
2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க-விற்கு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குழுவினரும் -தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க பொருளாளர் எல்.கே.சுதீஷ், "தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலங்களவை வேட்பாளர் யார்? என்பதனை நாளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.








