூபாயிலிருந்து கிள்ளை – எம்ஜிஆர் நகர் அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு, கிள்ளை – கலைஞர் நகர் அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு மற்றும் கிள்ளை – சிசில் நகர் அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு ஆகிய மூன்று குழுக்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கினார். இந்நிதி, கடலோர சமூக மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், பொருளாதாரம் வலுவடையவும் உதவிடும்.

=> கடற்பசு பாதுகாப்பு மையம் அமைத்திட அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிதியினை வழங்குதல் :
அதனைத் தொடர்ந்து, தஞ்சை மனோராவில், கடற்பசு பாதுகாப்பு மையம் அமைத்திட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். மேலும், கண்ணபிரான் பாலிமர்ஸ், ஊர் கேப்ஸ் மற்றும் ஈசிகோ பவர் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு சுழல் பொருளாதாரம் மற்றும் பசுமை போக்குவரத்து ஆகிய சூழலுக்குகந்த தொழில் முனைவுகளை மேம்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிதியினை வழங்கினார்.

=> சுழற்சிப் பொருளாதார மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் :
தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சென்னையில் சுழற்சிப் பொருளாதார மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை-இந்தியத் தொழில்நுட்பக் கழகம், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் ஆகியவற்றிக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டின் முதல் நாளான இன்று, காலநிலை நடவடிக்கையில் தமிழ்நாட்டின் பயணம், துணை தேசிய அளவில் காலநிலை நடவடிக்கைகள், இயற்கை எனும் உட்கட்மைப்பு ஆகிய தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன.
அதுமட்டுமல்லாது, சென்னை நகரத்திற்கான நிகழ் நேர சுற்றுப்புற ஒலி அளவீடு மற்றும் ஒலி வரைபடமாக்கல், தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்திற்கான வலைதளம், தமிழ்நாடு கடலோர வளங்களை நிலைநிறுத்தத்தக்க வகையில் பயன்படுத்துதல் மற்றும் நீலப்பொருளாதாரம் (TN-SHORE) திட்ட கண்காணிப்பு வலைதளம், சென்னை படுகைக்கான காலநிலையால் தூண்டப்பட்ட நீர் அபாய மதிப்பீடு மற்றும் நீர் சமநிலை எனும் அறிக்கை, செயற்கை பவழப் பாறைகளால் முன்னெடுக்கப்படும் வான் தீவு மீட்டுருவாக்கத்தின் சமூக, சூழலியல் மற்றும் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கை மற்றும் தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் புல்வெளிகளை மையமாகக் கொண்டு சிதைவுற்ற கடலோர ஈரநிலங்களை மீட்டெடுத்தல் ஆகிய அறிக்கைகளும், காலநிலை மீள்திறன்மிகு கிராமத்திற்கான கட்டுப்பாட்டகம் (dashboard) ஆகியவையும் வெளியிடப்பட்டன.






