முரசொலி தலையங்கம் (24-04-2025)
வாஜ்பாய் காலமும் - மோடி காலமும் (1)
"பா.ஜ.க.வுடன் 2026 தேர்தலில் மட்டுமல்ல, 2031 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்த நீங்கள், இப்போது உடனடியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது ஏன்?” என்பதுதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்ட கேள்வி ஆகும்.
"நீங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லையா? அப்போது மட்டும் பா.ஜ.க. இவர்களுக்கு நல்ல கட்சியாகத் தெரிந்ததா? இப்போது எங்களை மட்டும் ஏன் பழி சொல்கிறீர்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்” என்று பொறுப்பற்ற வகையில் பதில் அளித்திருக்கிறார் பழனிசாமி.
வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசின் தி.மு.க. அங்கம் வகித்த போதிலும், அக்கட்சியின் ஆட்சியையும் குறைந்த பட்ச செயல்திட்டத்துக்கு கட்டுப்பட வைத்து அதில் இருந்து மீற முடியாமல் கட்டுப்படுத்தியது தலைவர் கலைஞரின் ஆற்றலாகும். ‘கலைஞர் இருக்குமிடத்தில் மதச்சார்பு இருக்காது' என்று முன்னாள் நிதி அமைச்சர் பெரியவர் சி.சுப்பிரமணியம் சொல்லும் அளவுக்கு பா.ஜ.க.வின் கடிவாளத்தை கலைஞர் கையில் வைத்திருந்தார் என்பது வரலாறு.
வாஜ்பாய் காலம் வேறு - மோடி காலம் வேறு என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அன்றைய அரசியல் சூழலை முதலில் உணர வேண்டும்.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் நான்கே நான்கு இடங்கள் தான் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. வென்றது. 1991--96 அராஜக - ஊழலாட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் தண்டனையைத் தந்தார்கள். அவர் மீதும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் மீதும் ஊழல் வழக்குகள் போடச் சொல்லி மக்கள் வலியுறுத்தினார்கள். தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு, இந்த வழக்குகளை விசாரிக்க மூன்று சிறப்பு நீதிமன்றங் களை அமைத்தது. இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்த ஜெயலலிதா, பா.ஜ.க.வின் தயவை நாடினார். அவரோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் வெல்ல பா.ஜ.க.வும் திட்டமிட்- டது. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவானது.
‘நிபந்தனை இல்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளேன்' என்று ஜெயலலிதா சொன்னாலும், தேர்தல் முடிந்ததும் தனது வேலைகளைக் காட்டினார். தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் சூழல் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது. உடனடியாக ஆதரவுக் கடிதம் தர மாட்டேன் என்றார். தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும், என் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சுப்பிரமணியம் சுவாமியை நிதி அமைச்சராக்க வேண்டும், வாழப்- பாடி ராமமூர்த்திக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனை பா.ஜ.க. ஏற்கவில்லை.
இதனால் கோபமான ஜெயலலிதா, ஆட்சிக்கு ஆதரவு, அமைச்சரவையில் சேர மாட்டேன், பதவியேற்புக்கு போக மாட்டேன் என்றார். பின்னர் அமைச்சரவையில் சேர்ந்தார். பதவியேற்பிலும் கலந்து கொண்டார். தம்பிதுரை, சேடப்- பட்டி முத்தையா, ஆர்.கே.குமார் ஆகியோர் அமைச்சர் ஆனார்கள். பதவியேற்புக்குச் சென்ற ஜெயலலிதா, 'தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வலியுறுத்துவோம்' என்று டெல்லியில் பேட்டி கொடுத்தார். அ.தி.மு.க. உறுப்பினர்களை வைத்து நாடாளுமன்றத்தில் இதைச் சொல்ல வைத்தார். “356 ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி எந்த மாநில அரசையும் கலைக்க மாட்டோம்” என்று பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அமைச்சர் சேடப்பட்டி முத்தையா, ஒரு வழக்கில் தொடர்புடையவராக இருந்ததால் அவர் பதவி விலகினார். ‘அமைச்சரவையில் இருக்கும் ஊழல் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்' என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா. அவரை திருப்தி செய்ய பூட்டாசிங்கை நீக்கினார் பிரதமர். ஆனால் ராமகிருஷ்ண ஹெக்டேவை நீக்க மறுத்தார் பிரதமர். “தி.மு.க. ஆட்சியைக் கலைத்தால் பா.ஜ.க. ஆட்சிக்கு தரும் ஆதரவை நான் வாபஸ் பெறுவேன்’ என்று ஹெக்டே அறிவித்தது ஜெயலலிதாவை கோபப்படுத்தியது. ஹெக்டேவை நீக்கியே ஆக வேண்டும் என்றார் ஜெயலலிதா. அவரை சமாதானம் செய்ய டெல்லியில் இருந்து ஜஸ்வந்த்சிங் வந்தார்.
நிதித்துறை இணை அமைச்சராக இருந்த ஆர்.கே.குமார், ஜெயலலிதாவின் வருமானவரி வழக்குகள் அனைத்தையும் விசாரித்த அதிகாரிகள் அனைவரையும் ஒரே நாளில் இடமாற்றம் செய்தார். 89 துணை ஆணையர்கள், 198 உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். சில நாட்களில் தான் சொன்னதை ஆர். கே. குமார் செய்யவில்லை என்று அவரையே ராஜினாமா செய்யச் சொன்னார் ஜெயலலிதா.
தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சொல்லி நாடாளுமன்றத்தில் பிரச்சினை செய்து தினமும் வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க. "தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் ரகசிய உறவு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் கலைஞர் தொடர்பு வைத்திருக்கிறார்” என்று பா.ஜ.க. கூட்டணி அரசில் இருந்து கொண்டே கொக்கரித்தார் ஜெயலலிதா.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த உள்துறை அமைச்சர் அத்வானி, “தி.மு.க. அரசைக் கலைக்க முடியாது” என்று அறிவித்தார். (21.6.1998) "தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத ஒருவர் உள்துறை அமைச்சராக இருப்பதைப் பார்த்து வேதனைப்படுகிறேன்” என்றார் ஜெயலலிதா. தமிழ்நாட்டின் பல இடங்களில் பிரதமர் வாஜ்பாய் கொடும்பாவியை அ.தி.மு.க.வினர் கொளுத்தினார்கள்.
இப்படி பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகிய இருவரது நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.
- தொடரும்