நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. 'நீட்' விலக்கு மசோதாவை நிறைவேற்றிஅனுப்பி இருக்கிறது அரசு. மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நாடாளுமன்றம் - நீதிமன்றம் ஆகிய அனைத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான தனது போராட்டத்தை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க.வின் ‘நீட்' தேர்வு நாடகங்கள் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததுதான்.
‘நீட் தேர்வு வைத்தால் எழுதித்தான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று முதலமைச்சராக இருக்கும் போது சொன்னவர்தான் பழனிசாமி. ‘நீட்' விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புக்கு அனுப்பி விட்டு, அதை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக் கூட ஒன்றரை ஆண்டுகள் வெளியில் சொல்லாமல் வைத்திருந்தவர் அவர்.
“நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்த வரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது” என்று ‘கண்ட்ரோலர் ஆப் எக்ஸாம்' போலச் சொன்னவர்தான் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. இன்று, ‘நீட் எதிர்ப்பாளர் ‘“போல நடித்துக் கொண்டு இருக்கிறார்.
நீட் தேர்வை எதிர்ப்பதாக அ.தி.மு.க. நாடகம் ஆடுவதை அம்பலப்படுத்தும் வகையில், முதலமைச்சர் அவர்கள் மிக எளிமையான ஒரு கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார். “நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய வேண்டும். ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். ‘நீட் தேர்வை நீக்கினால் தான் கூட்டணி சேர்வோம்' என்று சொல்லத்தயாரா?” என்று கேட்டார் முதலமைச்சர் அவர்கள். மிக எளிமையான கேள்வி தான் இது.
ஆனால் பழனிசாமியால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பதில் சொல்ல திராணி இல்லாமல் ‘லபோ திபோ' என்று மீடியாக்கள் முன்னால் கனைக்கிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டிய தகுதியுடன் அவரது சொல்லும் இல்லை. உடலும் இல்லை. பா.ஜ.க.வுடன் பழனிசாமி வைத்த கூட்டணியை அ.தி.மு.க.வினரே ஒப்பவில்லை. அதனால் முழி துங்கிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அதனை திசை திருப்புவதற்காக, ‘நீட் தேர்வைக் கொண்டு வந்ததே தி.மு.க. தான்' என்று தற்குறித்தனமாகப் பாய்கிறார். ஊரில் சிலபேருக்கு எதுவும் தெரியாது, ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி ‘சவடால்' விடுவார்கள். அப்படித்தான் வாய்க்கு வந்ததை அடித்து விடுகிறார் பழனிசாமி. சத்தமாக பேசிவிட்டால் சரியாகப் பேசிவிட்டதாக அர்த்தம் ஆகாது.
2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அது வரை ‘நீட்' தேர்வு வரவில்லை.
2814 ஆம் ஆண்டு வரை ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. அது வரை ‘நீட்' தேர்வு வரவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியோ, தி.மு.க.வோ இதற்கு பொறுப்பேற்க முடியாது. இந்த சிம்பிள் லாஜிக் கூடத் தெரியாத இவரை எப்படி பொதுச் செயலாளராக ஏற்று வைத்திருக்கிறார்கள் அ.தி.மு.க.வில்?
‘நீட்' முதல் தேர்வு 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் வந்தது. அப்போதுஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தது. பா.ஜ.க. மாநிலத்தை ஆண்டது அ.தி.மு.க. இதுவாவது பழனிசாமிக்கு தெரியுமா?
நீட் தேர்வு என்பதே 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. 2016-17ஆம் ஆண்டில் மருத்துவ கல்வி இடங்கள் நீட் தேர்வால் நிரப்பப்படும் என்று அவசர சட்டம் 24.5.2016 அன்றுதான் நிறைவேற்றப்பட்டது. நிரந்- தர சட்டம் 19.7.2016 அன்று நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததால் 2016-17 ஆம் ஆண்டுக்கான தேர்வில் விலக்கு கிடைத்தது. ஆனால் அடுத்துவந்த பழனிசாமி அரசாங்கம் ‘நீட்' தேர்வை தலையாட்டி ஏற்றுக் கொண்டு விட்டது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக ‘நீட்' தேர்வு 2017-18ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் இதே பழனிசாமிதான். இதனை அவருக்கு அருகில் இருக்கும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், உரக்கச் சொல்ல வேண்டும்.
தி.மு.க - காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார் பழனிசாமி. அதிலாவது ஒரு விழுக்காடு உண்மை இருக்குமா என்றால் அதுவும் இல்லை.
மருத்துவத்தில் ஒரு தேர்வு தேவை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் 2018 ஆம் ஆண்டு சொன்னபோது கடுமையான எதிர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே உச்சநீதிமன்றம் இந்தத் தேர்வுக்கு தடை போட்டுவிட்டது. அதனால் இந்த தேர்வு வரவில்லை.
2018 ஆம் ஆண்டு முடக்கப்பட்ட தேர்வுக்கு மறுசீராய்வு மனுவைப் போட்டு உயிரூட்டியது பா.ஜ.க. அரசு. ( 16.3.2016) உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தேர்வுக்கு அனுமதியே தருகிறது. அப்போது காங்கிரசு மத்தியில் ஆட்சியில் இல்லை. மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இல்லை. எனவே பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான் அப்பாவி மாணவர்கள் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள். எனவே பழனிசாமி நீட் தேர்வை எதிர்த்து போராட வேண்டியது அமித்- ஷாவிடம் தானே தவிர தி.மு.க. அரசிடம் அல்ல.
‘நீட்' தேர்வை பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்தபோது, முதலமைச்சராக இருந்த பழனிசாமி எதிர்த்தாரா என்றால் இல்லை. மருத்துவத் துறையை கவனித்து வந்த இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணை - யம் கொண்டு வர 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது மோடி அரசு. தேசிய மருத்துவ ஆணையம் மூலம்தான் ‘நீட்' தகுதி தேர்வும், மருத்துவ மேற்படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வும் நடத்தப்படும். இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேறியது. அதன்பிறகு மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, எதிர்த்துவாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தார் அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன். அதாவது மசோதா நிறைவேற மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. அன்றைக்கு தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அப்படியோரு நாடகத்தை நடத்தச் சொன்னார் பழனிசாமி.
இப்போதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நாடகம் நடத்துகிறார் பழனிசாமி. ‘நீட்' தேர்வை ரத்து செய்யாமல் இருக்கும் பா.ஜ.க. மீதான கோபத்தை மடைமாற்றம் செய்ய பொய் விஷத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.