
முரசொலி தலையங்கம்!
15.08.2026
பொய்யில் புரளும் விஜய் அரசு!
“இரண்டு மாத காலத்தில் அரசின் கருவூலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியைக் கொண்டு வந்துவிட்டோம்” என்று மார்தட்டிச் சொன்னார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.
"15 ஆயிரம் கோடி வந்தால், அது எந்தெந்த வகையில் எல்லாம் வந்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
அதற்கு இந்நாள் நிதி அமைச்சர் மரிய வில்சன் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? “ரூ.15 ஆயிரம் கோடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படுகிறது என்று சொன்னாலே வந்தது தானே?” என்று சொல்லி இருக்கிறார். எவ்வளவு பெரிய பொய்யைச் சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள் என்பது இதன் மூலமாகத் தெரிகிறதா?
தங்கம் தென்னரசு எதிர்க் கேள்வி கேட்காமல் போயிருந்தால், மரிய வில்சன் சொன்னது தான் அனைத்து நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வந்திருக்கும். இத்தகைய பொய்களில் தான் விஜய் அரசு நாட்களை நீட்டித்துக் கொண்டு இருக்கிறது.
ஆயத்தீர்வை மூலமாக ரூ.1500 கோடி வந்துள்ளதாம். மோட்டார் வாகன வரி மூலமாக ரூ.750 கோடி வந்துள்ளதாம். பத்திரப்பதிவு, முத்திரைத் தாள் மூலமாக ரூ.5000 கோடி வரப்போகிறதாம். இதை எல்லாம் வைத்துச் சொன்னாராம். இவை எல்லாம், மரிய வில்சன் கோட்டைக்கு வராமல் வீட்டிலேயே சும்மா இருந்தாலே வரும் வருமானங்கள். மாதம் தோறும் வழக்கமாக அரசாங்கக் கருவூலத்துக்கு வருகிறவை தான் இவை. இதில் த.வெ.க. ஆட்சி அறுத்த அறுப்பு என்ன? அதைச் சொல்லுங்கள்.
‘கடன் வாங்கி விட்டார்கள், கடனை மட்டும் தான் வாங்கினார்கள், 30 விழுக்காட்டை அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள், அதைத் தடுத்தாலே அரசாங்க கஜானாவுக்கு பணம் வந்துவிடும், கடன் வாங்கத் தேவையில்லை' என்று பெரிய பொருளாதார மேதையைப் போல பொது மேடைகளில் தேர்தலுக்கு முன்னால் கனைத்தார் விஜய். இவர் முதலமைச்சராக வந்ததும் என்ன செய்கிறார்? கடன் வாங்குகிறார். கடன் வாங்கப் போகிறார். அதை மட்டும் தான் இந்த இரண்டு மாதமும் செய்துள்ளார்.
அவர் கேட்ட கேள்வியையே அவரைப் பார்த்துக் கேட்போம். 'அவர்கள் எடுத்துச் சென்றதாக நீங்கள் சொல்லும் 30 விழுக்காட்டை அப்படியே விட்டிருந்தால் கூட நீங்கள் கடன் வாங்கத் தேவையில்லையே? அதை மீறி ஏன் கடன் வாங்குகிறீர்கள்?' - இப்படி ஒரு கேள்விக்கு விஜய்யால் என்ன பதில் சொல்ல முடியும். 'அட விடுங்க பாஸ்' என்று வேண்டுமானால் சொல்வார். தங்கம் தென்னரசு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், சிரித்தாரே இன்றைய நிதி அமைச்சர் மரிய வில்சன் அதைப் போல விஜய் சிரிக்கலாம்.
வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விட்டார் விஜய் என்பதை இப்போது தான் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதிகாரம் இல்லாதபோது என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதிகாரத்தில், பொறுப்பில் உட்காரும் போதுதான் உண்மை நிலைமைகள் புரியும்.
‘நிதி நிலைமை மோசமாக உள்ளது, ஏராளமாக கடன் வாங்கி வைத்துவிட்டார்கள்' என்று முந்தைய தி.மு.க. அரசு மீது தொடர்ந்து ஒரு பொய்யை நிதி அமைச்சர் மரிய வில்சன் சொல்லிவந்தார். வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக மிரட்டினார். வெள்ளை அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்ற எல்லாரும் தெரிந்த செய்தி தான் அந்த வெள்ளை அறிக்கையில் இருந்தது.
தான் சொன்ன பொய்யையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. 'மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் கடன் வாங்கிவிட முடியாது. அந்த உச்சவரம்புக்குள் தான் கடன் தொகை உள்ளது' என்று அமைச்சர் மரிய வில்சனே ஊடகங்களின் முன் உண்மையை ஒப்புக் கொண்டார்.
'மாநிலங்களின் கடன் உச்சவரம்பை ஒன்றிய அரசுதான் நிர்ணயிக்கிறது. ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் மாநிலங்களால் எந்தக் கடனும் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவில் தான் தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை' என்று நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், அமைச்சரை அருகில் வைத்துக் கொண்டே சொல்லி விட்டார்.
*கடன் வாங்கி வைத்துவிட்டார்கள்' என்று அமைச்சர் மரிய வில்சன் கட்டமைத்த பொய்யை அவரே உடைத்து விட்டார்.
'முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சமூகநலன் சார்ந்தது தான். அதைக் குறை சொல்லவில்லை. எந்தத் திட்டத்துக்கும் தேவையில்லாமல் நிதி செலவிடப் பட்டதாகக் கண்டறியவில்லை' என்றும் அமைச்சர் மரிய வில்சன் அப்போது ஒப்புக் கொண்டார். அவர்கள் கட்டமைத்த பொய்யை அவர்களே உடைத்தும் விட்டார்கள்.
"பொய்யுடை ஒருவன்
சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே"
– என்பது அதிவீரராம பாண்டியர் ( வெற்றிவேற்கை) எழுதிய வரிகள் ஆகும். பேசும் ஆற்றல் கொண்டவர், தனது பேச்சால் பொய்யை உண்மை என்பதைப் போல எடுத்துச் சொல்லி விடுவார் என்பது இதன் பொருள்.
விஜய் தனது வெத்து வசனங்கள் மூலமாக கட்டமைத்தது அனைத்தும் பொய்கள் மட்டுமே என்பது நாளுக்கு நாள் வெளிச்சத்துக்கு வருகிறது. அதனால் அவரும் அசிங்கப்பட்டு நிற்கிறார்.






