முரசொலி தலையங்கம்

தேசத்துரோக வழக்கு: மக்களின் குரலாய் ஒலித்த உச்ச நீதிமன்றம்.. முரசொலி ஏடு தலையங்கம்!

ஒரு அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது எப்படி தேசத் துரோகம் ஆகும்? - இதுதான் மனித உரிமையாளர்கள் கேட்டு வந்த கேள்வி. அதனை உச்ச நீதிமன்றமே கேட்டதுதான் உச்சம்!

தேசத்துரோக வழக்கு: மக்களின் குரலாய் ஒலித்த உச்ச நீதிமன்றம்.. முரசொலி ஏடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

’சட்டத்துக்குத் தடை விதித்த நீதிமன்றம்’ என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தேசத்துரோக வழக்கு குறித்து தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில், “ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது சாதனைகளில் ஒன்றாக ஒன்றைச் சொல்கிறது. "காலாவதியாகிப்போன சட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டோம்" என்று சொல்லி வருகிறது.

பிரதமர் மோடி அவர்கள், "காலாவதியான சட்டங்கள் மூலம் புதிய நூற்றாண்டைக் கட்டமைக்க முடியாது" என்றும் பேசி இருக்கிறார். "புதுப்புது வசதிகளையும் அமைப்பு முறைகளையும் ஏற்படுத்த சீர்திருத்தங்கள் அவசியம். சென்ற நூற்றாண்டில் பயன்மிக்கதாக இருந்த சட்டங்கள் அடுத்த நூற்றாண்டில் சுமையாக மாறி விடுகின்றன" என்று பேசினார். பேசியதைப் போலவே பல்வேறு சட்டங்களை நீக்கவும் உத்தரவிட்டார். 295 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இப்படி எண்ணற்ற சட்டங்களை அகற்றியதைச் சாதனையாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. ஆனால் அவர்கள் ஆட்சியில் தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிக முக்கியச் சட்டப்பிரிவு - 124ஏ மிகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டும் வந்து கொண்டு இருந்தது. இதனை முழுமையாக ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் தேசத்துரோகச் சட்டத்துக்கு மிகப்பெரிய பூட்டைப் போட்டு இருக்கிறது.

* தேசத் துரோகச் சட்டத்தில் உள்ள சில கடுமையான பிரிவுகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இல்லை, அவை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசும் சொல்கிறது. எனவே, அந்த சட்டம் மறு ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

* 124 ஏ சட்டப்பிரிவு மறு ஆய்வு செய்யப்படும் வரை தேசத்துரோக சட்டப் பிரிவின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணையைத் தொடரவும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

* 124 ஏ சட்டப்பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகள், மேல்முறையீடுகள் மற்றும் வழக்குகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

* குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்தவிதமான பாரபட்சமும் ஏற்படாது என்று நீதிமன்றங்கள் கருதினால், பிற பிரிவுகள் தொடர்பான வழக்கு விசாரணையைத் தொடரலாம்.

- இதுதான் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவாகும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

முன்னதாக ஒன்றிய அரசின் கருத்தை நீதிபதிகள் கேட்டார்கள். 124 ஏ - சட்டப் பிரிவை ஆதரித்து ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கருத்துக் கூறினார். இந்த சட்டத்தை நீக்கக்கூடாது, தேவைப்பட்டால் இந்த சட்டப்பிரிவின் கீழ் பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளை பரிசீலிக்கலாம், இது போன்ற வழக்குகளில் ஜாமீன் விசாரணையை விரைவுபடுத்தலாம் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். இவற்றை நீதிபதிகள் ஏற்கவில்லை. தேசத் துரோகச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார்கள்.

"அரசின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் ஒருமைப்பாடு - குடிமக்களின் சிவில் உரிமைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு இரண்டையும் சமப்படுத்தும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம்" - என்று நீதிபதிகள் சொன்னது உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது.

நாடு பாதுகாக்கப்பட வேண்டும், நாட்டுக்கு எதிராக சதி செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக, ஒரு சட்டத்தை வைத்து அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுவது சரியா, முறையா என்பதுதான் கேள்வி. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள். "சட்டத்தில் நல்ல சட்டம், கெட்ட சட்டம் என்று எதுவும் கிடையாது, எந்தச் சட்டத்தையும் யார் பயன்படுத்துகிறார்கள், எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த சட்டத்தின் தன்மை மாறுகிறது" என்றார். அந்த அடிப்படையில் தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.

1870 ஆம் ஆண்டு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் அரசு - தனது ஆட்சிக்கு எதிரானவர்களை நசுக்குவதற்காக இந்த தேசத்துரோகச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அவர்கள் நாட்டிலேயே 2009ஆம் ஆண்டு இத்தகைய சட்டத்தை நீக்கி விட்டார்கள். அவர்களே 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் கொண்டு வந்தபோது இத்தகைய பிரிவு இல்லை. பத்தாண்டுகள் கழித்துதான் சேர்த்தார்கள். அரசுக்கு எதிராகப் பேசுவது, எழுதுவது, அரசை அவமதிக்கும் விதத்தில் நடப்பது, அப்படி நடப்பவர்களை ஊக்குவிப்பது, கிளர்ச்சி செய்வது தேசத் துரோகமாகக் கருதப்படுகிறது. இந்தியர்களை அடக்குவதற்காகத் தான் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்று காந்தியடிகள் எழுதினார். எதிர்ப்புத் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் மீதுதான் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ‘பங்கோபாஸி’ ஆசிரியர் ஜோகேந்திர சந்திரபோஸ், ‘கேசரி’ ஆசிரியர் பாலகங்காதர திலகர் என்று பயன்படுத்தப்பட்டது. மூன்று முறை இந்த சட்டத்தின் கீழ் திலகர் கைதானார். 18 மாதங்கள் சிறையில் இருந்தார். 1922 ஆம் ஆண்டு காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிக்கை மீதும் இந்த சட்டம் பாய்ந்தது. இந்த தேசத்துரோக வழக்கில்தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கைதாகி சிறையில் வைக்கப்பட்டார். அந்த வகையில் அரசியல் உள்நோக்கத்துக்காகவே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது பிரிட்டிஷ் ஆட்சியர்களால்!

பா.ஜ.க. ஆட்சியிலும் அவர்களது கட்சிக்கு எதிரான சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். பிரதமரைக் கொலை செய்ய சதி செய்ததாக மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடது சாரி சிந்தனையாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன் சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் 10 ஆயிரம் பழங்குடியினர் மீது இந்த வழக்கு பாய்ச்சப்பட்டது. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடியதற்காக அவர்கள் மீது இந்த வழக்கு போடப்பட்டது. 2014 முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் 179 பேர் மீது இந்த வழக்கு போடப்பட்ட தாகவும் இதில் 70 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய 9 ஆயிரம் பேர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது.

நாட்டைக் காட்டிக் கொடுப்பது, சதி செய்வது, அந்நிய நாட்டுக்கு தகவல் சொல்வது தேசத் துரோகமாகக் கருதப்படலாம். ஆனால் ஒரு அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது எப்படி தேசத் துரோகம் ஆகும்? - இதுதான் மனித உரிமையாளர்கள் கேட்டு வந்த கேள்வி. அதனை உச்ச நீதிமன்றமே கேட்டதுதான் உச்சம்!” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories