முரசொலி தலையங்கம்

“ஆளுநர் பதவியை அக்குவேறு ஆணி வேறாகக் கழட்டி, ஆராய்ச்சி செய்யும் உச்சநீதிமன்றம்” : ‘முரசொலி’ தலையங்கம்!

அரசியலமைப்புச் சட்டம் பகுதி 6இன் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பில் இருக்கும்போது அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்றி ஆளுநரால் எந்த முடிவும் எடுக்க முடியாது.

“ஆளுநர் பதவியை அக்குவேறு  ஆணி வேறாகக் கழட்டி, ஆராய்ச்சி செய்யும் உச்சநீதிமன்றம்” : ‘முரசொலி’ தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பேரறிவாளன் வழக்கானது அவரது விடுதலை எல்லைகளைத் தாண்டி ஆளுநர்களின் பதவியையே கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை என்பது, ஆளுநர் பதவியை அக்குவேறு ஆணி வேறாகக் கழட்டி, பிரித்துப் போட்டு ஆராய்ச்சி செய்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் நடந்த விசாரணையின் போதே, ஆளுநரின் அதிகாரம், மாநிலத்தின் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வானது தெளிவுபடுத்தியது.

தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு ஆளுநர் அனுமதி தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதை அப்போதே நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தார்கள். “தானே முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறானது. இது இந்த நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு எதிரான மிக மோசமான முன்னுதாரணமாக அமைகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள்.

“அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் குடியரசுத் தலைவரிடம் கருத்துக் கேட்பாரா ஆளுநர்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். “அரசியல் சட்டம் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அப்படி இருந்தால் அது குறித்து குடியரசுத் தலைவரிடம் கேட்கலாம். இந்தத் தீர்மானம் அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்புடையது அல்ல. 161ஆவது விதிப்படி மாநில அரசின் தீர்மானம் இது. இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டியது மட்டும் தான் ஆளுநரின் கடமை” என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரும் அப்போது தெளிவுபடுத்தினார்.

“ஆளுநரின் நிலைப்பாடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. விடுதலை செய்யும் தீர்மானம் என்பது, ஆளுநரின் முடிவு அல்ல, அது ஒரு அரசாங்கத்தின் முடிவு; அமைச்சரவையின் முடிவு. அந்த முடிவுக்கு எதிராக முடிவெடுக்க ஆளுநருக்குத் தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை” என்பதை ஆணித்தரமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதாவது, மாநில அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டது தான் ஆளுநர் பதவி என்பதை ஏப்ரல் 27ஆம் நாளே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் - மே 11 அன்று மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் சிக்கியவர் ஆளுநர்தான். ‘மாநிலத்தின் அமைச்சரவை கூடி விடுவிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அதற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் வைத்திருக்க உரிமை இருக்கிறதா, இல்லையா’ என்ற கேள்வியைப் போட்டு - இல்லை என்பதைத் தெளிவாக்கி இருக்கிறது உச்சநீதிமன்றம்.

‘அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எந்த அடிப்படையில் அனுப்பி வைத்தார்?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். ‘ஒரு சிக்கலான சூழலில் அனுப்பி வைக்க உரிமை உள்ளது' என்றார் ஒன்றிய அரசின் வழக்கறிஞர். ‘எந்த விதியின் அடிப்படையில் அனுப்பி வைத்தார் ஆளுநர்? அப்படியானால் இந்த முடிவை எடுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

‘கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் உள்ளதா? சி.ஆர்.பி.சி. சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கி உள்ளதா?' என்று நீதிபதிகள் கேட்டார்கள். ‘இல்லை' என்றார் ஒன்றிய அரசின் வழக்கறிஞர். ‘உங்கள் வாதங்களை ஏற்றால் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று பொருள் ஆகிறது' என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தார்கள்.

“அமைச்சரவையின் முடிவுகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்குக் கட்டுப்பட்டவர்தான் ஆளுநர்” என்பதை நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது, மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே ஆளுநர் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்கள் குறித்து அதிகம் பேசுகிறது. அரசியலமைப்புச் சட்டம் பகுதி 6இன் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பில் இருக்கும்போது அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்றி ஆளுநரால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அமைச்சரவைக் குழுவின் அறிவுரைப் படியே செயல்பட வேண்டும் என்ற விதி எல்லா அதிகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.

மாநில அரசாங்கம் இயற்றும் சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இருக்கிறது. ஒரு சட்டமுன்வடிவை ஏற்காமல் மாநில அரசுக்குத் திருப்பியும் அனுப்பலாம். அதே சட்டமுன் வடிவை மீண்டும் நிறைவேற்றி மாநில அரசு அனுப்பினால், அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இறுதி அதிகாரம் என்பது மாநில அரசே!

இந்தச் சட்டமுன் வடிவுகள் மீது முடிவெடுக்க காலக்கெடு எதுவும் இல்லை. அந்த ஒன்றை மட்டும் வைத்து, ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் போக்கு உள்ளது. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றம் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. பேரறிவாளன் வழக்கு ஆளுநர்களின் அதிகாரமின்மையை உணர்த்துவதற்கும் உதவி செய்து வருகிறது.

banner

Related Stories

Related Stories