முரசொலி தலையங்கம்

“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!

ஜெயலலிதா, இறந்து போனார். சசிகலா, சிறைக்குப் போனார். பழனிசாமி, ஊர்ந்து போனார். அ.தி.மு.க. தொண்டர்கள் நொந்து போனார்கள். கட்சி தோற்றுப் போனது. இதுதான் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்.

“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்’, ‘எனக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது’, ‘என் பெயரை அறிவியுங்கள்’ என்று பா.ஜ.க. தலைமைக்குச் சொல்வதற்காக பழனிசாமி தொடங்கிய பயணம், பல்லிளித்துவிட்டது. பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ”எடப்பாடி எதனால் தோற்கிறார்?” என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தீட்டியுள்ள தலையங்கம் பின்வருமாறு :-

‘துரோகிகளால்தான் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்று திருவாய் மலர்ந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதைக் கேட்டு அ.தி.மு.க.வினரே சிரிக்கிறார்கள். துரோகிகளால் அல்ல, ‘தன்னால்’ தோற்றவர் பழனிசாமி என்று அந்தக் கட்சித் தொண்டர்களே அறிவார்கள்.

ஜெயலலிதா, இறந்து போனார். சசிகலா, சிறைக்குப் போனார். பழனிசாமி, ஊர்ந்து போனார். அ.தி.மு.க. தொண்டர்கள் நொந்து போனார்கள். கட்சி தோற்றுப் போனது. இதுதான் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்.

ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி. சசிகலாவுக்கு ஒழுங்காக விசுவாசம் காட்டியவர் என்ற ஒரே காரணத்துக்காக கூவத்தூரில் நியமிக்கப்பட்டவர் பழனிசாமி. சரியாகச் சொன்னால் அவர் ஒரு ‘நியமன’ முதலமைச்சர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல. ஆனால் அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்ததும் தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டார். அப்படித்தான் நடந்தார். தன்னை எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டு நகர்வலம் வரத் தொடங்கினார். சேலம் மாவட்டத்திலேயே அவர் செல்லக் காசு என்பதை சேலம் மாவட்ட அ.தி.மு.க.வினரே ஒப்புக்கொண்டார்கள்.

“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!

1990ஆம் ஆண்டு சேலம் மாவட்டச் செயலாளர் ஆன பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிச்சாமிக்குத் தரப்பட்டது. சில ஆண்டுகளில் அதுவும் பறிக்கப்பட்டது.2003 ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப் பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது. 2008 இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது. இதெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நன்கு தெரியும்.

ஏதோ ஒன்று, தன்னை ஏதோ ஒன்றாக நினைத்துக் கொண்டது என்பார்களே! அப்படி நினைத்துக் கொண்ட பொழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல்தான் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகும்.

‘நியமன’ டம்மியை ‘மம்மி’யாக ஏற்க மாட்டோம் என்று பெரும்பாலான அ.தி.மு.க. வாக்காளர்களே, பழனிசாமிக்கு கடந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. அதுதான் உண்மை. அந்த வாக்கு விழுக்காடு, நடைபெற இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இன்று பாதியாகிவிடும் என்பதே முழு உண்மை. தன் கைவசம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியை பழனிசாமி இழந்து உட்காரப் போகிறார் என்பதே உண்மை.

இது தெரிந்துதான், தன்னைத் தானே தலைவராகக் காட்டிக் கொள்ள பச்சை பஸ் எடுத்துக் கிளம்பினார். பசப்பு வார்த்தைகளைப் பேசினார். அழைத்துவந்த அ.தி.மு.க.வினரே, பழனிசாமி பேச்சை பத்து நிமிடம் நின்று கேட்கவில்லை. பஸ்ஸை சுற்றி போஸ் கொடுத்துவிட்டு, தாங்கள் வந்த பஸ்ஸை நோக்கிப் புறப்படத் தொடங்கி விட்டார்கள்.

“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!

‘நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்’, ‘எனக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது’, ‘என் பெயரை அறிவியுங்கள்’ என்று பா.ஜ.க. தலைமைக்குச் சொல்வதற்காக பழனிசாமி தொடங்கிய பயணம், பல்லிளித்துவிட்டது. பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

இந்தப் பயணத்தின் மூலமாகத் தெரியவந்தது, மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க. தொண்டர்கள் செல்வாக்கும் அவருக்கு இல்லை என்பதுதான். அ.தி.மு.க. கொடியை வைத்துக் கொண்டே, அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்றவர்தான் பழனிசாமி. தென்சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அவருக்கு டெபாசிட் போய்விட்டது. 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு பழனிசாமியின் கட்சி போனது. கன்னியாகுமரி தொகுதியில் நான்காவது இடம் போனது பழனிசாமியின் கட்சி. இதெல்லாம் எதைக் காட்டுகிறது? பழனிசாமி தலைமை நிராகரிக்கப்பட்டது என்பது தான்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகளைக் கவனியுங்கள். கன்னியாகுமரி (4.02 விழுக்காடு), திருநெல்வேலி (8.39 விழுக்காடு), ராமநாதபுரம் (8.99 விழுக்காடு), மத்திய சென்னை (9.80 விழுக்காடு) என 4 தொகுதிகளில் ஒற்றை இலக்கமாக வாக்கு வங்கி சுருங்கியது. 9 தொகுதிகளில் 14 விழுக்காட்டுக்கு கீழே வாக்குகளை வாங்கி உள்ளது. இதைவிட மோசமாகத் தான் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலும் பழனிசாமியின் கட்சிக்கு கிடைக்கப் போகிறது. மக்களவைத் தேர்தல் வாக்கு விவரங்களின்படி 8 சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது.

“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!

அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி என்று அனைத்தும் இன்று போட்டுக் கொண்டிருக்கும் கணக்குகள் ஜெயலலிதா காலத்துக் கணக்குகள் ஆகும். பழனிசாமி, ஜெயலலிதா அல்ல என்பது 2019 முதல் வாங்கிய வாக்கு விழுக்காடுகளை வைத்துப் பாருங்கள். ‘அ.தி.மு.க.வுக்கு 28 விழுக்காடு, 30 விழுக்காடு இருக்கிறது’ என்று சில அரைகுறைகள் ஊடகங்களில் உட்கார்ந்து பேசி தன்னை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல, ‘பத்து தோல்வி’ பழனிசாமியையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை 234 சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பார்த்தால் 222 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இப்படி அ.தி.மு.க.வின் வாக்குகளை மொத்தமாகச் சரித்தார் பழனிசாமி. இதெல்லாம் எதைக் காட்டுகிறது? பழனிசாமி தலைமை நிராகரிக்கப்பட்டது என்பது தான்.

2019 – நாடாளுமன்றத் தேர்தல், 2019 – சட்டமன்ற இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 – ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 – நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 – ஈரோடு இடைத்தேர்தல், 2024 – நாடாளுமன்றத் தேர்தல், 2024 – விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் இடைத் தேர்தல் – ஆகிய அனைத்துத் தேர்தல்களிலும் தோற்றவர்தான் பழனிசாமி. அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே தோற்றார். இவை அனைத்தும் எதைக் காட்டுகிறது. பழனிசாமியை ஒரு மனிதராகவே மதிக்கவில்லை என்பதுதானே?

பழனிசாமி தனது தகுதி இன்மையால் தோற்கிறார். அதனை அவர் முதலில் உணர வேண்டும். அதன் பிறகு உளறலாம்.

banner

Related Stories

Related Stories