முரசொலி தலையங்கம் (25-04-2025)
வாஜ்பாய் காலமும் - மோடி காலமும் - 2
பிரதமர் வாஜ்பாய்க்கு தினந்தோறும் கடிதம் எழுதி போயஸ் கார்டனைபோஸ்ட் கார்டனாக மாற்றிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா!
இவை எதுவும் மாநில நன்மைகளுக்கானவை அல்ல. ஊழல் குற்றச்சாட்டுஅடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஹரிபாஸ்கர் ஐ.ஏ.எஸ்.க்கு மீண்டும் பதவி தர வேண்டும், சி.ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸின் தற்காலிக வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், நெய்வேலி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் பூபதி வருமான வரித்துறையில் தாக்கல் செய்த கோரிக்கையை ஏற்க வேண்டும், மச்சேந்திரநாதனுக்கு துறைமுகத் துறையில் கேட்கும் இடத்தை தர வேண்டும் - இப்- படி தினந்தோறும் பரிந்துரைக் கடிதங்களை அனுப்பி வந்தார். இவை நடக்கவில்லை என்றதும், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்தார்.( 27.6.1998)
மத்திய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரது மாறுதல் தொடர்பாக பிரதமர் வாஜ்பாயைக் கண்டித்து ஜெயலலிதா அறிக்கை விட்டார். ஜெயலலிதாவை சமாதானப்படுத்த பா.ஜ.க. தலைமை ஒவ்வொருவராக அனுப்பி வைப்பார்களே தவிர, அவர் சொல்வதைக் கேட்பது இல்லை. இது ஜெயலலிதாவை கோபப்படுத்திக் கொண்டே இருந்தது.
தி.மு.க. ஆட்சியை பா.ஜ.க. அரசு கலைத்திருந்தால், ஜெயலலிதா இது எதையும் செய்திருக்க மாட்டார். ஆனால் கலைக்க மாட்டோம் என்பதில் அன்றைய தினம் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகிய இருவரும் உறுதியாக இருந்தார்கள். தனது வன்மத்தை வேறு பக்கம் திருப்பினார் ஜெயலலிதா.
பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. கூட்டணிக்குள் இருந்தே திட்டமிட்ட ஜெயலலிதா, அதற்காக வேலைகளைப் பார்க்கும் வேலையை சுப்பிரமணியம் சுவாமியிடம் கொடுத்தார். இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகிய இருவரும் தலைவர் கலைஞரிடம் பேசினார்கள். (1999 மார்ச்) ‘எங்கள் ஆட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டும்' என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். தலைமைச் செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றார் கலைஞர்.
13.4.1999 தி.மு.க. வின் தலைமைச் செயற்குழு கூடியது. "1991-96 வரை தமிழக நலன்களைத் தரைமட்டமாக்கி விட்டுத்தழைத்துச் செழித்துள்ள லஞ்ச லாவண்ய ஊழல் கொள்கைக்கு இனியும் தமிழ்நாட்டில் இடம் தரக்கூடாது என்பதாலும் தமிழ்நாட்டில் நடைபெறும் அப்பழுக்கற்ற கழக ஆட்சிக்கு எப்படியும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் ஒரே ஒரு திட்டம் என்பதாலும் - இவை அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கருதிப்பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டிருக்கிறது. இதர ஆபத்துகளைவிட ஜெயலலிதா ஆபத்தே நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பேராபத்து”என்று அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைப் பார்த்ததும் அமைச்சர்கள் தம்பிதுரை, கடம்பூர் ஜனார்த்தனம் ஆகிய இருவரையும் பதவி விலகச் சொன்னார் ஜெயலலிதா. பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து விலகினார். பா.ஜ.க. ஆட்சிக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து கடிதம் கொடுத்தார் ஜெயலலிதா. “வாஜ்பாய் அரசு தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்” என்று அறிக்கை விட்டார் ஜெயலலிதா.
தனது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை 15.4.1999 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் பிரதமர் வாஜ்பாய். இந்த தீர்மானத்தின் மீது தி.மு.க. சார்பில் மரியாதைக்குரிய முரசொலி மாறன் பேசினார். ‘பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைக்கவில்லையா?' என்று இப்போது கேட்கும் பழனிசாமி இதனை வாசிக்க வேண்டும்.
"தேசிய மற்றும் மாநில நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எங்களது நீண்ட கால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளித்து பாதுகாத்து வருகிறோம். நேற்று வரை நான் கூட இந்த அரசை எதிர்த்து வந்தேன். காவிரிச் சிக்கலைத் தீர்த்த பெருமையைத் தவிர இந்த அரசின் எந்தச் சாதனையையும் நான் பாராட்ட முடியாது. இன்று கூட பல பிரச்சினைகளில் என்னால் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க. தனது புதிய நண்பர்களின் ஆதரவுடன் மேற்கொண்டுள்ள முயற்சி, மாநிலத்தின் நலனுக்கும் தேசத்தின் நலனுக்கும் எதிரானது. எனவே, தற்போதைய அரசு தொடர்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் அடல்ஜியை ஆதரிக்கிறோம். ஒரு போதும் ஊழலின் தாயை நாங்கள் ஆதரிக்க முடியாது” - என்று பேசினார் முரசொலி மாறன் அவர்கள். வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.
பா.ஜ.க. ஆட்சியை ஆதரித்து தி.மு.க. வாக்களித்தது குறித்து விளக்கம் அளித்த தலைவர் கலைஞர், “ஜெயலலிதாவின் ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல. அதற்காக மதவாதம் இனிமையானது என்று பொருளல்ல. பாம்பை விட மோசம் என்றால் பாம்பும் மோசம் தான்” என்று மிகச் சரியாகச் சொன்னார்.
1.5.1999 அன்று கூடிய தி.மு.க. நிர்வாகக் குழுவில், “பாரதிய ஜனதா கட்சி மீது கொள்கை ரீதியான - மாறுபாடான கருத்துகள் இருந்த போதிலும் - ஜெயலலிதாவின் சதித் திட்டத்தால் அவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற நிலையின் காரணமாக இந்த முடிவை எடுக்கிறோம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவானது. அத்வானி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முரசொலி மாறன், ஜஸ்வந்த்சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் இடம் பெற்றார்கள். இப்படி கூட்டணியின் கொள்கையை வடிவமைக்கும் இடத்திலேயே தி.மு.க.வுக்கான இடம் வழங்கப்பட்டது என்பது தான் வரலாறு.
கூட்டணியை அறிவிக்கும் இடத்தில் பழனிசாமியை வாயைத் திறக்கவிடவில்லை அமித்ஷா என்பதுதான் இன்றைய தகராறு.
– தொடரும்